விஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமாம் கோத்தா.!
சர்வதேச ரீதியில் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்ட விடுதலைப் புலிகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருக்கும் கருத்து அரசியலமைப்பை மீறும் செயற்பாடாகும்.
எனவே அரசியலமைப்பை மீறியவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை அவருக்கு எதிராக எடுக்க வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்கட்சியில் அங்கம் வகிக் கும் மாகாண சபை உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமை பெறும் வைபவம் நேற்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு முன்னோக்கிய நகர்வை ஆரம்பித்துள்ளோம்.
இக்கட்சியின் இன்றைய அரசியல் வேலைத்திட்டத்தில் நானும் கலந்துகொண் டேன். ஆகவே இப்பயணத்தை முன்னோக்கிச் செல்லவுள்ளோம். மேலும் எமது அரசியல் முகாமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே அமைந்துள்ளது.
அத்துடன் எதிர்காலத்தில் அமையவுள்ள எமது அரசாங்கத்தில் தேசிய வளங்களைப் பாதுகாப்பது குறித்தும் நாம் நாடு தழுவிய ரீதியில் புத்திஜீவிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நாட்டை உரியவகையில் வழி நடத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.
2005, 2010, 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் எனது பங்களிப்பை வழங்கியுள்ளேன். அதேபோல் எதிர்காலத்திலும் எனது பங்களிப்பை வழங்குவேன். மேலும் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து செயற்படும் குழுவினர்.
எனவே எமக்குள் பேதம் இல்லை.
2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள அபேட்சகர் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவே அதனைத் தீர்மானிப்பார். மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் போட்டியிடுவதற்குப் பொருத்தமான உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.
அதில் மிகப்பொருத்தமானவரையே அவர் களமிறக்குவார்.
மேலும் சர்வதேச ரீதியில் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்ட விடுதலைப் புலி கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருக்கும் கருத்து அரசியலமைப்பை மீறும் செயற்பாடாகும்.
அதையிட்டு கவலையடைய வேண்டியுள்ளது. எனவே அரசியலமைப்பை மீறியவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை அவருக்கு எதி ராக மேற்கொள்ள வேண்டும். அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளாா்.