விஜயகலா விடயத்தில் கொந்தளிப்பவர்கள் ஹிட்லர் விடயத்தில் அமைதி காப்பது ஏன்?
புலிகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை அரசாங்கத்தினால் எடுக்கப்படும்.
இது தொடர்பில் விசாரணை நடத்தப் பட்ட பின்னரே தேவையான நட வடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து யாரும் அலட்டிக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லையென அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித் துள்ளார்.
நாங்கள் ஹிட்லரை ஊக்குவிப்பதையும் நிராகரிக்கின்றோம். பிரபாகரனை ஊக்குவிப்பதையும் நிராகரிக்கின்றோம். ஆனால் தென்னிலங்கையில் சிலர் பிரபாகரன் குறித்து விஜயகலா பேசியதும் கொந்தளிக்கின்ற அதேவேளை ஹிட்லர் குறித்து பேசியமை தொடர்பில் கொந்தளிக்காமல் இருக்கின்றமை ஆச்சரியமளிப்பதாகத் தெரிவித்துள்ளாா்.
பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித் துள்ளாா்.
மேலும் குறிப்பிடுகையில்;
கேள்வி: விஜயகலா மகேஸ்வரன் புலிகளை மீள உருவாக்கவேண்டும் என்று கூறியுள்ளமையினால் தென்னிலங்கையில் பாரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியும் பிரதமரும் இது தொடர்பில் ஏன் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருக்கின்றனர்.?
பதில்: உங்களது அவசரத்திற்காக எதுவும் செய்ய முடியாது. விஜயகலாவின் கூற்றுத்தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் அவரின் பேச்சு உள்ளடங்கிய இருவட்டை கொண்டுவந்து விசாரணை நடத்தப்படவேண்டும். அதன் பின்னர் அரசாங்கம் தேவையான நடவடிக்கை எடுக்கும்.
குறிப்பாக இவ் விடயத்தில் விஜயகலா மகேஸ்வரன் விதிமுறைகளுக்கு அப் பால் சென்றுள்ளமை தெரிகின்றது. எனவே இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அந்த விடயத்தில் அரசாங்கம் உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கும்.
கேள்வி: விஜயகலா மகேஸ்வரன் உரை நிகழ்த்தி 72 மணி நேரம் ஆகிவிட்டது. எனினும் இதுவரை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?
பதில்: 72 மணிநேரம் (நேற்றைக்கு) இன்னும் ஆகவில்லை. அதுமட்டுமின்றி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரே இதுதொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார். அதன் பின்னரே கூட்டு எதிரணியினர் மிகவும் அநாகரிகமான முறையில் இப் பிரச்சினையை எழுப்பி சபாநாயகரரையும் தகாதமுறையில் விமர்சித்து செயற்பட்டிருந்தனர்.
ஆனால் சபாநாயகர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்திருந் தார். அதுமட்டுமின்றி சட்டமா அதிபரின் ஆலோசனையையும் சபாநாயகர் எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். பிரதமரும் இது தொடர்பில் அவதா னம் செலுத்தியுள்ளார். அவர் இன்று (நேற்று) பாராளுமன்றத்தில் இதுதொடர் பில் ஒரு விசேட கூற்றை வெளியிடுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.
கேள்வி: விஜயகலா மகேஸ்வரனை தற்காலிகமாக பதவியிலிருந்து இடை நிறுத்துமாறு
பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தாரா?
பதில்: அதுபற்றி எங்களுக்குத் தெரியாது.
கேள்வி: இந்த விவகாரத்தில் விஜயகலா மகேஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க முடியுமா?
பதில்: அதற்கு முதலில் அந்த உரையை முழுமையாக கேட்கவேண்டும். விசாரணை நடத்தவேண்டும். அதன் பின்னரே முடிவை அறிவிக்க முடியும். அமைச் சுப் பதவியில் இருந்து நீக்க முடியுமா இல்லையா என்பதை சட்டமா அதிபரே அறிவிக்கவேண்டும்.
கேள்வி: இதுதொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரட்னவின் கருத்து என்ன?
பதில்: விஜயகலா மகேஸ்வரன் அவ்வாறு பேசியமை தவறானதாகும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதேபோன்று தென்னிலங்கையில் ஹிட்லர் தொடர்பில் பேசியதும் தவறாகும். அதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கேள்வி:அரசாங்கம் நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்து செயற்படுகின்றது.
எனினும் அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு உரையாற்றுகிறார். அப்படியா யின் அரசாங்கத்திற்குள் நல்லிணக்கம் இல்லையா?
பதில்: அரசாங்கத்திற்குள் நல்லிணக்கம் இருக்கின்றது. ஆனால் சர்வாதிகாரம் இல்லை. பழைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமையும் தற்போது இல்லை. ஜனாதிபதி அன்று செயற்பட்டது போன்று இன்றைய ஜனாதிபதி செயற்பட முடியாது. அதுமட்டுமின்றி கடந்த காலத்தைப் போலன்றி தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகமாக பேசுகின்றனர்.
கேள்வி: வடக்கு, கிழக்கிற்கு எதுவுமே அரசாங்கம் செய்யவில்லை என விஜயகலா மகேஸ்வரன் கூறுவது சரியா?
பதில்: அவர் வடக்கிற்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறவில்லை, குறிப்பாக காணி விடுவிப்பு தொடர்பில் விஜயகலா நன்றி தெரிவித்திருந்தார். ஆனால் வீட்டுத்திட்டம் அங்கு இன்னும் நிறைவுபெறவில்லை.
அரசாங்கம் இரும்பிலான வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்க முயற்சித்த போது அதனை கூட்டமைப்பு எதிர்த்தது. அவர்கள் கொங்கீறீட் வீடுகளை கேட்கின்றனர். அது மிகவும் பழைமையானதாகும். அதேபோன்று அரசியல் கைதிகளுக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை.
அரசியல் கைதிகள் விடயத்தில் ஒன்று சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்; அல்லது விடுவிக்கவேண்டும். இவ்வாறு வடக்கில் பல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதனால் மனநிலை தாக்கம் வர லாம்.
அவ்வாறு மனநிலையில் தாக்கம் வருகின்றது என்பதற்காக இவ்வாறு பேச முடியாது. இதனைக்கூறி இந்தக் கூற்றை நியாயப்படுத்த முடியாது.
கேள்வி: வடக்கில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் தெற்கிலும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளனவே?
பதில்: இல்லை.அது அவ்வாறில்லை. நான் இங்கு சில புள்ளிவிபரங்களை குறிப்பிடவுள்ளேன்.2014 ஆம் ஆண்டில் 57ஆயிரம் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன. 2017ஆம் ஆண்டு 35700 குற்றச்செயல்களே இடம்பெற்றுள்ளன. ஆனால் போதைப்பொருள் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கேள்வி: எனினும் விஜயகலா மகேஸ்வரன் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக கூறுகிறாரே?
பதில்: வடக்கில் நிலைமை சற்று மோசமாகத்தான் உள்ளது.
கேள்வி: விஜயகலா இவ்வாறு பேசியது சரியா?
பதில்: இல்லை. அது தவறானது. குறிப்பாக பாராளுமன்றக் குழுக்கூட்டங்கள் உள்ளிட்ட
இடங்களில் அவர் தமது ஆதங்கங்களை தெரிவிக்கலாம். அவர் ஏற்கனவே இவ்வாறு சில இடங்களில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். நான் இல்லை என்று கூறவில்லை. ஆனால் இன்னும் சற்று அதிகமாக தமது ஆதங்கங்களை பாராளுமன்றக் குழுக்கூட்டங்களில் முன்வைக்கலாம்.
கேள்வி: புலிகள் காலத்தில் குற்றச்செயல்கள் இடம்பெறவில்லை என விஜயகலா கூறியுள்ளமை சரியா?
பதில்: அது ஒருவகையில் சரியாகத்தான் இருக்கின்றது. அதாவது புலிகள் காலத்தில் அனைத்து குற்றச்செயல்களையும் புலிகளே செய்தனர். ஏனையவர்கள் பயத்தில் எதனையும் செய்யவில்லை. அதனால் அந்த நிலைமை இருந்திருக்கலாம். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. மக்களுக்கு சுதந்திரம் இருக்கின்றது. சுதந்திரம் இருக்கின்றபோது குற்றச்செயல்களும் அதிகரிக்கும்.
கேள்வி: விக்கினேஸ்வரன் ,சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரின் இந்த இனவாத செயற்பாடுகள் தொடர்கின்றனவே?
பதில்: ஆனால் விக்கினேஸ்வரன் சிவாஜிலிங்கம் போன்றோரை மக்கள் அங்கீகரிக்கின்றனரா என்று பார்க்கவேண்டும். நந்திக்கடல் பகுதியில் அஞ்சலி செலு த்த சிவாஜிலிங்கம் மற்றும் விக்கினேஸ்வரனுடன் 100 பேர் வரையில் மக்கள் வந்திருந்தனர்.
அவ்வாறு வந்தவர்களுக்கு அங்குள்ள இராணுவ முகாமில் குளிர்பானம் வழங்கப்பட்டது. இதுதான் உண்மை நிலைமை.
கேள்வி: எப்படியிருந்தும் இதுவரை விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியா?
பதில்: அவசரப்படாமல் இருங்கள், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
கேள்வி: இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுவிட்டு விஜயகலா அர சாங்கத்தில் நீடிக்க முடியுமா?
பதில்: நாம் இதுதொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
கேள்வி: யாழில் ஒருகோவில் திருவிழா நிகழ்வில் ஈழக்கொடி கொண்டு செல் லப்பட்டுள்ளது. இது சரியா?
பதில்: சம்பந்தப்பட்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி 30 வரு டம் யுத்தம் நடைபெற்ற ஒரு பகுதியில் இவ்வாறான நிகழ்வுகள் இடம் பெறு வது சகஜமாகும்.
தெற்கில் ஹிட்லர் தொடர்பிலும் பேசியுள்ளனர் தானே, அதனை ஏன் தூக்கிப் பிடிக்கவில்லை. தமிழர் என்ற காரணத்திற்காக எதையாவது கூறிவிட்டால் அதற்காக இவ்வாறு செயற்படுவது சரியா? புலிகளை ஊக்குவிப்பதும் தவறு ஹிட்லரை ஊக்குவிப்பதும் தவறு தான்.
ஆனால் இன்று தமிழ் மக்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இருக்கின்றனர் என்ப தில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் இனவாதம் பேசினால் மக்களே எதிர்ப்பார்கள்.