கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கென ரூ.28 பில்லியன் கடன்!
கொவிட் -19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 13,861 வியாபாரங்களுக்கென ரூ.28 பில்லியன் தொகையுடைய கடன்களை வழங்குவதற்கு மத்திய வங்கி ஒப்புதலளித்துள்ளது.
கொவிட்-19 நோய்த் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு புத்துயிரளிக்கும் அவசிய தேவையினையும் அதனூடாக நாட்டில் பொருளாதார நடவடிக்கையினை ஊக்குவிப்பதையும் இனங்கண்டு மத்திய வங்கியும் இலங்கை அரசாங்கமும் 2020 மாச்சு 24ஆம் திகதியன்று அறிவிக்கப்பட்டவாறு சௌபாக்கியா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதி என்ற பெயரில் சௌபாக்கியா (சுபீட்சம்) கடன் திட்டத்தின் கீழ் புதிய மீள்நிதியிடல் கடன் வசதியொன்றினைத் தொடங்கியுள்ளன.
மத்திய வங்கியானது இத்திட்டத்தின் கட்டம் I இன் கீழ் 13,861 கடன் விண்ணப்பங்களுக்கென ரூ.27.9 பில்லியன் தொகைக்கு ஒப்புதலளித்துள்ளது. இதில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் 2020 யூன் 24 வரை நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 7,274 வியாபாரங்கள் மத்தியில் ரூ.14.8 பில்லியனை ஏற்கனவே பகிர்ந்தளித்துள்ளன.
இக்கடன்கள் 6 மாத சலுகைக் காலத்துடனும் 24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலத்துடனும் கூடிய 4 சதவீத (ஆண்டுக்கு) சலுகை வட்டி வீதத்தினைக் கொண்டவையாகும்.
மேலும், திட்டத்தின் கட்டம் II கீழ் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு 4 சதவீத (ஆண்டுக்கு) சலுகை வீதத்தில் மீள்;கடன் வழங்குவதற்கு வர்த்தக வங்கிகளுக்கு 1 சதவீத (ஆண்டுக்கு) சலுகை வீதத்தில் மேலும் ரூ.120 பில்லியனை வழங்குவதற்கு தற்போது மத்திய வங்கி ஆயத்தமாகவுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)