"விஸ்வரூபம் எடுத்து நின்றதை விழிகள் விரிய வியந்தவன் நான்"
மண்ணால் மனிதர்களும் மனிதர்களால் மண்ணும் பரஸ்பரம் மேன்மையுறுதலும், அதனைக் காலம் தன் குறிப்பேட்டில் பதிவு செய்தலும் மரபாகவே இருந்து வருகிறது.
இந்த மரபையொட்டி, காய்தல் உவத்தலின்றி ஒரு கணக்குப் போட்டுப்பார்க்கையில் ஸ்ரீரங்கத்து மண்ணில் வேர்கொண்டு, தொல்லுலகின் பல்வேறு கங்குகளில் கிளை பரப்பிய கீர்த்திமிகு விருட்சங்களை என் புத்திக்கு எட்டிய வரையில் படம்பிடித்து ஒரு புகைப்பட அல்பமாகவே நினைவு அலுமாரியில் அடுக்கி வைத்திருக்கிறேன்.
இந்த அல்பத்தில் அன்றைய மனிதர்களும் அகப்படுகிறார்கள். இன்றைய மனிதர்களும் அகப்படுகிறார்கள்.
ஆகவே என்னுடைய ஊருக்குப் பெருமை சேர்த்தவர்களை நான் எண்ணிப்பார்க்கை யில், திருவரங்கத்து மண்ணின் மேன்மை எனக்குத் தெள்ளத்தெளியப் புலனாகிறது.
இத்தகு மண்ணின் பெருமையைப் பேச வரும்போது, இந்த மண்ணின் மணமுள்ள ஒரு பெண்ணின் பெருமையையும் பேச வேண்டும் என்று நான் பெரி தும் விரும்புகிறேன்.
ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு முன்னதாக எனது நண்பர் வி.கோபாலகிருஷ்ணனோடு தியாகராயநகர், சிவஞானம் தெருவில் ஒரு வீட்டுக்கு நான் செல்ல நேர்ந்தது.
அந்த வீட்டின் குடும்ப நண்பர் கோபி, அந்த குடும்பத்தின் தலைவியிடம், இவர் பேரு வாலி. சினிமாவில் பாட்டுகள் எழுதியிருக்காரு. சொந்த ஊர் ஸ்ரீரங்கம் என்று கோபி சொன்னதும், எங்க பூர்வீகமும் ஸ்ரீரங்கம்தான் என்று அந்த அம்மையார் முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க எனக்கு முகமன் கூறினார்.
அன்று நெடுநேரம் நானும் கோபியும் அந்த அம்மையாரோடு பேசிக்கொண்டிருந்தோம். அப்போது சகோதரி திருமதி.அம்புஜமும் அவரது கணவர் வெங்கட்ராமனும் உடனிருந்ததாக ஒரு நினைவு.
திருமதி அம்புஜம் தான் வித்தியாவதி என்னும் பெயரில் திரைப்படங்களில் பங்குபற்றியவர். கோபியுடன் சென்று நான் சந்தித்த அம்மையார் தான் திருமதி சந்தியா. அவரது மகள்தான் ஜெயலலிதா.
ஆயிரம் விழுதுகள் பரப்பும், ஆலமரத்தைச் சின்னஞ்சிறு விதைக்குள் சிறை வைப்பது போல், அளப்பரிய கீர்த்தியையும், நேர்த்தியையும் இந்தப் பெண்ணுள் இறைவன் பொதிந்து வைத்திருக்கிறான்.
செல்வி.ஜெயலலிதாவின் அறிவையும் ஆற்றலையும் ஆரம்ப நாட்களிலிருந்தே துலாக்கோல் போல் துல்லியமாக எடை போட்டவன் நான். இருவரும் ஒரே துறையில் தொழில் புரிந்ததால் அவரை ஓரளவு அறிதல் எனக்குச் சாத்தியமாயிற்று.
படவுலகத்தின் புகழ் கிரீடத்தை அவர் சுமந்திருந்த போது பாட்டும், பரதமும் பள்ளித்தோழிகள் போல் அவர் பக்கத்தில் இருந்தன.
எதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் பற்றும், பற்றியதை விடாமல் சாதித்துக்காட்டும் சாதுரியமும், கனல் வளையத்திற்கிடையே கற்பூரமாகச் சிக்கிக்கொண்டாலும் மேனி காயம்படாது மீண்டுவரும் வித்தையும் அவருக்கு இறை வன் அருளிய கொடையாக இருந்ததால்தான் கோடம்பாக்கத்திலிருந்து கோட்டைக்கு வந்து கொலுவிருத்தலும் கோலோச்சுதலும் அவருக்குக் கைவந்த கலையாயிற்று.
இளம் வயதில் தாயை இழந்த ஒரு பெண்மணி தனித்து நின்று அரசியலில் இறங்கி, ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடர்படாது தமிழ் கூறும் நல்லுலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் தலைவியாகக் கிளர்ந்து, தகத்தகாயமாக விளங்கியதை எண்ணுங்கால், அப்போதே சொன்னானே பாரதி என்று அவனது புதுமைப்பெண்ணைப் பற்றிய தீர்க்க தரிசனம் நம்கண்களுக்குப் புலனாகின்றது.
ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு குடும்பத்தின் வழித்தோன்றல், அதுவும் ஒரு பெண் இப்படி ஒரு விஸ்வரூபம் எடுத்து நின்றதை விழிகள் விரிய வியப்போடு அப்போதே பார்த்தவன் நான்.
1984 இல் பெரிய புள்ளிகள் என்னும் என் கவிதை நூல் பிரசுரமாகியுள்ளது.