Breaking News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருப்பது கவலை தருகிறது - சேனாதிராஜா

இன்றையதினம் (24) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு சேனாதிராஜா     கூறியதாவது ,  
துரதிஸ்டவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருப்பது தனக்கு மிகுந்த கவலை தருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு தேர்தல் முடிந்தபின்னர் பிரிந்து சென்றவர்களை இணைத்து இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டும் எனும் ஆதங்கத்தோடு தான் இருப்பதாகவும் சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.

இன்றையதினம் (24) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சேனாதிராஜாவிடம் ஊடகவியலாளர்கள் மாற்றுத் தலைமை பற்றிய கேள்வியினை எழுப்பினர். அவ்வாறு எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,

‘நான் ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்றேன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துணைத் தலைவராக இருக்கின்றேன். அவ்வாறு நான் ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு மாற்று தலைமை வேண்டும் என்று சொல்வதைப்பொல அறிவீனம் வேறேதும் இருக்காது.

மாற்றுத் தலைமை என்பது ஜனநாயக ரீதியாக யாரும் அப்படி பேசலாம், அப்படியான கட்சியாக இயங்கலாம். ஆனால் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் இன்னும் பலமடைய வேண்டும். மாற்றுத் தலைமை பற்றி நாங்கள் பேசவேண்டிய அவசிய இல்லை. அவர்கள் சிறிது சிறிதாக அரசாங்க கட்சியில் இருந்தும், சுயேச்சைகளாகவும் எங்கள் வாக்குகளை பிரிக்கின்றார்கள். அதுக்கு இடமளிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே நாங்கள் வாக்களித்து பலத்தை உண்டாக்கவேண்டும்.

அந்த பலத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற செய்ய வேண்டும் எனும் கருத்துத்தான் இன்று வரையிலும் மிக பலமாக இருக்கின்றது. அது வருங்காலத்தில் நாங்கள் மக்கள் மத்தியில் வேலை செய்ய ஆரம்பித்தால், எங்களுடைய தேர்தல் அறிக்கையையும் முன்வைத்து நாங்கள் பேசினால் இன்னும் அதிகமாகும். மிகப் பெரும்பாலான இடங்களை மக்கள் வெற்றிபெற வைக்கின்ற போது மாற்றுத் தலைமையினுடைய பேச்சு இல்லாமல் போகும் என நினைக்கின்றேன்.’ – என்றார்.

மேலும்,

‘கோட்டாபய ராஜபக்சவினுடைய இயல்பு, அவருக்கு இருக்கின்ற இராணுவத்தில் கடமையாற்றிய அனுபவங்கள், இப்போது அவர் ஜனநாயக ரீதியாக அரச தலைவராக வந்துள்ளார். மக்கள் ஆதரித்து இருக்கின்றார்கள். ஆனால் அவர் இந்த பிரதேசத்தில் 20 ஆயிரம் உளவாளிகளையும் நடமாட விட்டிருப்பதாக எங்களுக்கு செய்திகள் கிடைத்துள்ளது.

எதிர்காலத்தில் ஒரு பூரணமான இராணுவ ஆட்சி ஒன்றை அவர் நிறுவுவதற்கு சர்வாதிகாரமான ஆட்சியொன்றை ஜனநாயகத்திற்கு ஊடாக, ஜனநாயகத்தில் பெற்ற வெற்றி என்று சொல்லி இந்த நாட்டிலே நிறுவினாலும் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை. அப்படித்தான் நிலைமைகள் இருக்கின்றன.

இந்த நிலைமையில் இன்றைக்கு ஜனநாயக சக்திகள் எதிர் அணியிலே ஐக்கிய தேசியக் கட்சியும் பலவீனப்பட்டு பிளவுபட்டு நிற்கின்ற ஒரு நிலைமை இருக்கின்றது. அதை விட முஸ்லிங்கள் தரப்பில், மலையக தரப்பில் கூட எல்லோரும் பலமாக அல்லது ஒன்றாக இருக்கின்றார்கள் என்ற நிலைமை இன்னும் ஏற்படவில்லை.

அதை விட முக்கியமாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒட்டுமொத்தமாக ஒரு பலமான நிலையை – பிரதிநிதித்துவத்தை நிருபிக்க வேண்டிய ஜனநாயக சக்தியாக பலமடைய வேண்டிய நிலமை ஏற்பட வேண்டும்.

ஆனால் இதுவரையில் கிழக்கிலிருந்து வடக்குவரைக்கும் பல மாவட்டங்களுக்கு நான் பயனம் செய்து இருக்கின்றேன். பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன். பெரும்பாலான மக்கள் அண்மைய சில நிகழ்வுகள் தொடர்பில் சங்கடப்பட்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பெரு வெற்றி பெற வைப்பதே இப்போது தேவை என்ற விடயத்தில் அவர்கள் மிக உறுதியாக இருக்கின்றார்கள்.’ – என்றார்.