ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சபையில் சமர்ப்பிப்பு.!
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறிகள் கொடுக்கல், வாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மற்றும் பாரிய இலஞ்ச ஊழல்மோசடிகள் சம்பந்தமான 34 தொகுதிகள் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை ஆகியன சபையில் சமர்ப்பிக்கப்பட்டன.
இதனையடுத்து ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில்
வாக்குவாதம் எழுந்ததையடுத்து இன்று பிற்பகல் 2.30 இற்கு நடைபெறும் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் விவாதம் குறித்த தினம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க முடியுமென சபாநாயகர் கரு ஜெயசூரிய சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில் பிற்பகல் ஒருமணிக்கு ஆரம்பமானது. சபாநாயகர் அறிவிப்பினை அடுத்து சபாநாயகரிடத்தில் கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் மூலம் கையளிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் இரண்டு அறிக்கைகளும் சபையில் சபைமுதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவால் சமர்ப்பிக்கப்பட்டன.
அதனையடுத்து அமைச்சின் அறிக்கைகள் சமர்ப்பிப்பு, வாய்மூலவினாவுக்கான கேள்வி நேரம், நிலையியற்கட்டளை 23இன் கீழ் இரண்டின் கீழான உரை ஆகியவற்றினை அடுத்து எழுந்த எதிர்க்கட்சிப் பிரதமகொரடாவும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க எம்.பி,
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறிகள் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமான 34தொகுதிகள் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை ஆகியன சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக சபாநாயகருக்கும், சாபாநாயகர் அலுவலகத்திற்கும் நன்றி கூறுகின்றோம்.
பிணைமுறிகள் சம்பந்தமான அறிக்கையில், பிரதமரின் தலையீடுகள், அரசாங்க ஊழியர்கள் சட்டத்தினை மீறும் செயற்பாடுகள் இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் தலையீடுகள் ஆகியன காணப்படுகின்றது.
அத்துடன் ஊழியர் சேமலாப நிதியில் 850கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகைக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஊழி யர் சேமலாபநிதியானது சாதாரண ஊழியர்கள் பணமாகும்.
அவர்கள் சேவையிலிருந்து விலகும்போது அடுத்த காலத்தினை கழிப்பதற்கான சேமித்த தொகையாகும். அதிலேயே இத்தகைய மோசடி இடம்பெற்றிருக்கின்றது. பிணைமுறிகள் மோசடியானது சாதாரண மக்களின் பணத்தினை மேல்தட்டு வர்க்கத்தினர் தமது அதிகாரத்தினை பயன்படுத்தி எவ்வாறு திருடுகின்றார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
சாதாரணமாக கடைகளில், வீடுகளில் பொருட்கள் பணங்கள் திருடப்படுவதையே நாம் திருட்டு என்று அர்த்தப்படுத்தி அறிந்திருக்கின்றோம். ஆனால் இங்கு சாதாரண மக்களின் பணத்தனை மிகவும் சூட்சுமமாக தமது அதிகாரங்களை பயன்படுத்தி தந்திரமாக திருடியமையை இவ் அறிக்கை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
அதற்கமைவாக நாம் இந்த பாரிய மோசடிகுறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வலியுறுத்துகின்றோம். இருப்பினும் சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றச் செயற்பாடு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியனவற்றின் ஊடாகவே குற்றவாளிகளை தண்டிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
இந் நிறுவனங்கள் அனைத்தும் அரசியல்மயப்படுத்தப்பட்டு அல்லது அரசியல்வாதிகளின் அதிகாரங்களுக்குள் இருப்பதானால் இவற்றினால் நியாயமான நடவடிக்கைகளை அரசியல்வாதிகளுக்கு எதிராக எடுக்க முடியும் என்று நாம் கருதவில்லை.
அந் நிறுவனங்களிடத்தில் நியாயமான நடவடிக்கையை எதிர்பார்ப்பதென்பது திருடனின் அம்மாவிடம் மைவெளிச்சம் பார்ப்பது போன்றதாகவே அமையும். வழக்கும் பௌத்ததேரரின் உடையது. பொருளும் பௌத்த தேரரின் உடையது என்று நாம் உதாரணத்தினை கூறுவதுண்டு.
தற்போது தான் அதனை பார்க்கமுடிகின்றது.
இதேவேளை பாரிய ஊழல்மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் 34தொகுதிகள் அடங்கிய அறிக்கை கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் சம்பந்தமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பொதுமக்களின் பணம் மிகமோசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி, அவருடைய அதிகாரத்தினை பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்த முறைமை, வீடமைப்பு அமைச்சில், அவன்காட் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள், தேர்தல் காலத்தில் அரச வளங்கள் பயன்படுத்தப்பட்ட முறை போன்ற வியங்கள் எல்லாம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
இச்சமயத்தில் எழுந்த சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகரே, அநுர எம்.பி கூறுவது போன்று எந்தவிடயங்களும் இல்லை. அவர் திசைதிருப்பும் வடிவில் விசாரணை அறிக்கை குறித்த விடயங்களை முன்வைக்கின்றார்.
நாம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு தயாராவே உள்ளோம். நாம் அச்சப்படவில்லை. அது குறித்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிப்போம் என்றார்.
இதனையடுத்து தொடர்ந்த அநுரகுமார திஸநாயக்க எம்.பி, கட்சித்தலைவர்கள் கூட்ட த்தில் விசாரணை அறிக்கைகள் சம்பந்தமாக கருத்துக்களை சபையில் கூறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதனை மையப்படுத்தியே நான் கருத்துக்களை முன்வைத்தேன். சபை முத ல்வர் குழப்பமடையவேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் முன்னால் மோசடிகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக்க கூறுகிறார்.
நான் பொதுமக்கள் மத்தியில் அது குறித்து கூறுவதற்கு தயாராக இருக்கும் அதேநேரம் இந்த சபையில் திருடர்கள், மோசடிக்காரர்களுக்கு முன்னால் வைத்து அந்த விடயங்களை குறிப்பிடவே அதிகம் விரும்புகின்றேன்.
ஆகவே இழுத்தடிப்புக்களைச் செய்யாது உள்ளுராட்சி தேர்தலுக்கு முன்னதாக இந்த விசாரணை அறிக்கைகள் குறித்து விவாதம் செய்யவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.
தொடர்ந்து எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைகளத்திடமும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் அறிக்கை குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெ டுக்கும்.
நாம் விவாதத்திற்கு அஞ்சவில்லை என்றார்.
இதனையடுத்து தலையீடு செய்த சபாநாயகர் கருஜெயசூரிய, நாம் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இவ் விடையம் சம்பந்தமாக கலந்துரையாடுவோம். இந்த விடையத்தினை நீடித்து சென்று விவாதிக்க முடியாது.
கட்சித்தலைவர்கள் சிறு விளக்கத்தினையே அளிக்கமுடியும் என்றே தீர்மா னம் எடுத்திருந்தோம் என்பதை நினைவு படுத்தவிரும்புகின்றேன். அதன் பிர காரம் நளைய தினம் (இன்று) கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிப்பதாக தெரிவித்துள்ளார்.