சர்வதேசத்தில் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகள் செயற்படுவதாக - ஜனாதிபதி
எமது மக்கள் மத்தியில் நிலவிய சமூக முரண்பாடுகளே ஆயுத போராட்டம் வரையில் சென்றடைந்தன. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் நாட்டினை பிளவு படுத்தும் சக்திகள் சர்வதேச ரீதியில் இன்றும் செயற்பட்டு வருகின்றன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இனி ஒருபோதும் நாட்டில் ஒரு யுத்தம் ஏற்படாத யதார்த்தமானதும் நிரந்தரமான ஒரு சமாதானத்தை உருவாக்கும் நாட்டினை கட்டியெழுப்புவதே எமது ஒரே நோக்கமாகும். இன்னொரு யுத்தத்திற்கு இடமளிக்க முடியாது.
அவ்வாறான ஒரு நாட்டினை உருவா க்க சகல தரப்பினரும் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சகவாழ்வு குறித்த சர்வமதத் தலைவர்களை ஒன்றிணைத்த மத சகவாழ்வு மாநாடு நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.
மேலும் உரையாற்றுகையில்,
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமை ச்சின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநா ட்டில் பெளத்த மாநாயக்க தேரர்கள், இந்து மதத் தலைவர்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைவ ர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சிவில் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
மத சகவாழ்வு மாநாடு ஒன்று கூட்டப்பட்டு சமூக ஒற்றுமையினை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகின்றேன். அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சின் மூலமாக இவ்வாறு ஒரு நகர்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மிகவும் வரவேற்கத்தக்கது.
மிக நீண்ட காலமாக இந்த நாட்டில் மூவின மக்கள் மத்தியில் பல்வேறு முரண்பாடுகள், கோபங்கள், சந்தேகங்கள், அதிருப்திகள் இருந்து வந்துள்ளன.
இதன் விளைவாக மூன்று தசாப்தகால யுத்தம் ஒன்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இது இறுதியில் ஆயுதத்தின் மூலமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நாட்டினை பிளவுபடுத்த போராடிய பயங்கரவாதிகள் ஆயுதத்தின் மூலமாக தோற்கடிக்கப்பட்டனர். எனினும் யுத்தம் தோற்கடிக்கப்பட்ட போதிலும் யுத்தத்தின் மூலமாக உருவான கருத்தியலை இன்னும் எம்மால் தோற்கடிக்க முடியாதுள்ளது.
இந்த நாட்டில் உள்ளே இவ்விடயங்கள் பேசப்படாத போதிலும் எமது நாட்டிற்கு வெளியில் சர்வதேச ரீதியில் பிரிவினைவாத கொள்கையும் கருத்தியலும் உள்ளன. இதனை ஆயுதத்தினால் தோற்கடிக்க முடியாது. ஒரு கருத்தியலை தோல்வியடைய செய்ய வேண்டும் என்றால் அதை இன்னொரு கருத்தியலினால் தான் செய்ய முடியும்.
இந்த கருத்தியல்களை கலந்துரையாடல், ஆலோசனைகள் மூலமாக மாத்திரமே முன்னெடுக்க முடியும். அந்த நிலைப்பாடு இன்று படித்த சமூகத்தின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே நாம் சரியான செயற்பாடுகளை முன்னெடுக்க முன்வரவேண்டும்.
இதில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பும் வழிகாட்டலும் மிகவும் முக்கியமானதாகும். இதில் பெளத்த விகாரை, இந்துக் கோவில், கிறிஸ்தவ ஆலயம், இஸ்லாமிய பள்ளிவாசல் ஆகிய எதிலும் முரண்பாடுகள் இருக்காதென நான் நம்புகிறேன். மதத் தலைவர்கள் எப்போதுமே சரியான விடயத்தினையே சமூகத்தில் முன்வைத்து வருகின்றனர்.
எமது நாட்டில் சகவாழ்வு இல்லாத காரணத்தினால் தான் இன்றும் நாம் சகவாழ்வு பற்றி பேசி வருகின்றோம். இதற்கு சந்தேகமும், நம்பிக்கை இன்மையும், முரண்பாடுகளுமே காரணமாக அமைகின்றன. ஆகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையையும், சந்தேகமற்ற போக்கினையும் முரண்பாடுகள் இல்லாத உறவினையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.
இதில் தடைகள் உள்ளன. சகல தரப்பிலும் கடும்போக்காளர்கள் உள்ளனர்.
இன்று உலகம் எதிர்கொள்ளும் சகல யுத்தங்களுக்கும் இதுவே காரணமாக அமைகின்றது. இது மனித பரிணாமத்தில் இருந்து இன்றுவரை உள்ளது. எனினும் இந்த முரண்பாடுகளை தோற்கடிக்க வேண்டும்.
அதில் மதத் தலைவர்களின் தத்துவங்கள், போதனைகள் மிக முக்கிய இட த்தை வகிக்கின்றன. சமூகத்தில் சகவாழ்வு பற்றிய ஒரு பிரச்சினை உள்ள கார ணத்தினால் தான் இவ்வாறான மாநாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. முன்னேற்றம் கண்ட நாடுகளில் ஆயுதம் ஏந்த விரும்பமாட்டார்கள். அவர்கள் சமூக நோக்கில் நம்பிக்கை வைத்துள்ளனர்.
நாம் நல்லிணக்கம், சகவாழ்வு பற்றி பேசும் போது சிலர் எங்களை ஏளனம் செய்கின்றனர். எனினும் நாம் மகிழ்ச்சியடைய சில காரணிகள் உள்ளன. இன்று மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நாட்டின் நல்லிணக்கம் சகவாழ்வு பற்றி அறிந்துள்ளனர்.
அனைவரதும் உரிமைகள் குறித்து பெரும்பாலான மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.
இதில் மதத் தலைவர்களின் பூரண ஒத்துழைப்பு எம்மை பலப்படுத்தும். சமூகத்தையும் ஒன்றிணைக்கும். அரசாங்கமாக நாம் நாட்டினை கட்டியெழுப்ப சகல நட வடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.
சரியான கோணத்தில் எதிர்காலத்தை பார்க்கும் சூழலை நாம் அமைக்க முயற்சிக்கின்றோம். சகோதரத்துவத்துடன், அமைதியாக வாழக்கூடிய சூழலை நாம் எதிர்பார்க்க முடியும்.
யுத்தம் ஒன்று இல்லாத நாட்டினை எம்மால் உருவாக்க முடியும். அதற்கான நகர்வுகளை முன்னெ டுப்போம். இனி ஒருபோதும் ஒரு யுத்தம் ஏற்படாத ஒரு யதார்த்தமானதும் நிரந்தரமான ஒரு சமாதானத்தை உருவாக்கும் நாட்டினை கட்டியெழுப்புவதே எமது ஒரே நோக்கமாகும். இன்னொரு யுத்தத்திற்கு இட மளிக்க முடியாது. அவ்வாறான ஒரு நாட்டினை உருவாக்க சகல தரப்பினரும் கைகோர்த்து செயற்படுவோம்.
- நன்றி வீரகேசரி -