ஜெனீவா மனித உரிமை பேரவையில் நாளை விவாதம்.!
இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் நாளை திங்கட்கிழமை ஜெனீவா மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளது.
இந்த விவாதத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் விசேட கருத்திட்டங்கள் அமைச்சர் சரத் அமுனுகம உள்ளிட்ட உயர் மட்ட தூதுக்குழுவினர் நாளை திங்கட்கிழமை ஜெனீவாவுக்கு வரவுள்ளனர். அத்துடன் தமிழ்ப் பேசும் மக்களின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டோர், புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.
எவ்வாறாயினும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் காலக்கிரம மீளாய்வுக்கு உட்பட்ட நாட்டின் பிரதிநிதி மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மாத்திரமே இந்த விவாதத்தில் உரையாற்ற முடியூம்.
இதன் போது ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற இலங்கை தொடர்பான காலக்கிரம மீளாய்வு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகள் விரைவாக அமுல்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் வலியுறுத்த உள்ளனர்.
இதேவேளை குறித்த பரிந்துரைகளை எவ்வாறு அமுல்படுத்துவோம் என்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இலங்கையின் சார்பில் இந்த விவாத்தில் உரையாற்ற உள்ளார்.
ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்த இந்த விவாதம் ஐ நா .மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாகவே நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதே வேளை 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக ஜெனீவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்தியது என்பது குறித்து ஆராயும் விவாதம் எதிர்வரும் புதன் கிழமை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
இந்த விவாதத்திலும் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். இந்த விவாதத்தின் போது ஐ .நா .மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பான இடைக்கால அறிக்கையினை வெளியிட உள்ளார்.
செயிட் அல் ஹூசைனின் அறிக்கை ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் அதன் சாரம்சத்தையே புதன் கிழமை முன்வைப்பார். இந்த விவாதத்தில் ஐ .நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் , சர்வதேச மன்னிப்பு சபை ,மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இலங்கை நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்க உள்ளனர்.
குறிப்பாக இதன் போது இலங்கை அரசாங்கம் ஜெனீவா பிரேரணையை உரிய முறையில் அமுல்படுத்த வில்லை என்ற குற்றச்சாட்டு சர்வதேச தரப்பினால் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
அதற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. எனினும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இலங்கை குறித்த பிரேரணையை உரிய முறையில் அமுல்படுத்தப்படாததால் 2019 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்கும் நோக்கில் மற்றுமொரு பிரேரனையை கடந்த வருடம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டது.
அந்த பிரேரணைக்கும் இலங்கை அனுசரணை வழங்கியது. எனினும் வழங்க ப்பட்ட 2 வருடகால அவகாசத்தில் ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில், அது தொடர்பான மீளாய்வு விவாதமே புதன்கிழமை நடைபெறவுள்ளது.