"மஹிந்த அணியாகவே இனிவரும் காலங்களில் செயற்படுவோம்"
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உள்ளிட்ட சகல குழுக் கூட்டங்களையும் நிராகரித்து தாம் மஹிந்த ராஜபக்ஷவுடன் மாத்திரம் இணைந்து செயற்படவுள்ளோம்.
இனிமேல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியினர் இல்லை என அவ்வணியினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயா தீன அணியினர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினரை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பொதுஜன முன்னணி உறுப்பினர்களை சந்தித்தனர். இச் சந்திப்பு குறித்து வினவிய போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவிக்கையில்,
ஆட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் எமக்கும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் விரிசல் நிலைமைகள் ஏற்பட்டன. பிரதான செயற்பாடுகளில் நாம் முரண்படக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டன.
எனினும் இச் சந்திப்பின் மூலமாக எமது இரு தரப்பினரும் இணைந்து செயற்படக்கூடியதும் அடுத்தகட்டப் பயணம் ஒன்றினை தெளிவாக முன்னெடுக்கவும் கூடியதாக அமைந்துள்ளது.
அடுத்த கட்டமாக நாம் இரு தரப்பினரும் பொதுவான வேலைத்திட்டம் ஒன் றின் கீழ் செயற்படத் தீர்மானம் எடுத்துள்ளோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து அரசாங்கத்திலிருந்த நேரத்தில் எமது இரு தரப்பினரையும் இணைக்கும் செயற்பாடுகளையும் அரசாங்கத்தை பலப்படுத்தி தீர்வுகளை உருவாக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தோம்.
எனினும் அவை இரண்டுமே முடியாமல் போயுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எம்மால் ஒருபோதும் பயணிக்க முடியாது என்பது குறுகிய காலத்திலேயே தெரிந்துவிட்டது.
ஆகவே நாம் அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிரணியில் இணைந்துகொண்டோம்.
நாம் எதிர்க்கட்சிக்கு வந்தவுடன் இரு தோணிகளில் கால் வைக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. இரு கால்களையும் எதிர்க்கட்சியின் பக்கமே வைத்துகொண்டு செயற்படுகின்றோம்.
"நாம் அந்தப் பக்கமும் உள்ளோம் – இந்தப் பக்கமும் உள்ளோம் – ஜனாதிபதியுடனும் செயற்படுகின்றோம் – மஹிந்த அணியுடனும் உள்ளோம்" போன்ற கருத்துக்களை முன்வைப்பது தவறானது.
நாம் இனி அந்தப் பக்கம் செல்லப்போவதில்லை. மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்தே அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோமெனத் தெரிவித்துள்ளாா்.