அரசியலுக்கு விடை கொடுக்கிறார் பாலித தெவரப்பெரும!
அனைத்து மக்களாலும் ஒரு சிறந்த மனிதநேயம் மிக்க அரசியல் வாதியாக கொண்டாடப்பட்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் பாலித தெவரப்பெரும பொதுத் தேர்தல் போட்டியில் இருந்து விலகி அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொலிஸார் உள்ளிட்ட சில தரப்பினரின் இடையூறுகள் காரணமாக தனது மனைவி, மகனின் பாதுகாப்பு கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது மறைந்த மகனின் நினைவு தினத்திற்கு தானம் ஏற்பாடு செய்து வைக்கப்பட்டிருந்து காட்சி பலகையை பொலிஸார் அகற்றியுள்ளதாகவும் அதன்போது தனது மனைவியை பொலிஸார் கீழே தள்ளியதால் அவர் சுகயீனமுற்று தற்போது நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெவரப்பெரும தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய பிரிவில் இருந்து தனக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும் கூறினார்.
அதனால் தனது மனைவி மற்றும் மகனுக்காக அரசியலில் இருந்து விலகவும் தேர்தல் போட்டியில் இருந்து விலகவும் தீர்மானித்துள்ளதாகவும் இதுகுறித்து ஐக்கிய தேசிய கட்சியின் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் பாலித தெவரப்பெரும தெரிவித்தார்.