பிரேரணை குறித்த விவாதம் இன்று.!
ஜெனிவாவில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்துகிறது என்பது குறித்த விவாதம் மனித உரிமை பேரவையில் இன்று புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
அதன்போது, இலங்கை குறித்த இடை க்கால அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் வெளியிட உள்ளாா். இவ் அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதன் பரிந்துரைகளை கொண்ட சாரம்சமே எதிர்வரும் புதன்கிழமை வெளியாகவுள்ளது.
இந்த அறிக்கையை வெளியிட்ட பின்னர் இலங்கை தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் சிறப்புரையாற்றவிருக்கின்றார்.
ஏற்கனவே இலங்கை குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்த செயிட் அல் ஹுசைன் இலங்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சர்வதேச சமூகம் மாற்று வழிகளை ஆராயவேண்டுமென கேட்டிருந்தார்.
அதன்படி புதன்கிழமை நடைபெறவுள்ள விவாதத்தில் இலங்கை தொடர்பில் உரையாற்றவுள்ள செயிட் அல் ஹுசைன் இலங்கை விவகாரம் குறித்து மாற்று வழியை ஆராயுமாறு மீண்டும் சர்வதேச நாடுகளிடம் கோரிக்கைவிடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை விவாதத்தில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றவிருக்கின்றார்.
இதன்போது ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் அரசாங்கம் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்பதை திலக் மாரப்பன தனது உரையில் வெளியிடுவார். அதேபோன்று தாம் அரசியல் ரீதியில் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து இந்த உரையில் விளக்கமளிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த விவாதத்தில் உரையாற்றவிருக்கின்றனர். திலக் மாரப்பனவுடன் அமைச்சர்களான சரத் அமுனுகம, மற்றும் பைஸர் முஸ்தாபா இன்றைய விவாதத்தில் இலங்கையின் சார்பில் பங்கேற்கின்றனர்.
மேலும் சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இலங்கை குறித்த இந்த விவாதத்தில் உரையாற்ற உள்ளனர். 2015ஆம் ஆண்டு இலங்கைதொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரே ரணைக்கு இலங்கை அரசாங்கம் இனை அனுசரணை வழங்கியிருந்தது.
எனினும் கடந்த 2017ஆம் ஆண்டு வரை குறித்த பிரேரணையை முழுமையாக இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தாதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு மீண்டும் இரண்டு கால அவகாசத்திற்கு இந்த பிரேரணை உள்ளாக்கப்பட்டது.
அந்தவகையில் 2019ஆம் ஆண்டுக்குள் இந்தப் பிரேரணை அமுல்படுத்தப்படவேண்டும். எனினும் தற்போது கால அவகாசத்தில் ஒருவருடம் முடிந்துள்ள நிலையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படுத்தப்படாத சூழலே காணப்படுகி ன்றது.
இந்தப் பின்னணியிலேயே இன்றைய தினம் இலங்கை குறித்த விவாதம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் ஆரம்பமாகவுள்ளது.