விக்கி, விஜயகலா, சிவாஜிலிங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு - ரோஹித அபேகுணவர்தன
யாழ். கோட்டைப் பிரதேசத்திற்குள் இராணுவத்தினர் நுழைவதற்கு தடை விதிக்கும் வகையில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் திட்ட மிடப்பட்டுள்ளது.
எனவே அவ்விவகாரம் தொடர்பில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பி னர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன முறைப்பாடு செய்துள் ளாா்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
மேலும் விவரிக்கையில்.....,
நல்லாட்சி அரசாங்கம் விடுதலைப் புலிகள் அமைப்பு ஏற்படுத்திய பாதிப்பை விட பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு கட்டுநாயக்க விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியது. எனினும் அதனை மீள்நிர்மாணிக்க முடிந்ததுடன் வழமை நிலைக்கு கொண்டு வரமுடிந்தது.
இருந்த போதிலும் மத்தள விமான நிலையத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள பாதிப்பிலிருந்து மீண்டெழுவது கடினம்
மத்திய வங்கி மீதும் விடுதலைப்புலிகள் அமைப்பு தாக்குதல் நடத்தியது. அவ்வமைப்பு கட்டிடத்தின் மீதே தாக்குதல் நடத்தியது. அங்குள்ள பணத்தைக் கொண்டு செல்லவில்லை.
எனினும் நல்லாட்சி அரசாங்கம் மத்திய வங்கி கட்டிடத்தின் மீது கைவைக்காது அங்குள்ள பணத்தை திருடிச் சென்றுள்ளது.எனவே விடுதலைப்புலிகள் அமைப்பு 30 வருட காலத்தில் ஏற்படுத்திய பாதிப்பைவிட நல்லாட்சி அரசாங்கம் கடந்த மூன்றரை வருடங்களில் அதிகளவான பாதிப்புகளை நாட்டுக்கு ஏற்படுத்தியுள்ளது.
தற்போது யாழ்ப்பாணம் கோட்டைப் பிரதேசத்திற்குள் நுழைவதற்கு இராணுவத்தினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது அது குறித்த யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.
அவ்வாறெனின் யாழ்ப்பாணம் கோட்டை இந்தியாவிற்குச் சொந்தமானதா? அல்லது தமிழ் ஈழத்திற்குரியதா?
அவ்விவகாரம் தொடர்பில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வடக்கில் தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் கை ஓங்கி வருவதனை அவதானிக்க முடிகிறது. மேலும் யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இராணுவத்தினரால் செல்ல முடியுமா இல்லை என்பது குறித்து இராணுவத் தளபதி பதிலளிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.