அனைத்தும் பொய் நாடகமாம் - கெஹலிய
மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற அனைத்து விடயங்களும் பொய் நாடகங்களேயாகும். இந்த முறைக்கேட்டில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாப்பதற்கே முயற்சிக்கப்படுகின்றது என கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜானதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ள நிலை யில் அது தொடர்பில் கருத்து வெளி யிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கெஹலிய ரம்புக்வெல்ல எம்.பி. இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
மத்திய வங்கி பினைமுறி விவகாரத்தில் அனைத்து விடயங்களும் பொய் நாடகமாகவே காணப்படுகின்றன. இதில் தவறிழைத்தவர்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுப்பபதற்கான முயற்சிகள் நேர்மையான முறையில் இடம்பெறுவதாக தெரியவில்லை.
மாறாக சம்பந்தப்பட்டோரை பாதுகாப்பதற்கே முயற்சிக்கப்படுகிறது.
ஆரம்பத்திலிருந்தே இது தொடர்பான செயற்பாடுகள் அவ்வாறே காணப்படுகின்றன. ஆரம்பத்தில் 2015 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் ஆளுநராக வெளிநாட்டுப் பிரஜையொருவரை நியமிக்க பிரதமர் முற்பட்டபோது அமைச்சரவை அதனை எதிர்த்துள்ளது.
எனினும் தான் அதனை பொறுப்பேற்பதாக கூறி அந்த நியமணம் செய்யப்பட்டுள்ளது. இறுதியில் இவ்வளவு பெரிய மோசடி இடம்பெற்றுள்ளது.
ஆனால் தற்போது நடைபெறும் அனைத்து விடயங்களையும் பார்க்கும்போது சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதுகாப்பதற்கான பொய் நாடகமே நடைபெறுவதாக தோன்றுகின்றது எனத் தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணை அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு கடந்த 31 ஆம் திகதி கையளித்தது. அந்த அறிக்கையை வாசி த்து முடிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அது தொடர்பான தனது நிலை ப்பாட்டை கடந்த புதன்கிழமை விவரித்துள்ளார்.