2020 வரை நல்லாட்சி தொடருமென - எச்.எம்.பௌசி.!
கூட்டு அரசில் ஒரு சில குழப்பங்கள் இருந்தாலும் இந்த அரசு மிகவும் பலமாக இருக்கின்றது. 2020ஆம் ஆண்டு வரை கூட்டு அரசே தொடரும். இவ்வாறு நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளாா்.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டில் கூட்டரசு உருவாகிய பின்னர் மக்கள் சமாதானத்துடனும் பொருளாதரத்தில் முன்னேற்றத்துடனும் வாழ் ந்து வருகின்றனர்.
இந்த அரசில் ஒரு சில சிறிய குழப்பங்கள் காணப்படுகின்றன.
எது எவ்வாறாயினும் நாட்டு மக்கள் நலனை கருத்தில் கொண்டு கூட்டு அரசைத் தொடர்வது என்று கடந்த சில தினத்துக்கு முன்னர் சந்தித்த அரச தலைவர் மற்றும் தலைமை அமைச்சர் ஆகியோர் கூட்டாக முடிவு எடுத்துள்ளனர்.
அத்துடன் அரசும் பலமாக இருக்கின்றது. நாட்டில் குழப்பங்களுக்கு இடமில்லை. வடக்கு மக்களாகிய நீங்கள் நாட்டில் நடந்த 30 ஆண்டுகால போர் காரணமாக பின்னோக்கிய நிலையில் காணப்படுகின்றீர்கள். நீங்கள் முன்னோக்கி பயணிக்கும் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
அதுவே உங்கள் கடமை.
எனவே இங்குள்ள மாணவ மாணவிகளே நீங்கள் அனைவரும் கல்வியில் சிறப்பான இடத்தில் இருக்க வேண்டும். இங்கு படித்த ஏராளமானவர்கள் தென்னிலங்கையில் மருத்துவர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் உள்ளனர். நீங்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.