அரசிடம் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை ஒப்படைப்பதில் குற்றச்சாட்டு - விமல் வீரவன்ச!
நாட்டின் நிர்வாகத்தினை முறையாக பரிபாலனம் செய்ய முடியாத தேசிய அரசாங்கத்திடம் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை ஒப்படைப்பது அபா யகரமானதொரு செயற்பாடு என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்.........
தற்போது உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது. நாட்டின் பிரதான இரு கட்சிகளும் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெறுவதாக மக்கள் மத்தியில் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி வருகின்றன. நல்லாட்சி அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் வெறுப்புக்களே அதிகரித்து காணப்படுகின்றன.
கடந்த இரண்டு ஆண்டு காலமாக நாட்டில் பல விதமான பிரச்சினைகளுக்கு பொது மக்கள் முகம் கொடுத்து ள்ளனர்.
பெற்றோல் தட்டுப்பாடு, ரயில் போக்குவரத்து ஊழியர்களது வேலை நிறுத்தப் போராட்டம் போன்றவற்றில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மஹி ந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் 350ரூபாவாக காணப்பட்ட உரம் நல்லாட்சி அரசாங்கத்தின் நிர்வாகத்தில் 2500 ரூபாவாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்க்கை செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.
விவசாயத்திற்கு தேவையான உரத்தினை இறக்குமதி செய்வதில் சூழ்ச்சிகள் இடம் பெற்று வருகின்றன. இலங்கையில் வழமையாக இறக்குமதி செய்யப்படுகின்ற உரத்திற்கு பதிலாக புதிய வகை உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
இலங்கையின் விவசாயத்திற்கு பாவிக்கப்படும் உரத்தின் தன்மையுடன் ஒப்பிடுகையில் இதன் தரம் மேலதிகமானது என விவசாய திணைக்களம் அறிவித்தும் 76000மெற்றிக் தொன் உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளமை தேவையற்ற செயற்படாகும்.
இதற்கு நிதி அமைச்சு அனுமதி வழங்க மறுத்தபோதும் அமைச்சரவையை அவசரமாக கூட்டி இறக்குமதிக்கான அனுமதியை பெற்றுக்கொண்டமை நிதியமைச்சின் பலவீனத் தன்மையினை வெளிப்படுத்துகின்றது.
குறிப்பிட்ட உரம் இறக்குமதி செய்யப்படும் பொழுது அதன் விலையில் மாற்றம் ஏற்படும் அதிகமான விலையினை நிர்ணயிக்கும் பொழுது சாதாரண விவசாயிகளுக்கு கொள்வனவு செய்யமுடியாத நிலைமை உருவாகும் இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர் இதுவா நல்லாட்சி.?
ஜனவரி மாதத்தின் இறுதியில் குறிப்பிட்ட உரவகைகள் இறக்குமதி செய்யப்படுமாயின் நாட்டில் விவசாயத்துறை பெரிதும் பாதிக்கப்படுவதால் அதன் தாக்கம் நேரடியாக விவசாய குடும்பங்களையே சேரும். இவ்வாறான பிரச்சினைகளின் மத்தியிலே நல்லாட்சி அரசாங்கம் நிர்வாகத்தினை மேற்கொண்டு வருகின்றது. பிரச்சினைகளின் தீர்விற்கு வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் வெறுமனே வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன.
இதனடிப்படையில் உள்ளூராட்சி அதிகாரங்களும் தேசிய அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் சென்றால் நாட்டின் எதிர்காலமும் தனிமனித வாழ்வும் மிக அபாயகரமானதாக மாறுவது நிச்சயம். இதற்கான மாற்று நடவடிக்கை மக்க ளிடமே உள்ளதெனத் தெரிவித்துள்ளார்.