இந்தியா - இலங்கை தீர்க்கமான போட்டி இன்று ! சாதனை படைக்குமா இலங்கை ?
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3 ஆவதும் இறுதியுமான போட்டி இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
நடைபெற்று முடிந்த இரு போட்டிகளில் முதல் போட்டியில் திசர பெ ரேரா தலைமையிலான இலங்கை அணி வெற்றி பெற்றதுடன், இரண்டாவது போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது.
விசாகப்பட்டிணத்தின் வை. எஸ். ராஜசேகர ரெட்டி விளையாட்டரங்கில் பகலிரவுப் போட்டியாக நடைபெறும் இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் தொடரொன்றை கைப்பற்றிய முதல் சந்தர்ப்பமாக பதிவாகும்.
எவ்வாறாயினும், சர்வதேச ஒருநாள் தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள இந்திய அணி, அண்மைக்காலமாக விளையாடிவரும் போட்டிகளில் பெரும்பாலும் வெற்றியையே ஈட்டி வருகின்றது.
எனினும், இலங்கை அணி அண்மைக்காலமாக விளையாடி வரும் போட்டிகளில் தொடரொன்றை கூட வெற்றி பெற்றதில்லை. இதில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 5 க்கு 0 என்ற கணக்கிலும்,பங்களாதேஷுக்கு எதிராக 1 க்கு 1 என்ற கணக்கிலும், ஸிம்பாப்வேக்கு எதிராக 3க்கு 2 என்ற கணக்கிலும், பாகிஸ்தானுக்கு எதிராக 5க்கு 0 என்ற கணக்கிலும் போட்டியை நிறைவு செய்திருந்தது.
இதில், இலங்கை தனது சொந்த மண்ணில் ஸிம்பாப்வே, இந்தியா சர்வதேச ஒருநாள் தொடர்களும் உள்ளடங்கும்.
தீர்மானமிக்க இன்றைய போட்டியில் இலங்கை அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்னவுக்குப் பதிலாக மற்றுமொரு இடது கை துடுப்பாட்ட வீரரும் அதிரடித் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படு கிறது. மேலும் அணியில் வேறு சில மாற்றங்களும் நிகழலாம் என எதிர்பார்க்க ப்படுகிறது.