சாத்தான்குளம்: “அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்” - நடிகர் சூர்யா
சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா, அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை - மகன் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இது சமூகத்தை அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பரவலான போராட்டங்கள் நடந்து வரும் சூழலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், நடிகர்கள் ஜீவா, ஜெயம் ரவி, பாடகி சுசித்ரா என சமூகத்தில் பல தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்
.
இந்த சூழலில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்! மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்குக்கூட மரண தண்டனைகூடாது' என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.’’
சாத்தான்குளம் காவல் நிலையத்தில், இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்துமளவிற்கு நிகழ்ந்த போலிஸாரின் 'லாக்கப் அத்துமீறல்' காவல் துறையின் மாண்பைக் குறைக்கும் செயல். 'இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம்'என்று கடந்து செல்ல முடியாது.
போலீஸாரால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்தை ஜெயராஜ், மகன் ஃபென்னிக்ஸ் இருவரையும் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து, 'நலமாக இருப்பதாக' சான்று அளித்திருக்கிறார்.
நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட், பாதிக்கப்பட்டவர்களின் நிலையைப் பரிசோதிக்காமல்,'இயந்திர கதியில்' சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சிறையில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளும் முறையாக நடக்கவில்லை.
இத்தகைய 'கடமை மீறல்' செயல்கள், ஒரு குடிமகனின் உரிமையில் நம்'அதிகார அமைப்புகள்' காட்டும் அலட்சியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அதனால் இதுபோன்ற 'துயர மரணங்கள்' ஒரு வகையான"திட்டமிடப்பட்ட குற்றமாக' (organised crime) நடக்கிறது.’’ என கூறியுள்ளார்.
இனிமேலும் இதுபோன்ற 'அதிகார வன்முறைகள்' காவல்துறையில் நிகழாமல் தடுக்க, தேவையான மாற்றங்களை, சீர்திருத்தங்களை அரசும், நீதிமன்றமும், பொறுப்பு மிக்க காவல் அதிகாரிகளும் ஒருங்கிணைந்துமேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
குற்றம் இழைத்தவர்களும், அதற்கு துணை போனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு 'நீதி நிலைநிறுத்தப்படும்' என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்.” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய ஏனைய செய்தி :