நிமல் சிறிபால விரைவில் 16 பேர் அணியுடன் இணைவார் - டிலான் பெரேரா
அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா விரைவாக அரசாங்கத்தில் இருந்து வெளியேறி 16 பேர் அணியுடன் இணைவாா் எனவும் மத்தள விமான நிலையத்தை விற்பனை செய்யும் கொள்கையில் அவர் இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 16 பேர் அணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
மேலும் தெரிவிக்கையில்....,
மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை நிறைவேற்றுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தபோதும் அது தொடர்பான சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதாக எங்களிடம் தெரிவித்துள்ளாா்.
அத்துடன் அரசாங்கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களில் ஒரு சிலரைத்தவிர ஏனையவர்கள் எமது நிலைப்பாட்டிலே இருக்கின்றனர். நாட்டின் வளங்களை விற்பனைசெய்யும் கொள்கை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இல்லை.
அதனால் அவர் விரைவில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எங்களுடன் இணைந்துகொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின்போதும் பிரதமருக்கு எதிராக வாக்களிக்கும் தீர்மானத்திலே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இருந்தார். இருந்தபோதும் ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலே அவர் வாக்களிப்பில் விலகியிருந்தார்.
அப்போதும் அவர், தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறப்போவதாக தெரிவித்தே இவ்வாறு நடந்துகொண்டார். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இரு ந்தாலும் அரசாங்கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் போராட்டத்தில் எங்களுடன் இணைவாா்கள்.
கேள்வி: கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டால் 16பேர் அணி ஆதரவளிக்குமா?
பதில்: மஹிந்தராஜபக்ஷ பெயரிடுபவரே கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவார். ஆனால் இதுவரை அவ்வாறு யாரையும் மஹிந்த ராஜபக்ஷ பெயரிடவில்லை.
அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்படுபவருக்கு சிங்கள மக்களது வாக்குகளுடன் சிறுபான்மை மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொள்ள முடியுமா என்பதையும் அவர் கருத்திற்கொள்வார்.
கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வது சிரமமாகும். என்றாலும் அந்த வாக்குகளை பெற்றுக்கொள்ளக்கூடியவர்கள் 16 பேர் அணியில் இருக்கின்றனர்.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பொதுஜன பெரமுனவுக்கே வாக்களித்தனர். சிறுபான்மை மக்களே அதிகள வில் எங்களுக்கு வாக்களித்தனர். அதனால் ஜனாதிபதி தேர்தலுக்கு சிறு பான்மை மக்களின் வாக்குகள் மிகவும் அவசியமெனத் தெரிவித்துள்ளாா்.