Breaking News

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கென நூறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு - சிறீதரன்.!

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கென நூறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபி விருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட் டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் நூறு மில்லியன் ரூபா (100Mn) நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி மாவட் டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு கிராமியக் குளங்களின் புனரமைப்புக்கு ஏழு மில்லியன் ரூபாவும் (7Mn),

தெரிவு செய்யப்பட்ட பதினைந்து வீதிகளுக்கும் தலா இரண்டு மில்லியன் ரூபா வீதம் மொத்தமாக முப்பது மில்லியன் ரூபாவும் (30Mn), சாந்தபுரம் பொதுச் சந்தை புனரமைப்புக்கென ஒரு மில்லியன் ரூபாவும் (1Mn),

நான்கு ஆலயங்களின் புனரமைப்புக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா வீதம் இரண்டு மில்லியன் ரூபாவும் (2Mn), மருதநகர் பசுமைப்பூங்கா புனரமைப்புக்கு நான்கு இலட்சம் ரூபாவும் (0.4Mn), திருநகர் பொதுமயானப் புனரமைப்புக்கு ஆறு இலட்சம் ரூபாவும் (0.6Mn) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட எட்டு வீதிகளுக்கும் தலா இரண்டு மில்லியன் ரூபா வீதம் பதினாறு மில்லியன் ரூபாவும் (16Mn), ஆனையிறவு பொதுச்சந்தை புனரமைப்புக்கு ஒரு மில்லியன் ரூபாவும் (1Mn),

நான்கு ஆலயங்களின் புனரமைப்புக்கென இரண்டு மில்லியன் ரூபாவும் (2Mn), கோரக்கன்கட்டில் வசிக்கும் 15 குடும்பங்களுக்கு வீட்டு மின்னிணைப்பை வழங்குவதற்கு ஒரு குடும்பத்திற்கு முப்பதாயிரம் ரூபா வீதம் மொத்தமாக நான்கரை இலட்சம் ரூபாவும் (0.45Mn),

கிளி/கல்மடுநகர் அ.த.க.பாடசாலையின் மைதான புனரமைப்புக்கு ஐந்தரை இலட்சம் ரூபாவும் (0.55Mn) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அதேவேளை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட ஒன்பது வீதிகளுக்கும் இரண்டு மில்லியன் ரூபா வீதம் பதினெட்டு மில்லியன் ரூபாவும் (18Mn),

பளை பொதுச்சந்தை புனரமைப்புக்கு ஒரு மில்லியன் ரூபாவும் (1Mn), இரண்டு ஆலயங்களின் புனரமைப்புக்கென ஒரு மில்லியன் ரூபாவும் (1Mn), பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பத்து வீதிகளின் புனரமைப் புக்கென ஒரு வீதிக்கு இரண்டு மில்லியன் ரூபா வீதம் இருபது மில்லியன் ரூபாவும் (20Mn) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும், சமூகமட்ட அமைப்புக்களாலும் முன் னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு மேற்குறித்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நூறு மில்லியன் ரூபாவுக் குமான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டு,

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுச் செயலா ளரால் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2018.09.20 ஆம் திகதிய MNPEA/PLN/KILL/RD-2018 ஆம் இலக்க கடிதம் மூலம் குறித்த அறுபத்தொரு அபிவிருத்தி திட்டங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

தற்போது அவற்றுக்கான நிதி விடுவிக்கப்பட்டதன் அடிப்படையில் பிரதேச சபைகள் மற்றும் பிரதேச செயலகங்களினூடாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் நேரடி மேற்பார்வையின் கீழ் குறித்த திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.