மாவையின் முதலைக் கண்ணீர்!
"கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்' என்பர். அதையே "குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடுவது...' என்றும் கூறுவர்.
உரிய வேளையில் செய்ய வேண்டியதைச் செய்யத் தவறி விட்டு அதைப் பற்றிக் கவலைப்பட்டு அர்த்தமில்லை. தமிழர்களின் இப்போதைய நிலைமை தொடர்பில் இலங் கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா படும் கவலையை நோக்கும்போது இந்தப் பழமொழிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
"தமிழர் ஐக்கியம்' தொடர்பில் படித்துப் படித்துக் கூறிய போதெல்லாம் உதாசீனம் காட்டி, விட்டேத்தியாக நடந்து, பொறுப்பின்றிச் செயற்பட்டவர் இப்போது "பகவத்கீதை' உப தேசிப்பது போல தத்துவம் பேச முயல்கின்றார்.
"துரதிஷ்டவசமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருக்கின்றமை எனக்கு மிகுந்த கவலை. தேர்தல் முடிந்த பின்னர் அவர்களையும் இணைத்து இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்'' என்று அவர் கூறியிருக்கின்றமை வேடிக்கைக் குரியது.
வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் எல்லோரையும் தூக்கி எறிந்து நடந்து, பொறுப்புடைய தலைமைக்குரிய கடமையைச் செய்யாமல், தமிழர் தரப்பை பல அணிகளாக சிதறுண்டு போகச் செய்து விட்டு, இப்போது அவர் முதலைக் கண்ணீர் - நீலிக் கண்ணீர் - வடிப்பது அர்த்தமற்றது.
காலங்காலமாக தாங்கள் மட்டுமே நாடாளுமன்றக் கதி ரையைச் சூடேற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்தத் தேர்தல் வரைத் திட்டமிட்டுப் பலரையும் ஒதுக்கி, வெட்டி, வெளியேற்றி, புறம்தள்ளி, காரியமாற்றி விட்டு, இனித் தேர்தலில் கூட்டமைப்புப் பட்டியலில் தங்களுக்குப் போட்டியாக அவர்கள் வரமாட்டார்கள் என்று தெரிந்தும் ஒற்றுமை பற்றி நடிக்கத் தொடங்கியிருக்கின்றார் மாவையார்.
1989 இல் அமர்தலிங்கமும், 1999 இல் நீலன் திருச்செல் வமும் கொல்லப்பட்டபோது அந்த இடங்களுக்குப் போட்டியிட்டு தேசியப் பட்டியல் எம்.பி.பதவியைப் பெற்று நாடாளுமன்றுக்குப் போனவர் அவர். அதற்குப் பின்னர் 2000, 2001, 2004, 2010,2015 என்று ஐந்து தடவைகள் தொடர்ச்சியாகப் பதவியில் நீடிப்பவர். மொத்தம் ஏழு தடவைகள் எம்.பியாக இருந்தவர்.
இப்போது எட்டாவது தடவையும் எம்.பியாகிக் கொண்டு இதுவரை வெளியியில் விட்டவர்களை இனிமேல்தான் அரவணைக்கப் போகின்றாராம். யாரின் காதில் பூச்சுற்றுகின்றார்? யாரின் தலையில் மாவரைக்க விரும்புகின்றார்?
தகுதியும், திறமையும், இன விசுவாசமும், நேர்மையும் கொண்ட பலரை வெட்டி ஒதுக்கி, தமிழரசு மீது இளம் தலை முறைக்கு எரிச்சல் வரச் செய்தவரே அவர்தான். இப்போது தேர்தல் நெருக்கடி சமயத்தில் வழமைபோல "ஐக்கியம் முக்கி யம்', "எல்லோரையும் அரவணைப்போம்' என்று வேதம் ஓது கின்றார்.
"துரதிஷ்டவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியுள்ளனர். அது எனக்கு மிகுந்த கவலை'' என்ற அவரது கூற்று உண்மையானால், அந்த துரதிஷ்டம் பெரும்பாலும் அவரால்தான் நேர்ந்தது என்பதையும், அவர் மீதுதான் அவர் கவலை கொள்ள வேண்டும் என்பதையும் வெளிப்படையாகவே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எம்.பி. பதவி மாத்திரமல்ல, கட்சித் தலைமைப் பதவியைக் கூட தன்னுடைய நிரந்தர ஆசனமாகக் கருதாமல்தான் கட்சியை வளர்த்தார் தந்தை செல்வா.
ஆனால் எம்.பி.பதவியிலும், தலைமைக் கதிரையிலும் நிரந்தரமாக ஆணி அடித்தமை போல அமர்ந்து கொண்டு அவற் றைத் தக்க வைப்பதே பிரதான பிழைப்பு என்ற சிந்தனையில் காய்களை நகர்த்தியபடி, இலங்கைத் தமிழரசையும், தமிழ்க் கூட்டமைப்பையும் ஜனநாயக முறைப்படி இயங்கும் கட்டமைப் புகளாக மாற்றாமல், செம்பு காவிகளினதும், அடிவருடிகளின தும், வயோதிபக் கூட்டத்தினதும் மடங்களாக மாற்றியவாறுஅதன் காரணமாக, திறமையுள்ள பலரையும் பல தரப்புக்க ளைம் அரவணைக்காமல் வெளியேற வைத்து, கூட்டமைப்பின் பலத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டு - இப்போது அவர் நீலிக்கண்ணீர் வடிப்பது தேர்தல் வாக்கு களை இலக்குவைத்த குறுக்குப் புத்திப்போக்கின்றி வேறில்லை.
நாளைக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், முதலமைச்சர் பதவிக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு வரும் ஏதோ ஜந்து போல போட்டிக்கு வரும் நிலையில் இருப் பவர், கூட்டமைப்பிலிருந்து பலரும் வெளியேறியமை பற்றி அரற்றுவது லாயக்கற்ற நடிப்பு.
தமது பதவி ஆசையையும் அதையயாட்டி வரும் பிற சலுகை களையும் நாடி ஓடுவதை அவர் தள்ளி வைத்துவிட்டு, கட்சியின் நடுநிலைத் தலைவராக அவர் செயற்பட்டாலே போதும், கூட்ட மைப்பு வலுப்பெறுவதற்கு அது அடி அத்திபாரமாகி விடும்.
அவரும் அதைச் செய்யப் போவதில்லை. தமிழரும் வேறு தகுதியான மாற்று வழியில்லை என்பதால் கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் விடப்போவதுமில்லை. ஆக, பதவிப் பித்துப் பிடித்த அவரின் நடிப்புப் படலம் நன்றாகவே செல்லுபடியாகும். அது தமிழரின் தலைவிதி. அவ்வளவுதான்.
நமது பார்வை - காலைக்கதிர் (25.06.2020)