நியூசிலாந்து தேர்தலில் களமிறங்கும் ஈழத்து தமிழ்ப்பெண் !
ஈழத் தீவில் புகழ்பெற்ற அரசியல் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த வனுஷி வோல்ட்டேர்ஸ் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி நியூசிலாந்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார்.
இவரை வேட்பாளராகக் களமிறக்குவதற்கான அங்கீகாரத்தை தொழிற்கட்சி வழங்கியுள்ளது.
ஆக்லான்டில் போட்டியிடவுள்ள இவர், தேர்தலில் தெரிவு செய்யப்பட்டால் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையில் பிறந்த முதலாவது உறுப்பினர் என்ற பெருமையைப் பெறுவார்.
வனுஷி நியூசிலாந்து அரசாங்கத்திலும், சர்வதேச ரீதியாகவும் பல்வேறு பொறுப்புவாய்ந்த உயர் பதவிகளை வகித்ததன் மூலம் பரந்த நிபுணத்துவ அறிவையும், அனுபவத்தையும் கொண்டவர். சட்டத்துறையிலும், இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் பலவற்றிலும் முக்கியமான பதவிகளையும் வகித்திருக்கின்றார்.
தற்போது நியூசிலாந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒரு சிரேஷ்ட முகாமையாளராகவும் பதவிவகிக்கும் அவர், சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வனுஷியின் தந்தை வழிவந்த பாட்டி லூசியா சரவணமுத்து இலங்கையின் அரசுப் பேரவையின் உறுப்பினராக கொழும்பு வடக்கு தொகுதியிலிருந்து 1931 இல் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவரது கணவரான சேர் ரட்ணசோதி சரவணமுத்து கொழும்பு மாநகர சபையின் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது பெயரிலேயே சரவணமுத்து ஸ்ரேடியம் அமைக்கப்பட்டது.
புகழ்பெற்ற சரவணமுத்துவின் அரசியல் குடும்பத்தில் வந்த வனுஷி, ஐந்து வயதாக இருக்கும் போதே அவரது தந்தை காலஞ்சென்ற ஜனா இராஜநாயகம், தாயார் பவித்திரா ஆகியோருடன் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார்.
வோல்ட்டேர்ஸ் என்பவரைத் திருமணம் செய்த வனுஷிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள்.
செப்டம்பர் 19 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்றால் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஈழத்தில் பிறந்த முதலாவது உறுப்பினர் என்ற பெருமையை இவர் பெற்றுக்கொள்வார்.