Breaking News

சட்டத்தில் இடமில்லை - பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல்.!

சர்வஜன வாக்கெடுப்பை கோருவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தா லும் அந்த வாக்கெடுப்பை வைத்து பாராளுமன்றத்தினைக் கலைப்பதற்கான சட்ட ஏற்பாடு எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வி யில் தெரிவித்துள்ளாா்.

அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு




  • கேள்வி:- பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக வும் பொதுத்தேர்தல் ஜனவரியில் நடக்கவுள்ளதா கவும் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித் தலை அடுத்து கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் நடந் தது என்ன? 


பதில்:- தேர்தல்கள் ஆணைக்குழுவில் தவிசாளர் உட்பட மூன்று உறுப்பினர் கள் உள்ளார்கள். எம்மூன்று உறுப்பினர்களினதும் கருத்தின் பிரகாரம் பாராளு மன்றம் கலைப்பு சட்டவிரோதமான காரியமாகும். அதனடிப்படையில் பொதுத் தேர்தல் முன்னெடுக்கப்படுவதும் சட்டவிரோதமாகும்;.

  • கேள்வி:- நிலைப்பாடு ஒன்றாக இருந்தாலும் உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது ஏன்? 

பதில்:- பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுத்தேர்தல் நடத்தப்படுவது சட்டவிரோதமாக இருந்தாலும் கட்டளை இடப்படும் போது ஜனவரி 5ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டதால் தான் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஹிட்லரின் உத்தரவில் யூதர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பின்னர் அதுதொடர்பான வழக்கு விசாரணை வந்தபோது மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததால் தான் அவ்வாறு செய்தோ மென அதிகாரிகள் கூறியபோது அக்காரணம் நிராகரிக்கப்பட்டது.

அதனடிப்படையில் சட்டவிரோதமான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கட்டளைகள் வருகின்றபோது அவற்றை முன்னெடுப்பது தவறானதாகும் என் பதே உலகரீதியான நிலைப்பாடாகும்.

அதேநேரம் கட்டளையின் பிரகாரம் தேர்தலை நடத்த வேண்டியிருந்தாலும் மனச்சாட்சியின் பிரகாரம் அவ்வாறு செயற்பட முடியாது என்பதால் தான் இராஜினாமாச் செய்யப்போவதாக சக உறுப்பினரான நளின் அபயசேகர குறிப் பிட்டார். எனினும் அவரை இராஜினாமா செய்வதை தவிசாளர் தடுத்திருந்தார்.

இவ்வாறிருக்கையில் என்னைத் தவிர ஏனைய இரண்டு உறுப்பினர்களும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கு பொதுத்தேர்தலுக்கான முற்பணி களை முன்னெடுப்பதற்கு அனுமதி அளித்திருந்தனர்.

அவ்வாறு அனுமதி வழங்கினாலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேற் பார்வையின் கீழ் தான் ஆணையாளர் நாயகம் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றும் சட்டரீதியாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே நளின் அபயசேகர இராஜினாமச்செய்வதாக கூறிய நிலையில் மூன்று உறுப்பினர்களின் மேற்பார்வை இல்லாது ஆணையாளர் நாயகத்தி னால் எவ்வாறு செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்தது.

ஏனெனில் நாம் மூவரும் தீர்மானங்களை எடுக்கும் கூட்டத்தில் இருக்க வேண் டுமென்பதே சட்டமாக உள்ளது. இதனால் தான் அன்றைய தினத்தில் குழப்ப மான நிலைமைகள் காணப்பட்டிருந்தன.

  • கேள்வி:- தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இராஜி னாமா செய்வது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதை பாதிக் குமா? 

பதில்:- ஆம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களில் பெரும் பான்மை பெற்ற தீர்மானமே நடைமுறைப்படுத்தப்படும். தேர்தலுக்கான செயற்பாடுகளும் மூவரின் மேற்பார்வையிலேயே முன்னெடுக்கப்படும்.

ஆகவே ஒருவர் இராஜினாமா செய்வதால் அந்த செயற்பாடுகளை முன் னெடுப்பது பாதிப்படையும். அடுத்து ஆணைக்குழுவிற்கு புதிதாக ஒரு உறுப்பி னர் நியமிக்கப்பட வேண்டுமாயின் மூன்று உறுப்பினர்களும் இணைந்தே அரசியலமைப்பு சபைக்கு புதிய உறுப்பினரின் பெயரை பரிந்துரை செய்ய வேண்டும்.

அவ்வாறு பரிந்துரை செய்யப்படுபவரை அரசியலமைப்பு சபை அங்கீகாரம் செய்யலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆகவே ஆணைக்குழுவின் உறுப்பின ரொருவர் இராஜினாமச் செய்வதானது அனைத்தையும் மேலும் சிக்கலுக்குள் ளாக்கி விடும்.

ஒருவேளை ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்கின்ற போது அத்தியாவசிய கோட்பாட்டின்(Doctrine Necessity) அடிப்படையிலும் முன் னெடுக்க முடியும். ஆனால் அச்செயற்பாட்டிற்கு எதிராகவும் நீதிமன்றத்தினை நாடுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

அதாவது உண்மையிலேயே அத்தியாவசிய கோட்பாட்டிற்கு உட்பட்டு அவ் விடயம் வருகின்றதா என்பதை கேள்விக்குட்படுத்த முடியும்.

  • கேள்வி:- பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணை க்குழுவின் தவிசாளர் உயர்நீதிமன்றத்தினை நாடவுள்ளதாக கூறிய போதும் ஈற்றில் தாங்களே மனுத்தாக்கல் செய்திருந்தமையின் பின் னணி என்ன? 

பதில்:- நீதிமன்றத்தினை நாடுவதற்கு சக உறுப்பினரான நளின் அபயசேகர இணக்கம் தெரிவித்திருக்கவில்லை. தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவும் விரும்பியிருக்கவில்லை.

சுயாதீன ஆணைக்குழுவாக இருந்தாலும் அரசாங்க கட்டளைக்கு எதிராக நீதி மன்றை நாடமுடியுமா என்பதும் கேள்விக்குறியாக இருந்தது. ஆகவே மூன்று உறுப்பினர்களும் ஏக நிலைப்பாட்டில் நீதிமன்றம் செல்ல முடிந்திருக்க முடிய வில்லை.

எனது தனிப்பட்ட கருத்தின் பிரகாரம் கூறுவதானால் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் சில்வா அம்பாந்தோட்டை தொடர்பான வழக்கில் சார்பாக தீர்ப்பு வழங்கியதாக கூறியுள்ளார்.

அப்படியிருக்கையில் நீதித்துறை மீதான நம்பகத்தன்மை தொடர்பான  அச்சம் காணப்பட்டது. குறிப்பாக கூறுவதானால் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நீதிமன்றத்தினை நாடிய பின்னர் தீர்ப்பு அரசாங்கத்திற்கு சார்பாக அமையுமாக இருந்தால் அதற்குப் பின்னர் என்ன செய்வது என்ற அச்சமான கேள்வியும் காணப்பட்டிருந்தது.

இதனால் தான் நான் தனியாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந் தேன்.

  • கேள்வி:- ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உறுப்பினராக இருக்கும் தாங்கள் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கு விழைந்த மையால் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டதா? 

பதில்:- உயர்நீதிமன்றை நாடும் தீர்மானத்தினை நான் எடுத்தபோது ஆணைக் குழு உறுப்பினர்கள் மூவரும் பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுக் கப்பட்டது. இருப்பினும் தவிசாளர் எனக்குள்ள தனிப்பட்ட அபிப்பிராயத்தின் அடிப்படையிலான உரிமையை மறுதலிக்க முடியாது எனக் கூறி அதற்கான அனுமதியை வழங்கியிருந்தார்.

மேலும் தேர்தல்; சட்டங்களை பேணுவதே எமது கடமை என நாட்டின் யாப் பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனையே நான் முன்னெடுத்திருந்தேன். அதா வது எமக்கு வருகின்ற கட்டளைகள் சரியா? தவறா? என்பதை கணித்து செயற் படுவதாகும்.

ஜனாதிபதி என்னை நியமித்திருந்தாலும் அவருடைய கருத்துக்களுக்கு விசு வாசமாக இருக்க வேண்டும் என்றில்லை. எந்தக் கட்டளைகளையும் நாம் முன்னெடுப்போம் என்றால் அது சுயாதீனத்தன்மையை கேள்விக்குட்படுத்து வதாகவே அமையும்.

  • கேள்வி:- பாராளுமன்ற கலைப்பு தவறு என்பதை சுட்டிக்காட்டும் வகையில் மனுதாரரான தங்கள் தரப்பால் முன்வைக்கப்பட்ட விடய ங்கள் யாவை? 

பதில்:- முதலாவதாக அரசியலமைப்பினை முழுமையாக கருத்திற் கொள்ள வேண்டும். பொதுத்தன்மையில் 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்று அதி காரத்தினை குறைப்பதற்காகவே கொண்டுவரப்பட்டது.

அரசியலமைப்பின் 33ஆவது சரத்தினை மையப்படுத்தி பாராளுமன்றத்தினைக் கலைக்கும் அதிகாரம் தனக்கு உள்ளது என ஜனாதிபதியால் கூற முடியாது. ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானியில் 70ஆவது சரத்தினை பற்றி குறிப்பிட் டிருக்கின்றார்.

ஆனாலும் 70ஆவது சரத்தின் மூன்று நான்கு பகுதிகளை கருத்திற் கொண்டா லும் பிரதானமாகவுள்ள நான்கரை வருடங்களுக்கு கலைக்க முடியாது என் பதை கருத்தில் கொள்ளவில்லை.

பல உணவுகள் உள்ள கூடத்தில் தமக்கு பிடித்ததினை மட்டும் உண்பது போன்று அரசியலமைப்பில் தமக்கு சாதகமான விடயங்களை மட்டும் கருத் தில் கொள்ள முடியாது.

மேலைநாடுகளில் அரசியல் கற்கைகளின்போது தேர்தலில் மக்கள் முதலில் தமது அடையாளத்திற்கே வாக்களிப்பார்கள் என்பது பொதுவான அறிகுறி என்று குறிப்பிடுவார்கள்.

அதாவது இன, மத, மொழி ரீதியாக வாக்களிப்பதாக அமையலாம். பொதுப் படையில் 'அடையாள அரசியல்' என்று கூறப்படும். இதன் விளைவால் தான் அரசியலுக்காக நாட்டின் அரசியலமைப்பு குறித்து தத்தமது கட்சி சார்பில் கருத் துக்கள் கூறும்போது கை தட்டி அதனை சரியென்று ஏற்றுக்கொள்வார்கள்.

முழுமையாக ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுக்கும் முதிர்ச்சி இன்னமும் இலங்கைக்கு வரவில்லை. இதனைவிடவும், அரசியலமைப்பின் 33(3)சரத்தில் பொதுத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் ஆலோசித்தே மேற் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

ஆனால் அவ்வாறான எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு வேளை ஜனாதிபதி கூறுவதைப்போன்று பாராளுமன்றத்தினைக் கலைப்ப தற்கு அவருக்கு அதிகாரம் இருக்கின்றது என்று வைத்துக்கொண்டால் அடுத்து தேர்தலை நடத்த முடியும்.

அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டு அதிலும் தோல்வி கண்டால் தொடர்ச்சியாக வெற்றியடையும் வரையில் மாறிமாறி காரணங்கூறி தேர்தலை நடத்திக் கொண்டிருக்க முடியுமா? மக்கள் சலிப்படைந்து விரக்தியுற்றுவிடுவார்கள்.

  • கேள்வி:- ஜனாதிபதி ஆணைக்குழுவின் தவிசாளருடன் கலந்தாலோ சித்தே வர்த்தமானி வெளியிடப்பட்டதாக கூறப்படுகின்றதல்லவா? 

பதில்:- கடந்த ஒன்பதாம் திகதி இரவு எமது தவிசாளருக்கு தொலைபேசி ஊடாக ஜனாதிபதி திடீரென அழைப்பு விடுத்திருந்தார். அச்சமயத்தில் எனக் கும் சக உறுப்பினருக்கும் தவிசாளர் அறிவிப்பு விடுத்த பின்னரே ஜனாதி பதியைப் பார்க்கச் சென்றிருந்தார்.

தவிசாளர் அங்கு சென்றபோது தேர்தல் திகதி உள்ளிட்ட அனைத்தும் குறிப் பிடப்பட்டு அறிவித்தல் தயார் நிலையில் இருந்தது. அங்கு ஆலோசனை நடை பெறவில்லை.

கட்டளைகளே வழங்கப்பட்டன. ஆலோசனை நடத்தப்பட்டிருந்தால் எம்முடன் கலந்துரையாடிய பின்னரே தவிசாளர் இறுதி முடிவை கூறியிருப்பார். ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. ஜனாதிபதி சந்திப்பின் பின்னர் தவி சாளர் மீண்டும் என்னைத்தொடர்பு கொண்டு 10ஆம் திகதி அவசர சந்திப்பில் பங்கேற்குமாறு கோரியிருந்தார்.

அதிகாலை 4மணிக்கு யாழிலிருந்து புறப்பட்டு 12மணிக்கு ஆரம்பமான கூட்டத் தில் நான் பங்கேற்றிருந்தேன். ஆகவே முழு நடவடிக்கைகளும் சட்டத்தினை மீறியே நடைபெற்றிருக்கின்றன என்பதே யதார்த்தமாகின்றது. 


  • கேள்வி:- நெருக்கடி நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளியிடுவதற்கு பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டும் என்று முன்மொழி யப்படுகின்ற நிலையில் அதற்குச் சாத்தியப்பாடுகள் உள்ளனவா? 


பதில்:- சட்டத்தின் அடிப்படையில் அவ்வாறான செயற்பாடுகள் மிகத் தவ றானவையாகும். அச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் அவை சட்ட மீறல்களாகவே அமையும். ஜனநாயகம் என்பது மக்கள் ஆணையைப் பெறு வது மட்டுமல்ல.

பெற்ற ஆணையை நடைமுறைப்படுத்துவதும் ஜனநாயகம் தான். ஆகக் குறை ந்தது நான்கரை வருடங்களுக்கான மக்கள் ஆணை ஒரு பிரதமருக்கு வழங் கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஆணைபெற்றுள்ள ஒருவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு இடைக்காலப்பகுதியில் மக்கள் ஆதரவு அதிகரிக்கலாம் அல்லது குறைய லாம். அவற்றைப் பொருட்படுத்தி மாற்றங்களைச் செய்யமுடியாது. ஒரு தலைவர் மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்கலாம்.

அல்லது முடிவுகளை எடுப்பதன் ஊடாக மக்களின் செல்வாக்கை இழக்கலாம். அது பிறிதொரு விடயமாகும்.


  • கேள்வி:- சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா? 

பதில்:- சட்டத்தின் பிரகாரம் பார்க்கையில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி னாலும் ஒரு தீர்வும் காணமுடியாது. இருப்பினும் ஜனாதிபதிக்கு சர்வஜன வாக்கெடுப்பை கோருவதற்கான அதிகாரம் உள்ளது.

அவ்வாறு ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்பொன்றைக் கோருவாராயின் அதற்கு பெரும் செலவுகள் ஏற்படலாம். அதனைவிடவும் சர்வஜன வாக்கெ டுப்பின் பிரகாரம் பொதுத்தேர்தல் அவசியம் என்ற நிலைப்பாடு ஏற்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம்.

அவ்வாறாயின் எந்த யாப்பில் உள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்து வது? சர்வஜன வாக்கெடுப்பை வைத்து பாராளுமன்றத்தினைக் கலைப்பதற் கான சட்ட ஏற்பாடு எந்தவிடத்திலும் கூறப்படவில்லை. இவ்வாறான கருத் துக்கள் அனைத்தும் அரசியலுக்கானவை.

  • கேள்வி:- தேர்தல் ஆணைக்குழு இயங்க ஆரம்பித்து மூன்றாண்டு களாகின்ற நிலையில் சுயாதீனமாக செயற்பாடுகளை முன்னெடுப் பதற்கு இடைவெளி கிடைத்திருந்ததா? 

பதில்:- ஆரம்பத்தில் தேர்தல்கள் ஆணையாளராக தனியொருவரே செயற் பட்டிருந்தார். புதிய சட்டத்தில்அந்தப்பதவி 'தேர்தல் ஆணைக்குழு' ஆக உரு வாக்கப்பட்டு அந்த அமைப்பின் கீழ் அந்த அதிகாரம் மூவருக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

19ஆவது திருத்தச்சட்டத்தில் ஆணைக்குழுவின் அதிகாரம் தொடர்பில் குறிப் பிட்ட விடயங்கள் பற்றி மேலும் தெளிவான தன்மை அவசியமாகின்றது. மூவரினதும் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் செயற்பாடுகள் முன்னெ டுக்கப்படுவது என்பது சற்றே இயலாத காரியமாகும்.

பெரும்பான்மை முடிவின் அடிப்படையிலேயே செயற்பட முடியும். பொது வாக இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஆணைக்குழு என்றால் என்ன வென்ற விளக்கம் முழுமையாக இங்கு இல்லை.

ஆனால் இந்தியாவில் விரிவான விளக்கத்துடன் காணப்படுகின்றது. உதார ணமாக ஒரு தீர்மானம் ஆணைக்குழுவினால் எடுக்கப்படுமாயின் தவிசாளர் உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஏகோபித்தோ அல் லது இல்லையென்றோ குறிப்பிட்டுக் கையொப்பமிடுகின்ற நிலைமைகள் இருக்கின்றன.

ஆகவே அவ்விதமான முன்னேற்றங்கள் அவசியமாகின்றன. மேலும் தற் போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளின் கீழ் ஆணைக்குழு உறுப்பினர் கள் நீதிமன்றத்தினை நாடுவதற்கே தயங்குகின்ற நிலைமைகள் இருக்கின்றன என்றால் நடைமுறைரீதியிலான சுயாதீன தன்மையை உங்களால் நன்கு புரிந்து கொள்ள முடியும்.

  • கேள்வி:- எதிர்காலத்தில் ஆணைக்குழு சுயாதீனமாகச் செயற்படு வற்கு தடைகள் ஏற்படாது என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா? 

பதில்:- இந்த விடயத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டும். அதனைச் செய் வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாழ் வதற்கு சட்டத்தின் ஆட்சி மிகவும் அவசியமாகின்றது.

சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படாது விட்டால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுவதோடு இந்த நாட்டில் வாழமுடியாத சூழலும் ஏற்படும் ஆபத்துள்ளது. ஆகவே சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையிலான நம்பிக்கையை அரசியல் தலைமைகள் ஏற்படுத்தவேண்டும்.

எனது தனிப்பட்ட கருத்தின் பிரகாரம், 2015இல் எவ்வாறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டனவோ அதனை முதலில் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் சட்ட ஆட்சி உள்ள நாட்டில் வாழுகின்றோம் என்ற எண்ணப்பாடு இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் மனதிலும் ஏற்படும்.