பல்கலை மாணவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை !
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இயங்கிவரும் நிர்வாக பிரிவு கட்டடத்தினுள் அத்துமீறி நுழைந்து கடமைகளை மேற்கொள்ளவிடாத குற்றச்சாட்டின் பேரில் 59 மாணவர்களுக்கு அக்கரை ப்பற்று நீதிவான் நீதிமன்றினால் நாளை 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு நேற்று புதன்கிழமை அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த 05 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை இரத்துச் செய்யுமாறு கோரி கடந்த புதன்கிழமை முதல் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தினுள் தொடர்ச்சியான மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நடத்திவரும் மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை மாலை 04.00 மணியளவில் கட்டளை பிறப்பித்துள்ளது.
மாணவர்கள் அத்துமீறி நுழைந்து தொடர்ச்சியான மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நிர்வாக கடமைகளை செய்யமுடியாது போயுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம். நாஜீம் தெரிவித்தார்.
இதேவேளை பொறியியல் பீடம் செவ்வாய்க்கிழமை மாலை முதல் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகம் தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தி பொறியியல் பீட மாணவர்களை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டிருந்ததாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் மேலும் தெரிவித்தார்.
இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த பொறியியல் பீட மாணவர்கள் கணிசமானவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியுள்ளதோடு ஒரு குழுவினர் தொடர்ந்தும் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்திலிருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை நிர்வாக கட்டடத்திலிருந்து வெளியேறுமாறும் நீதிமன்றினால் கட்டளை பிறப்பித்துள்ளதோடு நிர்வாக கட்டடத்தில் அத்துமீறி நுழைந்த குற்ற ச்சாட்டுக்காகவும் அரச கடமைகளை மேற்கொள்ளவிடாது இடையூறு விளை வித்ததாக பொலிஸார் நீதிமன்றில் சுட்டிக்காட்டியதையடுத்து இம் மாண வர்களுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.