சத்தியம் என்றும் தோற்காது என - ஊவா மாகாண முதலமைச்சர்.!
பாடசாலை அதிபரை நான் மன்னிப்புக் கோருமாறு கேட்கவில்லை. அவராகவே வந்து வணங்கி புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறிச் சென்றார் என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
பதுளை தமிழ் மகா வித்தியாலய பெண் அதிபர் முதலமைச்சரினால் முழந்தாளிடச் செய்யப்பட்டு மன்னிப்புக்கோர செய்யப்பட்டதாக எழுந்து ள்ள குற்றச்சாட்டை அடுத்து நேற்று முதலமைச்சர் பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த அவரை பெருமளவிலான ஆதரவாளர்கள் ஒன்று கூடி வரவேற்றனர்.
தனது உத்தியோகபூர்வ வாசஸ் தலத்திற்கு அவர் வருகை தந்த போதும் பெருமளவிலான ஆதரவாளர்கள் அவரை வரவேற்றனர்.
இங்கு ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்,
குறிப்பிட்ட அதிபரை மன்னிப்புக் கேட்க நான் கோரவும் இல்லை. அவராகவே வந்து வணங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிவிட்டுச் சென்றார். இதனை முன்னிலைப்படுத்தி எனது தரப்பினர் அரசியல் இலாபம் தேடுகின்றனர்.
நான் தெய்வ நம்பிக்கை உள்ளவன். இன, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டவன். சத்தியம் என்றும் தோற்றதில்லை. அத்துடன் எனது விடயத்திலும் சத்தியம் வெல்லும். அது வரை காத்திருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.