இறக்குமதியை மட்டுப்படுத்தி உற்பத்தியை ஆரம்பியுங்கள் - ஜனாதிபதி
நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளதால் பல துறைகளில் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் மக்கள்மயப்பட்ட பொருளாதாரத்திற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையை வெற்றிகொள்வது தொழிலதிபர்களுக்குள்ள தற்போதைய சவாலாகுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக முயற்சிகளின் அபிவிருத்திக்கான அனைத்து அமைச்சுக்களையும் ஒன்றிணைத்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள செயலணி மற்றும் பல்துறைசார் தொழிலதிபர்களுடன் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்வாறு தெரிவித்தார்.
மக்களின் நுகர்வுத் தேவையை பூரணப்படுத்தல், புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குவதுடன், நாட்டிற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தல் போன்ற வர்த்தகர்களினால் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களினதும் மற்றும் வழங்கப்படும் அனைத்து சேவைகளினதும் தரத்தை உயர் மட்டத்தில் பேணுவதற்கும் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் முயற்சி எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கைத்தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க அனைத்து அரச நிறுவனங்களும் ஒன்றுபட்டுள்ளன. தனி இலக்க வட்டி வீதத்திற்கு வங்கி கடன் வழங்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒருசில மாதங்களுக்குள் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தும்புத்தடி, ஈர்க்கில்மாறு தொடக்கம் மருந்து வில்லை வரை உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கச் செய்து பெறுபேற்றைக் காண்பிப்பது தொழிலதிபர்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கும் விடயம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்கான ஆலோசனைகளை வழங்கி, விவசாய பொருட்களை இறக்குமதி செய்வது அரசாங்கத்தின் கொள்கையாகாது. உறுதியான கொள்கையுடன் இருந்து அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதால் தொழிலதிபர்களைப் போன்று விவசாயிகளுக்கும் பொருட்களுக்கான கேள்வியை அடையாளம் கண்டு செயற்படுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மோட்டார் வாகன உற்பத்திகளை ஒன்றிணைக்கும் கைத்தொழிலாளர்கள், மோட்டார் வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்களின் சங்கம், பொதியிடல் உற்பத்தியாளர் சங்கம், மின் கம்பி உற்பத்தியாளர்கள், படகு உற்பத்தியாளர்கள் சங்கம், இரும்பு தொழிற்சாலையாளர்கள், தோல் பொருள் உற்பத்தியாளர்களின் ஆலோசனைக்குழு, இறப்பர் தயாரிப்பு உற்பத்தியாளர்களின் சங்கம், மின்சாரம் மற்றும் மின்னியல் உபகரண ஆலோசனைக் குழு, பலகை மற்றும் பலகை சார்ந்த தயாரிப்பு உற்பத்தியாளர்களின் சங்கம், ஒன்றிணைந்த ஆடை தொழிலாளர்களின் சங்கம், ஆடை தொழிற்சாலையாளர்கள், அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தியாளர்களின் சங்கம், ஔடத உற்பத்தி ஆலோசனை சபை உள்ளிட்ட பல துறைசார் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.