Breaking News

`தாய்லாந்து குகையில் சிக்கித் தவித்த சிறுவர்களில் 4 பேர் மீட்பு!

ஜூன் மாதம் 23-ஆம் தேதி, 16 வயதுக்கு உட்பட்ட
12 கால்பந்தாட்ட வீரர்களும் அவர்களின் பயிற்சியாளரும் தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குச் சென்றனர். அப்போது திடீரென மழை பெய்து குகை நுழைவுவாயிலில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் சிறுவர்கள் வெளியே வர முடியாமல் குகைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். அவர்களின் நிலைமை என்ன ஆனது என தெரியவில்லை. இதையடுத்து அவர்களை மீட்கும் பணிகளில் தாய்லாந்து ராணுவமும், கடற்படையும் ஈடுபட்டன.


 

இதையடுத்து சிறுவர்கள் குகைக்குள் சிக்கிய நாளிலிருந்து 9 நாள்களுக்குப் பிறகு அவர்கள் குகைக்குள்ளேயே பல கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஒரு திட்டின்மீது தவித்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவர்களில் பலருக்கு நீச்சல் தெரியாததால் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து பெய்த மழையினால் வெள்ளம் வடியவில்லை. சேறு, சகதி காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் நீடித்தது. நாடு முழுவதும் இந்த செய்தி உற்று கவனிக்கப்பட்டது. 

சிறுவர்களின் பெற்றோர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், குகையில் சிக்கிய 12 சிறுவர்களில் 4 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, மீட்பு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மற்ற சிறுவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குகைக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி முடிய சில நாள்கள் பிடிக்கலாம் என்று கருதப்படுகிறது.