எதிரணியினருக்கு பதவி கோருவதற்கான உரித்து இல்லை - சம்பந்தன்
உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை கோருவதற்கான உரித்து பொது எதிரணிக்கு இல்லை. அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம் வகித்துக்கொண்டு அதே கட்சியை சேர்ந்தவர்கள் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக செயற்பட முடியாது.
இதற்கமைவாக பொது எதிரணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்கவேண்டுமென்று சபாநாயகர் கருஜயசூரியவிடம் பொது எதிரணியினர் கோரியுள்ளனா்.
இதற்கான மனுவையும் சபாநாயகரிடம் அவர்கள் கையளித்துள்ளனர். பொது எதிரணியினரான தம்மிடம் 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கையில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பினரிடம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பொது எதிரணியினர் வாதிட்டவாறு உள்ளனா்.
இவ் விடயமாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனிடம் கருத்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன்,
மேலும்,
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரும் உரித்து பொது எதிரணிக்கு இல்லை. அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம் வகிக்கும் கட்சியொன்றின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியாது. பொது எதிரணியினரின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
அரசாங்கத்திலும் அங்கம் வகித்துக்கொண்டு உத்தியோகபூர்வமாக எதிர்க்கட் சித் தலைவர் பதவியை கோர முடியாது. இதனால் தான் பொது எதிரணியினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாது என்ற தீர்மானத்திற்கு சபாநாயகர் உள்ளாா்.
பொது எதிரணியினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவது என்பது பாராளுமன்ற சம்பிராதாயங்களுக்கு முரணான செயற்பாடாகும். எனவே இவ் விடயத்தை புரிந்து கொள்ளவது அவசியமெனத் தெரிவித்துள்ளாா்.