இவ் வாரம் கூடுகிறது சு.க.வின் மத்திய குழு - சந்திம வீரக்கொடி.!
பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஆராய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இந்த வாரம் இடம்பெறும் எனவும் ஜனாதிபதியுடன் ஆழமாக கலந்துரையாடி பிரதமர் விவகாரத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளாா்.
பிரேரணையில் கைச்சாத்திடுவது குறித்து தனித்து தீர்மானம் எடுக்க முடியாதெனத் தெரிவித்துள்ளாா்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பின ர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவந்துள்ள நிலை யில் எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி குறித்த பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே அமைச்சர் தெரிவித்ததுடன் மேலும் கூறியதானது,
பிரதமருக்கு எதிராக தொடர்ச்சியாக நெருக்கடி நிலைமைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியே பிரதான காரணமாகும். அவர்களின் கொள்கைகள், செயற்பாடுகள் என்பவற்றில் பாரிய நெருக்கடி நிலைமைகள் உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களே மீண்டும் தமது நிலைப்பாட்டினை மாற்றியமைத்து பிரதமருக்கு எதிராக செயற்படவுள்ளதாகவும் ஊடகங்களில் இருந்து அறிய முடிகின்றது.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக நாம் இன்னமும் எந்தவித இறுதித் தீர்மனதையும் எடுக்கவில்லை. தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும். நேற்றைய தினமே (நேற்று முன்தினம்) ஜனாதிபதி பாகிஸ்தானிய விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை க்கு வந்துள்ளார்.
எனவே அடுத்த கட்ட நடவடிக்கைகள் இந்த வாரத்தில் முன்னெடுக்கப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இந்த வார நடுப்பகுதியில் கூடும். ஜனாதிபதி தலைமையில் கூடும் எமது கூட்டத்தில் பிரதானமாக பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஆராயப்படும்.
இதில் மத்திய குழுவாக என்ன தீர்மானம் எடுக்கப்படுகின்றதோ அதனையே நாம் சகலரும் முன்னெடுப்போம். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து கட்சிக்குள் இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றது. எனவே இறுதி நிலைப்பாடு குறித்து ஆழமாக ஆராய வேண்டிய தேவையும் உள்ளது.
இவ் விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக அல்லாது எவரும் தனிப்பட்ட தீர்மானங்களை முன்னெடுக்க முடியாது. எனினும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுத ந்திர கட்சியின் சிலர் கைச்சாத்திட்டுள்ளனர்.
இது கட்சியில் ஒழுக்க கோவைக்கு முரணானது. எனவே இது குறித்தும் மத்திய குழுக் கூட்டத்தில் ஆராய வேண்டும். எவ்வாறு இருப்பினும் பிரதமரை ஆதரிப்பதா இல்லையா என இன்னும் இஸ்திரமான நிலைபாட்டினை நாம் எட்டவில்லை எனத் தெரிவித்துள்ளாா்.