வனிதா-பீட்டர் பால் திருமணம்: கிறிஸ்தவ முறைப்படி கரம்பிடித்தனர்!
பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் தான் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொள்வதாக சமீபத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவித்திருந்தார். நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா தனது குடும்பத்தினருடன் சண்டை காரணமாக, தன் மகள்களுடன் தனியாக தான் வசித்து வருகிறார். இதற்கு முன்பு இரண்டு திருமணங்கள் அவருக்கு நடந்துள்ள நிலையில் அவர் அதில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோக்களை பதிவிட துவங்கினார். கொரோனா வைரஸ் பரவிய நேரத்தில் அரசு ஊரடங்கு பிறப்பித்ததால் தன்னுடைய சேனலில் வீடியோக்கள் பதிவிட முடியாமல் திணறிய போது வந்து உதவிய இயக்குனர் பீட்டர் பாலுடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது. அவர்களது திருமணத்திற்கு வனிதாவின் இரண்டு மகள்களும் ஒப்புதல் அளித்து விட்டதால் இன்று அவர்கள் கிறிஸ்தவ முறைப்படி வீட்டிலேயே நடந்த திருமணத்தில் கைகோர்த்துள்ளனர்.
இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.
வனிதா இந்த திருமணம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து தன்னுடைய அம்மாவை பற்றி மிகவும் உருக்கமாக பேசி வருகிறார். ஜூன் 27ம் தேதி திருமணம் செய்து கொள்ள ஏன் முடிவெடுத்தார் என்ற காரணத்தை இதற்கு முன்பு அவர் தெரிவித்திருந்தார். அவரது அம்மா மஞ்சுளா மற்றும் அப்பா விஜயகுமார் திருமண நாள் தான் ஜூன் 27. அதே நாளில் தானும் திருமணம் செய்து கொண்டால் அவரது ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற ஒரு நோக்கத்தில் தான் இதை செய்வதாக வனிதா தெரிவித்திருந்தார்.
வனிதாவின் திருமண நிகழ்ச்சியில் மிகவும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. கிறிஸ்தவ முறைப்படி திருமணத்திற்கு பிறகு வனிதாவை முத்தமிட்டு பீட்டர் பால் மனைவியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதற்கு சில தினங்களுக்கு முன்பு வனிதா மற்றும் பீட்டர் பால் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்த இருவரும் தங்கள் கைகளில் பெயர்களை பச்சை குத்திக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதுவும் இணையத்தில் அதிகம் வைரலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.