ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கக்கூடாது - ஐ.தே.கட்சி.!
நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்த பின் கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இல்லையேல் அரசியல் ரீதியாக தீர்க் கமான முடிவினை எடுக்க நேரிடு மென ஐக்கிய தேசியக் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்குழு கூட்டத்தில் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளனர்.
அத்துடன் அடுத்த ஜனாதிபதி தேர்த லின் போது பொது வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கக் கூடாதென ஐக்கிய தேசியக் கட்சி ஒருவரையே வேட்பாளராக களமிறக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனா்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இதன்போது தானும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறு கட்சியின் தலைவருக்கு எச்சரிக்கை விடுத்ததாக இராஜாங்க அமைச்சர் சுஜிவ சேனசிங்க ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.
அவர் மேலும் தெரிவிக்கையில்......,
நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கும் யோசனைக்கு ஐக்கிய தேசி யக் கட்சியின் செயற்குழு பூரண அங்கீகாரம் வழங்கியது. நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்த பின்னர் கட்சியில் மறு சீரமைப்பு செய்வதற்கு தீர்மானித்தோம்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடித்த பின் ஏப்ரல் மாதம் 5,6,7 ஆம் திகதிகளில் மறு சீரமைப்பு குறித்து கலந்துரையாடப்படும். அதன் பின்னர் பூரண மறு சீரமைப்பை மேற்கொள்வதாக தீா்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்பு இல்லா விட்டால் அரசியல் ரீதியாக தீர்க்கமான முடிவினை எடுப்போம் என நானும் எமது கட்சியினர் பலரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எடுத்துரைத்துள்ளனா்.
அத்துடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும். இனி மேலும் பொது வேட்பாளர்களை களமிறக்குவது எமது கட்சிக்கு நல்லதல்ல.
ஆகவே பொது வேட்பாளர்களுக்கு இனிமேல் ஆதரவு வழங்க கூடாது என அனைவரும் கோரினோம். எத்தகையவராக இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஒருவரையே ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.