சட்டமா அதிபரின் தீர்மானத்தை விமர்சனம் செய்ய ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை!
அரசியல் பழி வாங்கல் தொடர்பில் ஆராயவென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி அளிக்க சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளை அனுப்ப முடியாது என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா எழுத்து மூலம் தெரிய படுத்தியுள்ளார்.
எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி முன்வைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு சாட்சியளிக்க வருமாறு அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டாரவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில் சட்டமா அதிபர் குறித்த கடிதத்தை அனுப்பி உள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்புச் செயலாளர் நிராசா ஜெயரட்ன தெரிவித்துள்ளார்.
அரசியல் பழி வாங்கல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு சட்டமா அதிபரின் தீர்மானங்களை விமர்சிப்பதற்கு சட்ட ரீதியான அதிகாரம் பெற்ற நீதிமன்றம் அல்ல எனவும் நீதிமன்றத்தில் குற்றவியல் விசாரணைகளில் பங்கெடுத்துள்ள சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளை ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பதன் மூலம் சட்டமா அதிபரின் யாப்பு ரீதியான அதிகார செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலை தோன்றுமென குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் அவர்களால் அரசியல் பழி வாங்கப்பட்டதாகக் கூறப்படும் அரச அதிகாரிகள், அரச நிறுவனங்களின் அதிகாரிகள், முப்படையினர் அல்லது பொலீசார் தொடர்பில் மாத்திரமே விசாரணைகள் நடத்த முடியும் எனவும் எனவே முறைப்பாடு செய்துள்ள நிஷங்க சேனாதிபதி மேற்கூறிய எந்த பதவி நிலைகளிலும் இல்லாதவர் எனவும் அதனால் குறித்த நபருக்கு இந்த ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய சட்டரீதியான அதிகாரங்கள் இல்லை எனவும் சட்டமா அதிபரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.