சிறுபோக நெல் கொள்வனவு நிர்ணய விலை திறைசேரியால் அறிவிப்பு!
ஓரு கிலோ கிராமிற்கு 50 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் 2020 சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியினால் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 சிறுபோகத்தில் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 50 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் கொள்வனவு செய்யும் பணியை தற்பொழுது ஆரம்பித்துள்ளது.
கடந்த வருடங்களில் நாட்டரிசி நெல் கிலோ கிராம் ஒன்று 38 ரூபா மற்றும் சம்பா நெல் கிலோ 41 ரூபா என்ற அடிப்படையிலும் கொள்வனவு செய்யப்பட்டதுடன் ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்புவதற்கான சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக, புதிய அரசாங்கத்தினால் 2019 /2020 சிறுபோகத்தில் அனைத்து நெல் வகைகளுக்கும் ஆகக்கூடிய விலையை வழங்கி ஒரு கிலோ கிராம் நெல் 50 ரூபா வீதம் கொள்வனவு செய்யப்படுகின்றது.
இதற்கு அமைவாக இம்முறை சிறுபோகத்திலும் விவசாயிகளின் நெல் அறுவடைக்காக ஆகக்கூடிய விலை ஒன்று வழங்கப்படுவதை உறுதி செய்து ஒரு கிலோ கிராம் நெல் 50 ரூபா என்ற உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தும் சபை கொண்டுள்ள நாடு முழுவதிலும் அமைந்துள்ள அனைத்து களஞ்சியசாலைகளும் தற்பொழுது திறக்கப்பட்டுள்ளன.
தாமதமின்றி விவசாயிகளிடம் இருந்து மொத்த நெல் அறுவடையை அரசாங்கம் உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி தற்பொழுது திறைசேரியினால் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம்