நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க திட்டம் - ரணில்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை அல்லது நாளை மறுதினம் கூட்டு எதிரணி சமர்ப்பிக்கவுள்ளதாக கூறி வருகின்ற நிலையில் அதனை எதிர்கொண்டு தோற்கடிக்கப்பதற்கான வியூகங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு தரப்பினரிடமும் அரசியல் பிரதி நிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக்குழுவை சந்தித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக விரிவாக கலந்துரையாடியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அது மட்டுமன்றி ஏனைய கட்சிகளுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இந் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது எவ்வகையான தீர்மானத்தை எடுக்கப்போகின்றார்கள் என இதுவரையில் உறுதியாக அறிவிக்கப்படாத நிலையில் அவர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் காய்களை நகர்த்தி வருகின்றது.
அதுமட்டுமன்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க ஆதரவு வழங்குமாறு கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க ஆதரவு வழங்குமென ஐக்கிய தேசியக்கட்சி நம்புகின்றது.
எவ்வாறெனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்க்கின்றது. பிரதமரு க்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்கப் போவதாக கூட்டு எதிரணி தெரிவித்து வருகின்ற நிலையில் தேசிய அரசியலில் மீண்டும் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன வெற்றியீட்டியதை அடுத்தே பிரதமருக்கு எதிரான நம்பிக்கை யில்லாப் பிரேரணையை கொண்டுவர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீா்மானம் எடுத்துள்ளது.