Breaking News

சிவராம் கொலை சூத்திரதாரி வீட்டு சின்னத்தில் போட்டி

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளாகவிருக்கும் துணை இராணுவக் குழுவான புளொட்டின் சார்பில் தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்குப் பிரதேச சபைக்காக ஆறுமுகம் சிறிஸ்கந்தராஜா என்ற முழுப்பெயர் கொண்ட , பாவற்கொடிச்சேனை, உன்னிச்சையை முகவரியாகக் கொண்ட "பீற்றர்" என்பவரும் போட்டியிடுகிறார்.

இவர்தான் 29/04/2005 அன்று கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்துக் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் 'தராகி' என்ற மாமனிதர் திரு.தர்மரட்னம் சிவராம் படுகொலை வழக்கின் முதலாவது சந்தேக நபர்.

அமரர் சிவராமின் உயிரைப்பறித்தது அவர் வரைந்த இம்மடலாகக் கூட இருக்கலாம். அமரர் சிவராமுடன் இறுதியாக நின்றிருந்த "குசல்" என்ற அமரர் சிவராமின் சிங்கள நண்பரின் தகவலின் படி அவரைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது "சில்வர் - கிறே" அல்லது சாம்பல் நிற WP11 என்ற தொடரிலக்கத்தைக் கொண்ட "டொயோட்டா சுவ்" ரக வாகனமாகும்.

சிறிலங்காப் பொலிசாரினால் ஓப்புக்கு நடத்தப்பட்ட விசாரணைகளின் ஒரு கட்டத்தில் அமரர் சிவராம் பயன்படுத்திய கைத்தொலைபேசி இனங்காணப்பட்டது. அதையடிப்படையாக வைத்து 11ஆம் திகதி ஜுன் மாதம் 2005 இல் கொழும்பில் ஒரு அலுவலகத்தைச் சுற்றி வளைத்தனர். அங்கு சந்தேக நபர்களான பீற்றர் என்று அழைக்கப்படும் ஆறுமுகம்_சிறிஸ்கந்தராஜாவையும், வேலாயுதன் நல்லநாதர் என்ற சந்தேக நபர்களைப் பொலிசார் கைது செய்தனர். இவர்களுள் 'பீற்றர்' சிறிஸ்கந்தராஜாவிடமிருந்து அமரர் சிவராமின் "சிம்" கைப்பற்றப்பட்டது. அமரர் சிவராம் கடத்தப்படுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே வாகனமும் நிறுத்தி வைத்திருக்கக் கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த அலுவலகம் வேறெதுவுமல்ல 'புளொட்' தேச விரோத ஒட்டுக் குழுவின் தலைவர் சித்தார்த்தனின் கொழும்புத் தலைமையகமே அது. அந்த வாகனம் வேறு எவரினதுமல்ல சித்தார்த்தனின் தனிப்பட்ட பாவனையிலிருந்த வாகனமே அது. பீற்றரே அப்போதைய 'புளொட்டின்' கொழும்பு அமைப்பாளரும் சித்தார்த்தனின் பிரத்தியேக வாகனச் சாரதியுமாகவிருந்தார். (இப்போதும் இருக்கக் கூடும்)

1980 களின் ஆரம்பத்தில் 'புளொட்' இயக்கத்தில் இணைந்த 'பீற்றர்' 1987இல் மாலைதீவுப் புரட்சியில் கைது செய்யப்பட்டு சிறிலங்கா அரசிடம் ஒப்படைக்கப்பட்டு ஐந்தரை ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு விடுதலையானவர்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சந்தேக நபர்கள் மீது சட்ட மா அதிபரினால் குறறப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 'பீற்றர்' என்ற சிறிஸ்கந்தராஜா பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் அமரர் சிவராம் கடத்தப்பட்ட அன்றைய மாலைநேரத்தில் தமது வாகனத்தை ஒருவர் இரவல் வாங்கியதாகவும் மறுநாள் ஒப்படைக்கப்பட்டதாகவும் அப்போது அந்நபர் தன்னிடம் ஒரு கைத்தொலைபேசியைக் கொடுத்து அதில் உள் வரும் அழைப்புகளை அவதானிக்குமாறு கூறியதாகவும், அது தனக்குக் கடத்தப்பட்ட சிவராமின் கைத்தொலைபேசியெனத் தெரியாது எனவும் குழைத்துத் தீத்தியிருந்தார்.

'புளொட்' தேசவிரோத ஒட்டுக்குழு அரசபணியில் ஈடுபட்டிருந்தமையால் அமரர் சிவராம் கொலை வழக்குக் கிடப்பிலே போடப்பட்டு 'பீற்றர்' எப்போது விடுவிக்கப்பட்டாரென்றே வெளியில் தெரியாத வகையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்தக் கொலையுடன் ஆர்.ஆர். என்று குறியீட்டுப் பெயரால் மாத்திரம் குறிப்பிடப்படும் பெயரறியப்படாத 'புளொட்' உறுப்பினருக்கு முக்கிய சம்பந்தமிருக்கிறது.

நாடுகடந்து வாழ்ந்த சில ஊடகவியலாளர்கள் மேற்குப் பத்திரிகையாளர் அமைப்பொன்றினூடாக தொடர்ந்து குரல் கொடுத்து எடுத்த முயற்சிகள் காரணமாக ஏழு வருடங்களின் பின்னர் 2012 ஜனவரியில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி பி.சுரசேனா முன்னிலையில் சிவராம் கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரண்டு பொலிசார் உட்பட ஆறு சாட்சிகளுள் எவருமே மன்றுக்குச் சமூகமளித்திருக்கவில்லை. வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி சுரசேன 2012ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 25 ஆம் திகதி சகல சாட்சியங்களையும் மன்றில் முன்னிலைப்படுத்துமாறு அரச சட்டத்தரப்பைப் பணித்திருந்தார். இந்த வழக்கு அரசியல் மேலாதிக்கங்களால் கிடப்பிலே இன்று வரை போடப்பட்டுள்ளது.

இப்பொழுது சொல்லுங்கள் தமிழரைக் காப்பாற்றுவதற்கு கடவுளாலும் முடியுமா?

"Learning Politics from Sivaram" என்ற புத்தகத்தை எத்தனை பேர் வாசித்திருக்கிறீர்கள்?

தமிழ்த் தேசியத்தின் வழி செல்கிறோம் எனக் கூறும் எந்த வேடதாரியும் தொட்டிருக்கவே மாட்டார்கள். பேராசிரியர் மார்க் விற்றேக்கர் அவர்களின் சிறந்த ஆய்வு இது. "மக்களுக்குப் படலையில் தட்டி" அரசியல் அறிவூட்ட வேண்டுமென்ற கருத்துக் கொண்டிருந்த அமரர் சிவராமின் அரசியலை கற்றுக் கொள்ள ஒரு பாதையைத் திறக்க உதவும் நூல் இது.

தமிழர்களுடைய பிரச்சினையை Tamilnet ஊடகத்தினூடாக சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்தியதில் தனிமனிதனாக "தராகி" என்ற மாமனிதர் தர்மரட்னம் சிவராம் ஆற்றிய பங்கு தமிழினத்திற்கு ஈடு இணையற்றது.

புகைப்பட இதழியல்(Photo Journalism) என்ற புதுமையைப் புகுத்தி எமது இனம் சார்ந்த செய்திகளை ஒளிப் படங்களின் ஊடாக உலகறியச் செய்ததில் அமரர் சிவராமுக்கு ஈடிணையற்ற பங்குண்டு.

இராணுவத் தொழில் நுட்பத்தை நன்கு விளங்கி வைத்திருந்த அவர் தனது கட்டுரைகளில் பூடகமாகத் தெரிவித்த கருத்துக்கள் உள்வாங்கப்பட்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வெளியுலக ஆலோசகராக இருந்தார் என்பது பலருக்குத் தெரிந்திருக்காது.

கருணாவின் தனிப்பட்ட நலன் சார்ந்த விட்டோடலைப் பிரதேச வாதமாக்கிக் குளிர்காய்ந்தவர்கள் பலரிருக்கிறார்கள். கருணாவின் துரோகப் பிறழ்வின் பின்னர் "கருணாவுக்கு ஓர் பகிரங்க மடல்" என்று ஒரு கடிதத்தினை வீரகேசரியிலே பகிரங்கமாக வரைந்திருந்தார். அம்மடல் முழுமையாக இது எழுதும் போது கிடைக்கவில்லை.

கிழக்கின் மைந்தனான அமரர் சிவராம் ஆரம்ப நாட்களில் வேறு பாதைகளில் பயணித்திருப்பினும் எடுத்துக் கொண்ட ஒரே கொள்கையான தமிழின விடுதலை மீது உயிரினும் மீதான பற்றுக் கொண்டிருந்தார் என்பதைப் பறை சாற்றி நின்றது அந்தப் பதிவு.

ஆனால், அதில் சில வரிகள் இப்படியிருந்தது ஞாபமிருக்கிறது. ஞாபகத்திலிருந்து எழுதுவதால் சில வரிகள் மாறியிருக்கலாம் மன்னிக்கவும்.

"நீங்கள் மாத்திரம்தான் விடுதலைப் புலிகளுள் சில ஆங்கிலப் போர்த்தந்திர நூல்களைக் கற்றுத் தேறியவர் என்று கூறியிருக்கிறீர்கள். முல்லைத்தீவுத் தளத்தைப் புலிகள் தாக்கித் துடைத்தழித்த போது நீங்கள் கிழக்குக் காடுகளில் ஒளிந்து திரிந்ததை மறந்து விட்டீர்களா?"

"ஐயசிக்குறுச் சமர் முறியடிப்புக்காக கிழக்கு மாகாணப் போராளிகளைக் காடுகளூடாக பல மைல் நடந்து நீங்கள் கொண்டு சென்றதைக் குறிப்பிடுகிறீர்கள். ஜெயசிக்குறுச் சமருக்காகச் சிங்களப் படைகள் வன்னிக்கு நகர்த்தப்பட்டமையால் கிழக்கு மாகாணத்தில் பல படை முகாம்கள் மூடப்பட்டுப் பெரும் பிரதேசம் விடுபட்டுப் போனதும் உங்களுக்கு அங்கு போரிட வேண்டிய தேவையற்றுப் போனதையும் ஏன் மறைத்து விட்டீர்கள்"

"கட்டுநாயக விமானப்படைத்தளம் மீது தாக்குதல் நடந்த பின்னர் அதனை விசாரணை செய்யவென இஸ்ரேலிய 'மொசாட்' உளவு நிபுணர்கள் சிறிலங்கா வந்தனர். பத்திரிகைகளில் கேள்விப்பத்திரம் போட்டுத் தகவல் திரட்டி விசாரணை நடத்தினர். இறுதியில் ஒரு சில கோப்புக்களைக் கட்டி சிறி லங்கா படைத்துறைக்கும் அரசுக்கும் பின்வருமாறு கூறினர்"

" சர்வதேசத் தரத்திலே தாக்குதல்களைத் திட்டமிடக் கூடிய ஒரு சிலர் வன்னியில் இருக்கின்றனர். ஆகக் குறைந்தது ஒருவராவது இருக்கிறார் என்றனர். அந்த ஒருவர் அல்லது ஒரு சிலர் யாரென்பது உங்களுக்குத் தெரியுமா?"(கட்டுநாயக விமானப்படைத்தளம் மீதான தாக்குதலில் வேவு, திட்டமிடல், மாதிரி ஒழுங்கமைப்பு, ஆட்தெரிவு, பயிற்சி, ஒருங்கிணைப்பு, அணி நகர்வு, பொருள் நகர்வு, இறுதித் தாக்குதல் வழிநடத்தல் என்பவற்றில் பலர் இரவு பகலாகச் செயற்பட்டிருந்தனர். இதில் ஒரு ஊசி முனையளவு கூடக் கருணாவுக்குத் தெரியாது என்பது அமரர் சிவராமுக்குத் தெளிவாகத் தெரியும்)

"நீங்கள் ஒரு நள்ளிரவு நேரத்தில் தனியாகத் தரவை மாவீரர் துயிலுமில்லத்திற்குச் செல்லுங்கள். அங்கே ஒவ்வொரு கல்லறை முன்னும் சில விநாடிகள் தரித்து நின்று அந்தப் பெயர்களை வாசியுங்கள் பல நினைவுகள் வந்து போகும். அவர்கள் உங்களிடம் கேட்பார்கள்"

"ஏனம்மான் இப்படிச் செய்தீர்கள்....???" என்று.


உசாத்துணை:


http://www.sundaytimes.lk/050619/news/10.html

http://www.thesundayleader.lk/…/a-new-twist-in-sivarams-mu…/

-கமலாம்பிகை ஜெயரத்தினம் -