தஞ்சை நினைவிடத்தைப் போல் முள்ளிவாய்க்காலிலும் வேண்டும் - சேனாதிராசா.!
முள்ளிவாய்க்காலில் நாமும் எம் இனத்தின் விடுதலைக்காய் உயிர் கொடுத்தவர்களுக்கு ஒரு நினைவிடத்தை அமைக்க வேண்டும்.
தஞ்சையில் அமைந்துள்ள நினைவிடம் போன்றாவது அனைவருக்கும் உரித்தாய் அனைவரும் நினைவு கூருவதற்காய் ஓரிடத்தில் ஒன்று கூடி அஞ்சலி செய்யவும், கண்ணீர் விட்டு ஆறுதல் பெறவும் இடமளிக்கப்படவேண்டும்.
அந்த அர்ப்பணிப்புடன் புனிதக் கடமையை நிறைவு செய்ய அனைவரும் மே 18இல் ஒன்று கூடுவோம் என்று அழைக்கின்றோம்.
இவ்வாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை. சோ.சேனாதிராசா கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடர்பில் அவர் அனுப்பிய செய்திக் குறிப்பில் விவரிக்கையில்....
இலங்கையில் தமிழ்த் தேசத்தின், தமிழ் மக்களின் விடுதலைக்காக பல தசாப்தங்களாக நடைபெற்ற போராட்டங்கள், நீதியானதும், நியாயமானதும், வரலாற்று நிகழ்வுகளில் பதிந்தவைகளாகவும் காணப்படுகின்றன.
இதற்கும் மேலாக இலங்கைப் பிரச்சினை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அறிக்கைகள், தீர்மானங்கள் இலங்கையில் தலையீடு செய்து இலங்கைப் பிரச்சினைகளுக்குக் குறிப்பாக தமிழினப் பிரச்சனைக்குத் தீர்வை எட்டுவதற்கும், உலக சந்தர்ப்பத்தை உருவாக்கியிருக்கின்றது.
அவ்வளவுக்கு மேலாக “மே” 18 நினைவு நிகழ்வுகளும் வரலாற்று முக்கியம் வாய்ந்ததாகியிருக்கின்றது.
போரால் அழிந்துபோன குறிப்பிடும்படியான இட ங்களையும், இடிபாடுகளையும் கூடப் பல நாடுகளில் அஞ்சலிக்கும் இடமாகப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனா்.
அந்தந்த நாடுகளில் குறித்த ஒரு நாளில் ஒன்றுகூடி துயர ஒலி எழுப்பிப் பின் பிரார்த்தனை செய்து துன்ப துயர நிகழ்வை இதயத்தில் வைத்து வணங்கியும், கண்ணீர் விட்டும் அஞ்சலி செலுத்துகின்றனர். பக்கத்தில் யார் நிற்கிறார்கள் என்று கூடப் பார்ப்பதில்லை.
அந்த நாடுகளில் அந்த நினைவிடங்களில், நினைவுத் தூபிகளில், கட்டமைப்புக்களில் பெயர், காலம், இடம் குறித்தும் வார்த்தைகளில், எண்ணம் முகிழ்ந்தவைகளையும், உண்மை நிகழ்வுகளையும் வரலாற்று வரிகளையும் பதிவு செய்துள்ளனர். நினைவிடத்தில் கட்டமைப்பில் வரி வடிவங்களில், பிரதிமைகளோடு இந்தத் தினத்தில் துயர் நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளனர்.
சிறுவர்கள், மாணவர்கள், முதியவர்கள், வலி சுமந்தவர்கள் போரில் ஈடுபட்டு அங்கங்கள் இழந்தவர்கள்கூட அத்தகைய இடங்களுக்குச் சென்று பிரார்த்திப்பதைப் பார்த்திருக்கிறோம். இலங்கையிலும் தம் இராணுவத்தினருக்கு அரசு நாடாளுமன்ற முன்றலில் நினைவிடம் அமைத்து நினைவு பேணி அஞ்சலி செலுத்துகிறது.
இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சைத் தரணியில் தமிழீழப் போர் நினைவிடந் திறந்தபோதும், பெரும் அஞ்சலி நிகழ்ச்சிகளிலும் பழ.நெடுமாறனோடு அவர் அழைப்பில் கலந்து கொண்டிருக்கிறோம்.
உலகத் தமிழர்களுக்கு அது ஓர் நினைவிடம். போருக்கு முன்னரும், போர்க் காலத்திலும், பின்னரும் இராணுவம் மற்றும் உளவுத்துறையினர் தடைகளும் கண்காணிப்புக்களும், இராணுவம் குவிக்கப்பட்ட நிலைகளிலும், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும்கூட கண்ணீர் அஞ்சலிகளையும், சுடர் ஏற்றும் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்வதுடன், கலந்துகொண்டிருக்கிறோம்.
முள்ளிவாய்க்காலில் 2009 முதல் எந்த இடத்தில் பொது இடமாக, நினைவிடமாக அஞ்சலியைச் செலுத்தலாம் என்பது பற்றி அந்தப் பிரதேசத்துக்குச் சென்று ஆராய்ந்திருக்கிறோம்.
ஓர் இடத்தைப் பொது இடமாகவும், ஒரு நாளைப் பொதுநாளாகவும் தீர்மானித்து “மே” 18ஆம் நாள் என்று அறிவித்திருக்கிறோம். யாருக்கும் தனியே அந்த இடங்களில் சொந்தங் கொள்ள இடமில்லை.
அந்த இடத்தின் புனிதம் வித்துடல்களின் விளைநிலமாய் அந்தத் தாகத்தின் எழுநிலமாய் எழுந்து நின்று ஆத்ம பலத்தை உருவாக்குகிறது.
இன்னும் ஆன்மீக நம்பிக்கையுள்ளோர் கடல், ஆற்று நீர் நிலைகளுக்குச் சென்று ஈமக்கடன் இயற்றுபவர்கள், தேவாலயங்களில், கோவில்களில் பிரார்த்தனை செய்வோர் அனைவரும் அந்தக் கடமைகளை நிறைவேற்றவும் விதி கொண்டுள்ளனர்.
வலி தாங்கி நிற்போரும், மனித நேயமிக்கோரும், இலட்சிய தாகங்கொண்டோரும், கல்வியாளர், மாணவர், எதிர்கால இளைய சமுதாயமும் ஈடுபாடு கொள்வது, சங்கமமாவது காலத்தின் தேவையாகும்.
அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஒன்று கூட முதலில் அழைப்பு விடுத்தமை மதிக்கப்பட வேண்டும்.
அந்த வேளைகளிலாவது எந்தக் கொள் கை, கோட்பாடுகளுக்கு, இலட்சியத்துக்காய் உயிர் கொடுத்தார்களோ வலி சும ந்தோமோ அந்த விடுதலைக்காய் அர்ப்பணிப்போம் என உறுதி எடுக்க வேண்டுமெனவும் அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்துள்ளாா்.