பிரிதானியாவில் இலங்கை தமிழர்கள் போராட்டம்(காணொளி)
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினமான இன்று பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இரண்டு முக்கிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
முன்னதாக பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் ஒன்று திரண்ட பிரித்தானியவாழ் தமிழர்கள் புலிக்கொடிகள் மற்றும் எதிர்ப்பு கோசங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு இலங்கையில் நடைபெறும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.
இதுபோன்று பிரித்தானிய பாராளுமன்ற முன்றலிலும் பெருமளவான தமிழர்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்புக்களை காட்டியதோடு போர்க்குற்றவாளி மகிந்த, காணாமல்போன எமது உறவுகள் எங்கே? எமது நிலம் எமக்கு வேண்டும், எமது தலைவர் பிரபாகரன் என்ற கோசங்களுடன் வானதிர தமது உணர்வுகளை வெளிப்படுத்தியதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களை நோக்கி இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரியான பிரியங்க என்ற அதிகாரி உங்களை கழுத்து வெட்டி கொல்ல வேண்டும் என்ற பாணியில் தனது கைகளால் சைகை காட்டியமை பெரும் கோபத்தை ஏற்படுத்தியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ் காடியனும் செய்தி வெளியிட்டுள்ளது.