கருணா, பொன்சேகாவை உதராணம் காட்டி விஜயகலாவின் விவகாரத்தில் பிரதமர் புலம்பல்.!
நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி பரவலை திசை திருப்பவே பாராளுமன்றத்தை எதிர்க்கட்சியினர் குழப்பி அடித்துள்ளனா்.
600 பொலிஸாரை படுகொலை செய்த கருணா அம்மானை சுதந்திரக் கட்சியின் உப தலைவராக்கி விட்டு பிரபாகரனை கொன்ற பொன்சேகாவை சிறையில் அடைத்தனர்.
யுத்தத்தை வென்றவரை சிறையில் அடைத்து விட்டு தற்போது வந்து விஜயகலாவின் உரை தொடர்பாக எப்படி எதிரணியினால் சபையில் கூச்சலிடலாமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் கேள்வியை தொடுத்துள்ளாா்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பாக விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
விடுதலைப் புலி கள் அமைப்பை நாம் தடை செய்துள்ளோம். அந்த தடையை மீறி விடுதலை புலிகளை மீள் உருவாக்க வேண்டிய அவசியமில்லை.
நாட்டின் ஒற்றையாட்சியையும் பெளத்த மதத்திற்கான முன்னுரிமையையும் நாம் பாதுகாப்போம். இந்த கொள்கையின் பிரகாரம் நாம் செயற்படுவோம். அத்துடன் மூவின மக்களும் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வின் ஊடாக மனித உரிமையையும் பாதுகாத்து அதிகாரத்தை பகிர்ந்து தீர்வு வழங்க வேண்டியுள்ளது.
அத்துடன் வடக்கு,கிழக்கு அபிவிருத்தி மிகவும் அவசியமாகும்.காணி விடுவிப்புக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இந்நிலையில் விஜயகலா மகேஸ்வரனின் உரையை நான் கேட்டவுடன் இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்தேன்.
இது தொடர்பாக எமது கட்சியின் அரசியல் குழு நேற்று (நேற்று முன்தினம்) கூடியது. அவர் மீதான விசாரணை தொடர்பாக தீர்மானம் எடுத்துள்ளோம். விஜயகலா மகேஸ்வரன் சுகயீனமுற்று யாழ்ப்பாணத்தில் இருப்பதாகவும் இன்றைய தினம் (நேற்று) வருவதாகவும் அவர் எனக்கு அறிவித்தார்.
நான் அவரை இன்று (நேற்று) சந்திப்பேன். அதன் பின்னர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பேன். எமது பாதுகாப்பு படையினர் நாட்டை பாதுகாக்க உயிரை தியாகம் செய்தனர்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியிலும் தமிழ் கட்சிகளிலும் சுதந்திரக் கட்சியிலும் பல தலைவர்களை விடுதலை புலிகள் அமைப்பு படுகொலை செய்தது.ஆகவே இந்த விடயத்தில் நாம் அனைவரும் ஒரு கொள்கையின் கீழ் உள் ளோம்.
நாட்டை பிளவுப்படுத்துவது மாத்திரமின்றி பாராளுமன்றத்தை வலுவில்லா மல் செய்வதே விடுதலை புலிகளின் பிரதான நோக்கமாக இருந்தது. நேற்றைய தினமும் பாராளுமன்றத்தில் கூச்சலிட்டு குழப்பி அடித்தனர். எனினும் இது தொடர்பாக யார் கூச்சலிடுகின்றனர்.
600 பொலிஸாரை கொலை செய்த கருணா அம்மானை அழைத்து சுதந்திரக் கட்சியின் உப தலைவர் ஆக்கி விட்டு, பிரபாகரனுக்கு பணம் வழங்கி ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொண்டு விட்டு, விடுதலை புலிகளை தோற்கடித்த இராணுவ தளபதியை சிறையில் அடைத்து விட்டு தற்போது வந்து விஜயகலா வின் உரை தொடர்பாக எப்படி இவர்கள் கூச்சலிட முடியும்.
சபாநாயகருக்கு தனது தீர்மானத்தை அறிவிக்க உரிமை உள்ளது.
ஆகவே சபாநாயகரே நீங்கள் காத்திரமாக செயற்பட வேண்டும். அப்படியாயின் அரசியல் பழிவாங்கல் தொடர்பான சரத் பொன்சேகாவின் நிலைப்பாட்டை நாம் அனைவரும் ஒன்று இணைந்து பரிசீலிக்கவேண்டும். ஏன் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டாரா?.
நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி தொடர்பாக கதையை திசை திருப்ப வும் அதனை நிறுத்தவுமே பாராளுமன்றத்தை நேற்று (நேற்று முன் தினம்) குழப்பி அடித்தனர். தற்போது கூட்டு எதிர்க்கட்சியினர் பயந்து போய் உள்ளனர்.
600 பேரை கொன்றவரை சுதந்திரக் கட்சியின் உப தலைவராக்கி விட்டு பிரபாகரனை கொன்றவரை சிறையில் அடைத்தனர். அதுதானே உண்மை என புலம்பியுள்ளாா்.