சம்பந்தரை இருத்திவைத்து விக்கி வழங்கிய பதிலுரை(காணொளி)
எனக்கில்லை. ஆனால் உண்மைகளை உள்ளபடி வெளிக்கொண்டுவராது இருக்க முடியாதவன் நான்” என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற தனது உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அவர், “கூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளதால் எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். இதுவரையில் சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விசுவாசமாகவே நான் நடந்து வந்துள்ளேன்.” எனவும் ஒற்றுமை என்பது கொள்கைக்காக இருக்க வேண்டும் என்றும் என்னை கடும்போக்காளர் எனச்சொல்லுபவர்கள் ஒருமுறை தேர்தல் விஞ்ஞாபனத்தை படித்துவிட்டு பேசவேண்டும் எனவும் வட.மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமையானது கொள்கை ரீதியிலேயே அமைய வேண்டும். தம்பி பிரபாகரன் அவர்கள் தனது இயக்கத்திற்கு எதிராக நடந்து கொண்ட கட்சிகள் பலவற்றைக்கூட ஒன்று சேர்த்து ஒரு அரசியல் கட்சியை உருவாக்கினார். அப்போது கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட கட்சிகள் சில கொள்ளை முரண்பாடுகளால் இன்று வெளியிலே நிற்கின்றார்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஏற்கப்பட்ட கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்துபோன எல்லாக் கட்சிகளையுஞ் சேர்த்து கூடிய வலுவுடைய ஒரு கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் உரைகள் அடங்கிய “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழா
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24.06.2018) நடைபெற்றது. நிகழ்வில் ஏற்புரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,
அவரது உரையின் சாராம்சம் வருமாறு,
“எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும்
அழுதாலும் தொழுதாலும் ஓர் அணுவும் மாறாதே”
என்ற ஓமார்கையாமின் கூற்றுப்படி நான் எழுதி எழுதி மேற் சென்றதையும், அவற்றைப் பேச்சுக்களாக வெளியிட்டதையும், எனது பேச்சுக்களை நூல் ரூபமாகக் கொண்டு வர எனது அனுமதியை நண்பர் இரத்தினசிங்கம் அவர்கள் கேட்ட போது தான் உணர்ந்து கொண்டேன். இத்தனை பேச்சுக்களை நான் பேசி வந்ததைக்கூடக் கவனிக்க நேரம் விடவில்லை. ஒரு விடயத்தில் இருந்து இன்னொன்று அதிலிருந்து மற்றொன்று என்று நதியோட்டம் போல் நாளாந்த வேலைகள் நடைபெற்று வந்ததால் என்ன செய்துள்ளேன், எதைப் பேசியுள்ளேன், எப்படிப் பேசியுள்ளேன் என்றெல்லாம் தரித்து நின்று அவதானிக்க நேரம் இடம் கொடுக்கவில்லை. சுமார் 15 தொடக்கம் 18 மணித்தியாலங்கள் வரை நாளாந்தம் வாரம் முழுவதற்கும் வேலை செய்யவேண்டியிருந்தது. எனினும் எனது மாணவர்கள் இவற்றை எல்லாம் அவதானித்தே நூலை அச்சிட அனுமதி கேட்டிருந்தார்கள்; நானும் மகிழ்வுடன் இசைந்தேன்.
குதர்க்கம் பேசும் மாணவனான சுமந்திரனுக்கு பதிலடி
எனது இன்னொரு மாணவர் நான் எழுதி வைத்து பேசிவருவதைக் குறையாகவும் குதர்க்கமாகவும் வர்ணித்து வந்துள்ளார். அவ்வாறு எழுதி வைத்து பேசாது விட்டிருந்தேன் எனில் இன்று இந்த நூல் வெளிவந்திராது. எனது முன்னைய நூல்களான இந்துசமய சிந்தனைகள், சலனமும் சரணமும், Some thoughts on Hinduism, Safeguarding security and sovereignty போன்ற நூல்கள் கூட எழுதி வைத்துப் பேசியவற்றை மையமாக வைத்து வெளிக் கொண்டு வந்த நூல்களே.
பத்திரிகைகளில் வெளிவந்த எனது தொடர் கட்டுரைகளும் பத்திரிகைகளில் வெளிவந்த எனது சிறுகதைகளும் இன்னமும் வெளிவரவில்லை. அண்மையில் நண்பரொருவர் அவற்றையும் வெளிக் கொண்டுவர அனுமதி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இன்னொருவர் நான் தமிழிலும், சிங்களத்திலும் எழுதிய நீதிமன்றத்தீர்ப்புக்களை வெளிக்கொண்டுவர அனுமதி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மற்றொருவர் என் தமிழிலான தீர்ப்புக்களை நான் மல்லாகம் நீதிமன்றத்தில் வெளியிட்டபோது அவற்றைக் கேட்க மட்டுமே தான் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அதற்கென அந்தக் காலத்தில் வந்ததாகத் கூறினார். கால நேரம் கருதி என் தீர்ப்புக்களின் தீர்மானத்தை மட்டும் மன்றில் பின்னர் வாசிக்கத் தொடங்கியதை ஒரு குறையாகக் கூறி அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.
விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும் போது நடக்க வேண்டியவை அந்தந்த தருணங்களில் நடப்பன என்பது எனது நம்பிக்கை. எப்போதோ முடிந்த காரியமாகத்தான் நான் இப்போது உங்கள் முன் பேசுகின்றேன். எனது ஆன்மீகப் பின்னணி அரசியலுக்கு ஒவ்வாது என்று பலர் கூறக் கேட்டுள்ளேன். அதை நான் வேறு விதமாகப் பார்க்கின்றேன். ஆன்மீகம் அற்ற அரசியல் வெறும் வாணிபமே என்பது எனது கருத்து. ஆன்மீகம் அற்ற அரசியல் மக்களைப் பிரிக்கும். ஆன்மீகத்துடனான அரசியல் மக்களை ஒன்றிணைக்கும். இன்று வாணிப அரசியலுக்கு எதிராகவே மக்கள் போராட வேண்டியுள்ளது.
எழுதி வாசிக்க என்ன காரணம் ?
நான் எழுதி வாசித்தல் பற்றி எனது மாணவர் குறையாகக் கூறியிருந்தார் என்று கூறினேன்.
எழுதி வாசித்தலினால் ஏற்படும் நன்மைகள் பற்றி எனது பிறிதொரு நூலில் நான் கூறியுள்ளேன். அதை மீண்டும் இங்கு கூறலாம் என்று நினைக்கின்றேன்.
1. உணர்ச்சி மேலீட்டில் கூறத்தகாதனவற்றைக் கூட்டங்களில் கூறாது விடுவதற்காக எழுதி வாசித்தல் பொருத்தமானதாகும்.
2. பிறமொழிக்கலப்பின்றிப் பேசுவதற்காக எழுதி வாசித்தல் பொருந்தும்.
3. எடுத்துக்கொள்ளப்பட்ட விடயம் பற்றிய உரிய ஆய்வுகள் முன்னமே நடந்து, பேசவேண்டிய பொருள் பற்றிய உள்ளடக்கம் எழுத்தில் ஏற்கனவே கைவசம் இருந்ததால் கூட்டங்களின் போது மனம் அல்லலின்றி ஆறுதலாக இருக்க உதவி புரிந்தது. இது எமது வயதிற்குத் தேவையாக இருந்தது.
4. பேச்சை நேரத்துக்கேற்றவாறு கட்டுப்படுத்த ஏதுவாக அமைந்தது. எப்பொழுதும் நேரகாலத்தினுள் என் பேச்சை முடிக்க இவ் வழி உதவி புரிந்தது. வழ வழ வென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டு போவதை இது தடுத்தது.
5. ஏதாவது ஒரு பேச்சு அன்றுடன் அழிந்து போகவிட நான் விரும்பவில்லை. அதாவது சிந்தித்து சிரத்தையுடன் தயாரித்த பேச்சுக்களை சிதிலம் அடையவிட நான் விரும்பவில்லை. அதற்காகவும் எழுதி வாசிப்பது முறையான ஒரு நடவடிக்கையாக எனக்குப்பட்டது.
நான் நீதிமன்றச் சேவையில் சேர்ந்து சட்ட விரிவுரையாளராகத் தொடர முடியாத காலத்திலும் எப்படி எனது முன்னைய சட்டவிரிவுரைகளை மாணவ மாணவியர் பிரதிகள் எடுத்துப் பாவித்தார்களோ அதே போல் நான் போனாலும் எனது பேச்சுக்கள் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்யட்டுமே என்ற எண்ணத்தில் எழுதி வாசித்து வந்தேன். ஆனால் சென்ற 30, 35 வருடங்கள் தான் நான் அவ்வாறு எழுதி வைத்து வாசித்து வந்துள்ளேன். அதற்கு முன்னையவை எழுந்தமானமாகப் பேசியவையே. அவை இப்போது மறைந்து போய்விட்டன. காத்திரமான பேச்சுக்கள் என்று அப்போது கூறப்பட்ட பல பேச்சுக்கள் காற்றோடு காற்றாக கலந்து போய் விட்டன.
சிங்கள மக்களின் சரித்திரம் பல விதங்களில் கற்களில், பாறைகளில் பிரதிபலிக்கின்றன. தமிழரோ இங்கு கற்பாறைகள் இல்லாததாலோ என்னவோ தமது எண்ணங்களை, வரலாறுகளைப் பின் வருபவர்களுக்கு விட்டு வைத்துச் செல்லத் தவறி விட்டார்கள். அன்றைய நாணயங்களிலும் ஒரு சில கல்வெட்டுக்களிலுமே அவற்றை நாங்கள் காணக் கூடியதாக உள்ளன. இதனால் இதுவரை எம்மைப் பற்றிய தவறான வரலாறு தெற்கத்தையர்களால் தெரியப்படுத்தி வரப்பட்டது. அண்மைய அகழ்வாராய்ச்சிகள் தான் உண்மையைப் புலப்படுத்தியுள்ளன. வரலாறுகளுக்கு கல்வெட்டுக்களில் எழுதப்பட்டவை எவ்வளவு முக்கியமோ எமது பேச்சுக்களை எழுதி வைப்பதும் அவ்வாறான நன்மை பயப்பன என்று கொள்ளலாம். எமது அன்றைய கால சிந்தனைகளின் பிரதிபலிப்புக்களாக அவை பரிணாமம் பெறக் கூடும் என்பதே அதன் காரணம்.
ஆகவே எழுதிவைத்து வாசிப்பது பல நன்மைகளைத் தந்து வந்துள்ளது. “செய்வன திருந்தச் செய்” என்ற கூற்றுப்படி என் பேச்சுகளில் வரும் சகல எழுத்து, பொருள், தட்டெழுத்துப் பிழைகளையும், குறியீடுகளையும் அப்போதைக்கப்போதே திருத்தி இறுதிப் பேச்சின் பிரதியை எடுத்து வைத்துப் பேசியதால் என் பேச்சுக்கள் அச்சேற்றப்படும் போது இலகுவாக அச்சேறின.
கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை.
எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.
எமது விசேட அதிதி கௌரவ சம்பந்தன் அவர்கள் காலம் தாழ்த்தி எம்முடன் இணைய சம்மதித்திருந்தாலும் அவர் வரவு எமக்கெல்லாம் பெருமையையும் மகிழ்வையும் ஊட்டி உள்ளது. என்னை இந்த முதலமைச்சர் பதவிக்குக் கொண்டு வந்தவர் அவரே. இதுவரையில் அவருக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விஸ்வாசமாகவே நான் நடந்து வந்துள்ளேன். கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை. ஆனால் உண்மைகளை உள்ளபடி வெளிக்கொண்டுவராது இருக்க முடியாதவன் நான். அதனால் எனக்கும் கட்சிக்கும் இடையில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பினும் என் நிலையைப் புரிந்து நடவடிக்கைகளில் இறங்கிவந்தவர் கௌரவ சம்பந்தன் அவர்கள். ஆனால் கட்சியில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துக் கொண்டுள்ளார்கள். எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.
கௌரவ சம்பந்தன் அவர்களின் வருகையாலோ என்னவோ கூட்டணி சேர்ந்த பலர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற வந்துள்ளனர். அவருக்கும் அவ்வாறான பங்குபற்றுனர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
பேராசிரியர் சிற்றம்பலம் என் பல வருட கால நண்பர். அவருக்குத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, முக்கியமாக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி பல இடர்களைக் கொடுத்து வந்துள்ளது என்பதே பரவலான கருத்து இங்கு. எது எவ்வாறு இருப்பினும் சொல்ல வேண்டியவற்றைத் துணிந்து சொல்லக் கூடிய தகைமை பெற்றவர் அவர். கொடுப்பனவுகளுக்காகக் கொள்கைகளைக் கைவிடாதவர் அவர். அவர் இந்தக் கூட்டத்திற்கு அணிகலன் சேர்த்துள்ளார்.
வலுவுடைய ஒரு கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்
அரசியல் ரீதியாக எமது எல்லாக் கட்சிகளின் ஒற்றுமையையே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். ஒற்றுமையானது கொள்கை ரீதியிலேயே அமைய வேண்டும். தம்பி பிரபாகரன் அவர்கள் தனது இயக்கத்திற்கு எதிராக நடந்து கொண்ட கட்சிகள் பலவற்றைக்கூட ஒன்று சேர்த்து ஒரு அரசியல் கட்சியை உருவாக்கினார். அப்போது கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட கட்சிகள் சில இன்று வெளியிலே நிற்கின்றார்கள். அது கொள்கை முரண்பாடுகள் காரணமாக இருக்கலாம். தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இருக்கலாம். ஆனால் ஒரு ஏற்கப்பட்ட கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் பிரிந்துபோன எல்லாக் கட்சிகளையுஞ் சேர்த்து கூடிய வலுவுடைய ஒரு கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது.
மத்தியின் முகவர்கள் இடையூறு விளைவிக்கக் கூடியவர்கள்
மத்தியில் கூட்டாட்சி மாகாணத்தில் தன்னாட்சி என்று கூறிவிட்டு மத்தியின் முகவர்களாக நடந்து கொண்டு வந்திருப்பவர்கள் எமது பயணத்திற்கு இடையூறு விளைவிக்கக் கூடியவர்கள். அதே போல் தேசியக்கட்சிகளின் அங்கத்தவர்கள் மத்தியின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் எமது உறவுகளாக இருந்தாலும் எமது பயணத்தில் சேரக்கூடியவர்கள் அல்ல.
சிலர் என்னைத் தீவிர போக்குடையவர் என்று கூறுகின்றார்கள். அவர்களை எமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்களை வாசிக்கக் கோருகின்றேன். சிலர் மக்களின் வாக்கெடுக்க அப்படித்தான் விஞ்ஞாபனங்களில் போடவேண்டும்; ஆனால் நாங்கள் அரசியல் செய்ய வேண்டுமென்றால் அவற்றையெல்லாம் புறம்தள்ளி வேலைசெய்ய வேண்டும் என்கிறார்கள். அவ்வாறானவர்கள் தான் என்னைத் தீவிர போக்குடையவர் என்று கூறுகின்றார்கள். அவ்வாறான போக்கை நான் கண்டிக்கின்றேன். மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவது பாவம் என்பதே எனது நிலைப்பாடு. விஞ்ஞாபனங்களில் கூறியிருப்பதை அசட்டை செய்வதாக இருந்தால் அவற்றை மாற்றி மக்களிடம் இருந்து பிறிதொரு முறை அவர்கள் ஆதரவைப் பெறுவது அவசியம்.
பதவி ஆசையில் அலைகிறார்கள்
அண்மையில் கட்சி நலஞ் சார்ந்து பல உடன்படிக்கைகள் உள்ளுராட்சி மன்றங்களில் எட்டப்பட்டன. கொள்கை ரீதியாக அவை நடைபெறவில்லை. பதவி ஆசையே முக்கிய குறிக்கோளாக இருந்தது. விரைவில் இவ்வாறான கொள்கை அடிப்படை தவிர்ந்த உடன்பாடுகள் சுய இலாபங்களுக்காக முரண்பாடுகளை வருவிப்பன என்று எதிர்பார்க்கலாம். விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறி எம்மை நாம் விற்கும் நிலைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் சுய கௌரவத்துடனான இணைந்த அரசியலே மத்தியிலும் மாகாணத்திலும் கடைப்படிக்க வேண்டியுள்ளது. வெளியார் குடியேற்றம், பௌத்த விகாரைகள் 131 கட்டப்படுதல் போன்ற எல்லாவற்றிற்கும் சுய கௌரவத்துடனான இணைந்த அரசியலை நாம் நாடாததே காரணம்.
விட்டுக் கொடுத்தே கிழக்கில் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்
சில தினங்களுக்கு முன் கிழக்கு மாகாணத்தில் இருந்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இது காறும் இருந்து வந்தவர்கள் இப்பொழுதும் இருந்து வருபவர்கள் கிழக்கு மாகாணத்தில் விட்டுக்கொடுத்ததால் ஏற்பட்ட கெடுதிகள் பற்றி எமக்கறிவித்தார்கள். நாம் வலுவாக இருந்து கொண்டு மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கலாம். ஆனால் நாம் பலம் அற்ற நிலையில் இருந்து கொண்டு விட்டுக்கொடுப்பது எம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமாகும் என்றார்கள். கிழக்கு மாகாணத்தின் தற்போதைய தமிழர் நிலை பரிதாபகரமாக மாறியிருப்பதை எடுத்துரைத்தார்கள். ஆகவே நாம் யாவரும் கூட்டுச் சேர வேண்டும்; ஒன்றுபட வேண்டும் எனும் போது அது கொள்கை அடிப்படையிலேயே நடைபெறவேண்டுமே ஒளிய கொள்வோனுக்குக் கொத்தடிமையாகும் விதத்தில் நடைபெறக் கூடாது.
தமிழ் மக்களின் அரசியல் நிலை இன்று பரிதாபகரமானதாக மாறியுள்ளது, கட்சி ரீதியாக நாம் பிரிந்துள்ளோம். ஆனால் எமது பல்வேறு கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் காணும் உள்ளடக்கங்களில் உள்ள முரண்பாடுகள் மிகச் சொற்பமே. 2013ம் ஆண்டு வெளிவந்த எங்கள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அடிப்படையாக வைத்தே நான் எனது கருத்துக்களைத் தெரியப்படுத்தி வந்துள்ளேன். அரசியல் யாப்புப் பற்றிய எமது வடமாகாணசபையின் முன்மொழிவுகளும் தமிழ் மக்கள் பேரவையால் அரசாங்கத்திற்குக் கையளிக்கப்பட்ட முன்மொழிவுகளும் அடிப்படையில் பலத்த முரண்பாடுகளைக் கொண்டிருக்க வில்லை. அவை எமது 2013ம் ஆண்டின் விஞ்ஞாபனத்தை அடிப்படையாகக் கொண்டவையே. பின் எதற்காக மாறிய கொள்கைகள் உடையவர்களுடன் சேருகின்றோம், ஒரே கொள்கையுடையோருடன் முரண்டு பிடிக்கின்றோம்? இங்கு தான் தமிழ் மக்களின் தனிப்பட்ட மனோநிலை வெளியாகின்றது. அடிப்படையில் நாங்கள் ஆணைக்குக் கட்டுப்பட ஆயத்தமாய் உள்ளோம். ஆனால் அயலவர்களை ஆதரித்து அரவணைத்து ஆணவத்தை அடக்கி வைத்து பயணம் செய்ய முடியாதவர்களாக இருக்கின்றோம்.
இது இங்கு மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் மக்களிடையே காணும் ஒரு குணாதிசயம். தன்னைவிட தன்னினத்தவன் எவனும் தகைநிலையடையக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றோம். அதனால் மாண்பு மிக்க எமது இனம் சீர்குலைந்து போவதையுஞ் சிறப்பிழந்து போவதையும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் கல்வி, கலாசாரம், சூழ்நிலை, உடல்நிலை, அனுபவங்கள் போன்ற பலவற்றின் ஊடாகத்தான் வாழ்க்கையைப் பார்க்கின்றோம். இதைத்தான் காலஞ்சென்ற தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் “We are all conditioned human beings” என்றார். அதாவது நாங்கள் யாவரும் சூழல் பலவற்றால் பாதிக்கப்பட்ட மனோநிலையில் வாழ்பவர்கள் என்றார். இதைப்புரிந்து கொண்டால் எம்மால் சேர்ந்து வாழ முடியும். போரினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் எண்ணங்களும் பார்வைகளும் தம்மை அந்த நிலைக்கு உள்ளாக்கியவர் மேலேயே கோபமாய் மாறியிருக்கும். மிகக் குறைந்த கல்வி அறிவு பெற்ற ஒருவர் குறைபாடுள்ள தனது அறிவின் மூலமாகத்தான் உலகைப் பார்க்கின்றார். உயர் சிந்தனைகளோ உயரிய கொள்கைகளோ அவரை அதிகம் ஆட்கொள்ள மாட்டா. ஆனால் அவருக்கும் தமது கருத்துக்களை வெளிப்படுத்த உரிமையுண்டு.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் வன்முறைதான் வளமான ஆயுதம் வாழ்க்கைக்கு, என்பார்கள். என் சிங்கள நண்பர் ஒருவர் பிரதி மந்திரியாக 1977ல் நியமிக்கப்பட்டார். அவரைப்பாராட்டிய பின்னர் “அதிகாரம் உன் கைக்கு வந்துவிட்டது. அடுத்து என்ன செய்யப்போகின்றாய்?” என்று கேட்டேன். உடனே அவர் தேர்தலுக்கு செலவழித்த பணம் யாவற்றையும் மீளப்பெறுவதே தனது இலட்சியம் என்றார். அப்பொழுதிருந்தே பதவியை வைத்து அவர் நன்றாக உழைத்தார். தேர்தல் செலவுகளுக்கும் மேலாகப் பணம் ஈட்டினார். பின்னர் அவர் ஜே.வீ.பி யினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே போல்த்தான் அரசியல் என்பது ஒரு வணிகம் என்ற நிலைப்பாட்டில் வளர்ந்த ஒருவர் அரசியலை வணிகமாகவே பார்ப்பார்;. தனக்கு அரசியலால் என்ன இலாபம் கிடைக்கும் என்றே அவர் பார்ப்பார். மக்கள் அவருக்கு ஒரு பொருட்டல்ல.
வெவ்வேறு மனோநிலைகள் கொண்ட இவர்கள் யாவரையும் ஒன்றிணைத்துச் செல்வது அவ்வளவு இலேசான காரியமல்ல. ஆனாலும் இன்றைய எமது தமிழ் மக்களுக்கு ஒற்றுமை அவசியம். ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியம். உயரிய கொள்கைகளை உள்ளடக்கி அவற்றின் அடிப்படையில் சுயநலம் களைந்து முன்னேறுவதே இன்று தமிழ் மக்களுக்கிருக்கும் ஒரேயொரு அரசியல்ப்பாதை என்று கூறி இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெற்றுக் கொள்கின்றேன்.
தொடர்புடைய முன்னைய செய்தி
ஒற்றுமையே பலமாம் விக்கியின் நூல் வெளியீட்டில் சம்பந்தன் அறிவுரை