" கடந்த 10 வருடங்களாக எனது மகனைத் தேடி அலைகின்றேன்"
எனது மகனை 10 வருடங்களாக தேடி அலைகின்றேன் என்று 2008 ஆம் ஆண்டில் காணாமல்போன மொரட்டுவை பல்கலைக்கழக மாணவனின் தந்தையார் நேற்று ஜெனிவாவில் தெரிவித்தார்.
மொரட்டுவை பல்கலைக்கழக மாண வன் கடந்த 2008 ஆம் ஆண்டு காணா மல் போன நிலையில் அவரது தந்தையார் தர்மகுலசிங்கம் தற்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நீதி கேட்டு ஜெனிவா வந்து ள்ளார்.
தொடர்ந்தும் கருத்துக் கூறுகையில்,
எனது மகன் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி லங்கா பெல் நிறுவனத்திற்கு பயிற்சிகளை பெற்றுக்கொள்ள சென்றிருந்தார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இப்போது பத்து ஆண்டுகள் ஆகின்றன, இக் காலத்தில் கொழும்பில் வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸ் தலைமை அலுவலகத்திலும், குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் முறைப்பாடுகள் செய்துள்ளோம்.
அதேபோல் அமைச்சர்கள் பலரிடம் தமிழ் அமைச்சர்கள் பலரிடமும் இறுதியாக பிரதமர் மற்றும் ஜனாதிபதி என அனைவரிடமும் முறைப்பாடு செய்துள்ளோம். காணாமல் போனோர் குறித்து கண்டறிய அமைக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவிலும் நான் சாட்சியம் வழங்கியுள்ளேன்.
முழுமையான விபரங்களை இதில் கொடுத்துள்ளேன்.
எனது மகன் காணாமல் போனமை குறித்து ஆதாரபூர்வமான தகவல்களை நான் சேகரித்துள்ளேன். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இயங்காத பொம்மையாக செயற்பட்டு வருகின்றது.
அதன் செயற்பாட்டால் எமக்கு எந்த நன்மையும் இல்லை. பொலிஸும் தகவல்களை பதிவு செய்து கொண்டுள்ளதே தவிர உண்மைகளை கூறவோ கண்டறியவோ முடியாத நிலைமை காணப்படுகின்றது. இதுவரை எந்த முன்னேற்றங்களும் இல்லை.
பூசா முகாமில் எனது மகன் உள்ளார் என்ற தகவல் கிடை த்து எனது மனைவி அங்கு சென்றிருந்தார்.
எனது மகன் குறித்து முழுமையான தகவல்களை கொடுத்து அவரை அடையாளப்படுத்திய பின்னர் பார்வையிட அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அதே நடைமுறையில் எனது மகன் இருக்கின்றார் எனக் கூறி அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் எனது மனைவி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிறிது நேரத்தின் பின்னர் யாருடைய தலையீடு என தெரியவில்லை எங்களை தடுத்து விட்டனர். பின்னர் அவர் பிரேத்தியேகமாக ஒரு சிறையில் இருப்பதாகவும் அங்கு எவருக்குமே பார்வையிட அனுமதி இல்லை எனவும் நாம் அறிந்துகொண்டோம்.
மீண்டும் நாம் சில முயற்சிகளை மேற்கொண்டோம். அங்கு உள்ள சில பொலிஸ் உறுப்பினர்களுக்கு எனது மகன் குறித்து தகவல்கள் தெரியுமென உறுதியாக கூற முடியும். எனது மகனின் தொலைபேசியை பாவித்தது ஒரு பொலிஸ் அதிகாரி என்பது நீதிமன்றத்தில் உறுதியாக்கப்பட்டுள்ளது.
அவரது பெயர் சரத் சந்திர என தெரிவித்துள்ளனர். எனக்கு மேலும் தகவல்கள் கிடைக்க வேண்டுமென அழுத்தம் கொடுத்து வருகின்றேன்.