Breaking News

தாய் பாலின் மூலம் கொரோன வைரஸ் தொற்று பரவாது - உலக சுகாதார நிறுவனம்

கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் என்றும் அதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டதாகவும், பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதே சிறந்த வழி என்றும் அவர் குறிப்பிட்டார்.

"கொரோனா வைரஸ் தொற்றால் குழந்தைகளைவிட பெரியவர்களுக்கு ஆபத்து அதிகம் என்பது தெரியும். ஆனால், கொரோனா அல்லாமல் மற்ற நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குழந்தைகளுக்கு இருக்கிறது. அப்படி வேறு ஏதும் நோய் ஏற்படாமல் இருக்க தாய்ப்பால் கொடுப்பது மிக அவசியம்" என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் தற்போது நடத்தப்பட்ட ஆய்வுகளில், வைரஸ் தொற்று ஏற்படும் அபாயத்தை தடுக்க தாய்ப்பால் உதவும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

"தாய்ப்பாலில் இருந்து வைரஸ் பரவுவதற்கான தடயங்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை" என்று உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ விவகாரங்களுக்கான ஆலோசகர் மருத்துவர் அன்ஷூ பேனர்ஜி கூறியுள்ளார்.