வன்முறையின் பின்னணி என்ன?
நல்லாட்சி அரசாங்கம் மிக மோசமான நெருக்கடிக்குள்
சிக்கியிருக்கின்றது. உள்ளூராட்சித் தேர்தலில் அடைந்த பின்னடைவு, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு ஆப்பு வைக்கும் வகையில் நிலைமைகளை மோசமடையச் செய்தது. ஊழல், மோசடிகளைக் காரணம் காட்டி, பிரதமரைப் பதவி இழக்கச் செய்யும் வகையில் நம்பிக்கை இல்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அத்தகைய அரசியல் நிலைமையை சரிசெய்து, ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த சூழலிலேயே அம்பாறையிலும். அதனைத் தொடர்ந்து கண்டி பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்ந்தன.
அரசியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருந்திருந்த நிலையில், அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராகத் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் மனக்குறையாகும்.
அம்பாறையைத் தொடர்ந்து கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு சிறிய வாகன விபத்து, துரதிஷ்டவசமாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருடைய உயிரிழப்புக்குக் காரணமாகிப் போனது, அவருடைய உயிரிழப்பு பௌத்த தீவிரவாதிகளின் வெறியாட்டத்திற்கு வழியேற்படுத்தி, முஸ்லிம்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வன்முறைகள் பௌத்த தீவிரவாத சக்திகளின் பயங்கரவாதச் செயல்களாகக் கருதும் அளவுக்கு மோசமாகியது.
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளில் அந்தப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் உள்ள இருபத்தைந்து பள்ளிவாசல்கள், கல்லெறி தாக்குதல்களுக்கும் பெட்ரோல் குண்டுத் தாக்குதல்களுக்கும் இலக்காகி சேதமடைந்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினருடைய தரவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை நான்கு பள்ளிவாசல்கள், 45 வீடுகள் சேதமடைந்ததாகவும், 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். மார்ச் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் இரண்டு மூன்று தினங்களில் இந்தச் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. ஆயினும் இந்த வன்முறைகளினால் ஏற்பட்ட உண்மையான சேத மதிப்பீடுகள் அதிகாரபூர்வமாக உடனடியாகக் கண்டறியப்படவில்லை.
உலகில், முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளில் இலங்கையும் ஒன்று என சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் உலக நிலைமைகள் பற்றிய பிந்திய அறிக்கை பெப்ரவரி மாதப் பிற்பகுதியில் வெளியாகியிருந்தது. இந்த அறிக்கை வெளிவந்த சூட்டோடு அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றிருந்தன. அதனைத் தொடர்ந்து கண்டியில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் என்பன தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன.
தென்னாசிய பிராந்தியத்தில் நாடுகள் சட்டம் ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் சமயங்களைப் பின்பற்றுகின்ற உரிமை என்பவற்றைப் பேணுவதற்கு மக்களிடம் அழைப்பு விடுத்துள்ள அதேவேளை மத ரீதியான சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், சிவில் அமைப்புக்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறைகளையும் பயன்படுத்தி வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது. அத்தகைய நாடுகளில் இலங்கையையும் அந்த அறிக்கை உள்ளடக்கியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களுக்கு எதிராகக் கிளர்ந்துள்ள வன்முறைகள், உள்நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைத்து, மக்களின் அமைதியையும் இயல்பு வாழ்க்கையையும் மோசமாகப் பாதித்திருக்கின்றன. வன்முறைகளையும் வன்முறையாளர்களையும் கட்டுப்படுத்துவதற்காக அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி, கண்டி பிரதேசத்தில் தொடர்ச்சியான ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.
மனித உரிமை நிலைமைகளுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர்
யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் நிலவிய ஏதேச்சதிகார ஆட்சியில் மாற்றத்தைக் கொண்டு வந்த நல்லாட்சி அரசாங்கம், பேரினவாத மதத் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் இருந்து முஸ்லிம்களையும், அவர்களுடைய உடைமைகளையும் பள்ளிவாசல்களையும் பாதுகாப்பதற்காக, ஏழு நாட்களுக்கு அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்த நேரிட்டிருப்பது மிகவும் துரதிஷ்டவசமான நிலைமையாகும்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இலங்கை விவகாரம் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் முக்கிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ள நிலையில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
அது மட்டுமல்லாமல், யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு தசாப்த காலத்தை எட்டியுள்ள நிலையில், யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டு அதற்குரிய ஆணையாளர்கள் மார்ச் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மையாக என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிவதற்காகவே, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. இந்த அலுவலகம் உருவாக்கப்படுவதை பொது எதிரணியினரும், யுத்த வெற்றிவாதத்தில் மிதப்பவர்களும் கடுமையாக எதிர்த்திருந்தனர்.
யுத்தமோதல்கள் இடம்பெற்ற வடக்கிலும் கிழக்கிலும் ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்குப் பெருமளவில் இராணுவத்தினரே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிவது என்பது, வெற்றிக் கதாநாயகர்களாகக் கருதப்படுகின்ற இராணுவத்தினரைக் குற்றவாளிகளாகக் காட்டிக் கொடுப்பதற்கான ஒரு நடவடிக்கை என சுட்டிக்காட்டியே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய ஒரு பின்னணியில், இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொது அமைதிக்கான நெருக்கடி நிலை என்பது, இலங்கையின் மனித உரிமை நிலைமைகளுக்கு உருவாகியிருக்கின்ற ஒரு பேரிடர் என்றே கூற வேண்டியுள்ளது.
இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உறுதியான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குரல் கொடுத்துள்ள ஐ.நா. மன்றமும், சர்வதேச நாடுகளும் நாட்டில் அவசரகால நிலைமையை நீடிக்கவிட வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் விடுத்திருக்கின்றன. விடுதலைப்புலிகளை ஆயுத ரீதியாக மௌனிக்கச் செய்த வெற்றிப் பெருமிதத்தில் இராணுவத்தை முதன்மைப்படுத்திய நிர்வாக ஆட்சியை முன்னெடுத்திருந்த ஓர் அரசாங்கத்தை அமைதியானதொரு தேர்தல் புரட்சியின் மூலம் வீட்டுக்கு அனுப்பியிருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் நற்பெயரையும், நாட்டு மக்களும், சர்வதேசமும் அதன் மீது கொண்டிருந்த நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளையும் இந்த நிலைமை தவிடு பொடியாக்கியுள்ளது.
தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவின் பின்னர், கண்டியில் பதட்ட நிலைமைகள் தணிந்து மக்கள் தமது நாளாந்தத் தேவைகளுக்காக வெளியில் வீதிகளுக்கு வந்துள்ளார்கள். ஆயினும் வன்முறைகளினால் ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை இன்னும் முற்றாக நீங்கவில்லை. அச்சம் நீங்கி, இயல்பு நிலைமை ஏற்படுவதற்கு இன்னும் காலம் எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வன்முறைகள் பற்றிய நோக்கு
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலான அரசியல்வாதிகளும், அரசாங்கத் தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர். வெளிப்படையான பௌத்த தீவிரவாதப் போக்குடைய பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசாரதேரரும் தனக்கே உரித்தான வகையில் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.
கண்டியில் பல பிரதேசங்களுக்கும் நேரடியாகச் சென்று, வன்முறைகளின் மோசமான நிலைமைகளை நேரில் அவதானித்துள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீன் முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரியிருக்கின்றார். அது மட்டுமல்லாமல், வன்முறைகள் தொடர்ந்து இடம்பெறுவதனால், பொறுமை இழந்த நிலையில், நாங்களும் ஆயுதம் ஏந்த வேண்டுமா என்று வினவியிருக்கின்றார்.
இந்து, கிறிஸ்தவ மத அமைப்புக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும், இன மத அரசியல் பேதங்களுக்கு அப்பால் இந்த வன்முறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், இத்தகைய மத வெறுப்புணர்வு போக்கிற்கு முடிவுகட்டப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.
குறிப்பாக சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமாகிய டியூ குணசேகர இந்த வன்முறைகளை சர்வதேசம் பயங்கரவாதமாகவே பார்க்கப் போகின்றது என்று எச்சரிக்கை செய்திருக்கின்றார்.
முஸ்லிம்கள் தமிழர்களைப் போலல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக சிங்கள மக்களுடன் கலந்து வாழ்கின்றார்கள் என்ற இனப்பரம்பல் தொடர்பிலான யதார்த்தத்தையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். சிங்களவர்கள் மத்தியில் கலந்து வாழ்கின்ற முஸ்லிம்கள் மீது வன்முறைகளை மேற்கொள்வதென்பது நாடு முழுதும் வன்முறைகள் இடம்பெறுவதாக வெளிப்படும் என்பதையும், அது சாதாரணமாக சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான ஒரு பிரச்சினையாக நோக்கப்படமாட்டாது என்பதையும் அவர் வலியுறுத்தி கூறியிருக்கின்றார்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுப்படுத்தப்படாமல் மோசமடைந்தால், சர்வதேச ரீதியில் இலங்கைக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதையும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டுள்ள நிலைமை எங்களைப் பொறுத்தமட்டில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் இதனை சர்வதேசம் பயங்கரவாதப் பிரச்சினையாகவே பார்க்கப் போகின்றது. விடுதலைப்புலிகளுடன் நாங்கள் போராடியபோது, இந்தியாவின் தமிழ்நாடு மாத்திரமே எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனால் முஸ்லிம்களுடன் பிரச்சினை ஏற்படுவது என்பது சர்வதேச ரீதியில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். முஸ்லிம்களுடன் ஏற்படுகின்ற பிரச்சினையின் மூலம், உலகின் முஸ்லிம் நாடுகளான 54 நாடுகளின் எதிர்ப்பை நாங்கள் சந்திக்கின்ற நிலைமை ஏற்படும்.
முஸ்லிம் மக்களுடன் ஏற்படுகின்ற பிரச்சினையானது, தமிழ் மக்களுடன் ஏற்படுகின்ற பிரச்சினை போன்றதல்ல. ஏனெனில் தமிழ் மக்கள் நாட்டில் ஒருசில இடங்களிலேயே பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். ஆனால் முஸ்லிம் மக்கள் அப்படியல்ல. அவர்கள் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்கின்றார்கள். அதனால் முஸ்லிம்களுடன் பிரச்சினை ஏற்பட்டால், அது நாடு முழுதும் பரவக்கூடிய ஆபத்து இருக்கின்றது. அத்துடன் முஸ்லிம் நாடுகளின் எதிர்ப்புக்கு இலங்கை ஆளாகுமானால், பொருளாதார ரீதியாக பாரிய விளைவுகளை நாடு சந்திக்க நேரிடும். எனவே, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் - அசம்பாவிதங்கள் குறித்து, அரசியல்வாதிகள் கண்மூடித்தனமாக வார்த்தைகளை விடாமல் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்று இனவாதப் போக்கில் கருத்துக்களை வெளியிடும் அரசியல்வாரிகளை எச்சரிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
இது ஒரு புறமிருக்க, உள்ளூராட்சித் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ள அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவான ஓர் அரசியல் சூழலிலேயே, முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த மத தீவிரவாத சக்திகளின் வன்முறைகள் வெடித்திருக்கின்றன. இது, பலவீனமான அரசாங்கத்தை மேலும் பலவீனமடையச் செய்து மாற்றத்தை உருவாக்குவதற்கான ஒரு சதி நடவடிக்கையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் உண்மையான பின்னணி என்ன, இலக்கு என்ன என்பது உடனடியாகத் தெரிய வரவில்லை. இந்த வன்முறைகள் அரசியல் பின்னணியைக் கொண்டவைதானா அல்லது வெறுமனே மதவாத வன்முறைகளா என்பது பற்றிய உண்மைகள் நாளடைவில் வெளிவரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆமை வேகத்தில் வந்துள்ள காணாமல்போனோருக்கான அலுவலகம்
யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஒப்புதல் அளித்திருக்கின்றது. அதன் அடிப்படையில் நிலைமாறுகால நீதியை நிலைநாட்டும் வகையில் நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான நான்கு பொறிமுறைகளை உருவாக்கி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குதல், முரண் நிலைமைகள் மீள நிகழாமையை உறுதி செய்தல் ஆகிய நான்கு அம்சங்களில், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது. அந்த நான்கு பொறிமுறைகளில் முதலாவதாக காணாமல் போனோர் பற்றிய உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறையாக காணாமல் போனோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அப்போது வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றிருந்த அமைச்சர் மங்கள சமரவீர நிலைமாறுகால நிதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கையில் முதற் கட்டமாக காணாமல் போனோருக்கான அலுவலகம் உருவாக்கப்படும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால், எட்டு மாதங்களின் பின்னர் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதியே காணாமல் போனோருக்கான அலுவலகத்தை உருவாக்குவதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவையில் அங்கீகாரமளிக்கப்பட்டது. அப்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர, குறிப்பாக இந்த அலுவலகத்தை உருவாக்குவது மிகவும் அவசரமானது அவசியமானது என குறிப்பிட்டிருந்தார். நாட்டின் தென்பகுதியில் ஏற்பட்டிருந்த ஜேவிபியினருடைய ஆயுதக் கிளர்ச்சியினாலும், மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த யுத்த மோதல்களினாலும், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலானவர்கள் இங்கு காணாமல் போயிருப்பதாகவும் அதனால் இந்த அலுவலகத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் அப்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால் மிகவும் அவசரம் என அப்போது உணரப்பட்டிருந்த காணாமல் போனோருக்கான அலுவலகத்துக்கான சட்டமூலம் பொது எதிரணியினருடைய பலத்த எதிர்ப்புக்கும் அரசியல் சலசலப்புக்கும் மத்தியில், மூன்று மாதங்களின் பின்னர் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் திகதியே நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டது. அவ்வாறு சட்டமாக்கப்பட்ட போதிலும் 19 மாதங்களின் பின்னர், 2018 மார்ச் முதலாம் திகதி, ஒன்றரை வருடங்களுக்கு மேற்பட்ட காலம் கடந்த பின்பே அந்த அலுவலகத்தைச் செயற்படுத்துவதற்குரிய முக்கிய ஆளணியினராகிய ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஆயினும் இந்த ஆணையாளர்களுக்கான செயலகம் எங்கு செயற்படும், எவ்வாறு செயற்படும் எப்போதிருந்து அவர்கள் செயற்படத் தொடங்குவார்கள் என்ற தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
வன்முறைகளின் உண்மையான பின்னணி நாளடைவில் வெளிவரலாம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினையானது, வடக்கிலும் கிழக்கிலும் ஓர் எரியும் பிரச்சினையாகக் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகத் தீவிரம் பெற்றிருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தரவேண்டும், அவர்கள் எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள், அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் எனக் கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய இரத்த உறவினர்களாகிய பெண்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகப் பல இடங்களிலும் இரவு பகலாக வீதியில் அமர்ந்து போராடி வருகின்றார்கள்.
கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இனந்தெரியாத வகையில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள், யுத்தம் முடிவுக்கு வந்த போது, பாதுகாக்கப்பட்டு பொதுமன்னிப்பளிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் உறுதிமொழியை நம்பி, இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல் போயுள்ளவர்கள் பற்றி விசாரணை செய்வதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மட்டுமல்லாமல், இராணுவம் பொலிஸ் என பலதரப்பட்டவர்களிடமும் பாதிக்கப்பட்டவர்கள் பல தடவைகளில் முறையிட்டிருக்கின்றார்கள்.
ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய எந்தவிதமான தகவல்களும் அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்கள், இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் மட்டுமல்லாமல், அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தடுப்பு முகாம்களிலும் வைக்கப்பட்டிருந்தவர்கள் பற்றிய பெயர் விபரங்கள் அடங்கிய பெயர்ப்பட்டியல்களை வெளியிட வேண்டும் என்று அரசியல் ரீதியாகவும், பாதிக்கப்பட்டவர்களின் மகஜர்கள் மற்றும் நேரடி சந்திப்புக்களின் மூலமாகவும் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடிந்திருக்கின்றது.
இத்தகைய ஒரு பின்னணியில்தான் ஆமை வேகத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. காலம் கடந்த நிலையிலாவது இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டிருக்கின்றதே என்ற ஆறுதல் பலரிடம் எற்பட்டிருந்தாலும்கூட, காணாமல் போனோருக்கான அலுவலகம் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்புக்கு அமைய செயற்படுமா, அதன் மூலம் அவர்களின் துயரங்களுக்கு விடிவு ஏற்படுமா என்பது தெரியவில்லை.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் சூடு பிடிக்கத்தக்க வகையில் இடம்பெறவுள்ள நிலையில் யுத்த வெற்றிவாதத்தையும், யுத்த வெற்றிக்குக் காரணமாகிய இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தி அவர்களைத் தண்டிப்பதற்கு வழிசெய்வதற்கான பொறிமுறையாகவே காணாமல் போனோருக்கான அலுவலகத்தை நோக்குகின்ற போக்கையும் கொண்டவர்கள், இந்த அலுவகத்தின் செயற்பாட்டைக் குலைப்பதற்கும், அந்த விடயத்தில் இருந்து கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.
இந்த நிலையில், உள்ளுராட்சித் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ள அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவான ஓர் அரசியல் சூழலிலேயே, முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த மத தீவிரவாத சக்திகளின் வன்முறைகள் வெடித்திருக்கின்றன. இது, பலவீனமான அரசாங்கத்தை மேலும் பலவீனமடையச் செய்து மாற்றத்தை உருவாக்குவதற்கான ஒரு சதி நடவடிக்கையோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இதன் உண்மையான பின்னணி என்ன, இலக்கு என்ன என்பது உடனடியாகத் தெரிய வரவில்லை. இந்த வன்முறைகள் அரசியல் பின்னணியைக் கொண்டவைதானா அல்லது வெறுமனே மதவாத வன்முறைகளா என்பது பற்றிய உண்மைகள் நாளடைவில் வெளிவரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
-பி.மாணிக்கவாசகம்-