தமிழரசுக்கட்சியின் ஏகபோக உரிமை! பி.மாணிக்கவாசகம்
தமிழரசுக்கட்சியின் இத்தகைய செயற்பாடானது,
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய அரசியல் கட்சிகளின் அரசியல் செயற்பாட்டு உரிமையையும் அரசியலில் பங்களிப்பு உரிமையையும் அப்பட்டமாக மீறுகின்ற ஓர் உரிமை மீறல் செயற்பாடாகவே காணப்படுகின்றது
ஒரு புறம் சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகின்றது. மறுபுறத்தில் மிகவும் பரபரப்பாக உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலில் மனித உரிமை எவ்வாறு பேணப்படுகின்றது என்பது பற்றியும், நாட்டின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்தும் சிந்திக்கத் தூண்டியிருக்கின்றது.
இத்தகைய சிந்தனையைத் தூண்டுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர், 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி ஐ.நா. மன்றத்தின் பொதுச்சபையில் தீர்மானமாகக் கொண்டு வரப்பட்ட சர்வதேச மனித உரிமைப் பிரகடனமானது அடுத்த வருடம் 70 ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ளது. இந்தக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்களில் இலங்கை உட்பட சர்வதேச நாடுகள் பலவும் மும்முரமாக இப்போதே ஈடுபடத் தொடங்கியிருக்கின்றன.
இந்தப் பின்னணியிலேயே நாட்டினதும், தேர்தலினதும் மனித உரிமை நிலைமைகள் குறித்த சிந்தனை எழுந்துள்ளது.
போர்க்காலத்தில் இறைமையுடைய அரசாங்கமே மனித உரிமைகளை மீறி, போர்க்குற்றங்களை இழைத்திருக்கின்றது என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன், நாட்டில் மனித உரிமைகள் நியாயமான முறையில் மதிக்கப்படவில்லை என்றும், சிறுபான்மை தேசிய இன மக்கள் அடிப்படை மனித உரிமைகளுடன் வாழ்வதற்குரிய சூழல் ஏற்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. குறிப்பாக யுத்த மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிய போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்புக்கூறுகின்ற கடமையை அரசாங்கங்கள் தொடர்ந்து தட்டிக்கழித்து காலத்தை இழுத்தடிக்கும் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
போர்க்காலச் செயற்பாடுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற, ஐ.நா. பிரேரணை மூலமான சர்வதேச அளவிலான அழுத்தங்களுக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்து இணை அனுசரணை வழங்கியுள்ள போதிலும், அதனை நிறைவேற்றுவதில் மந்தகதியான போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.
போருக்குப் பிந்திய காலப்பகுதியிலும் நாட்டில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதற்குரிய சர்வதேச நியமங்களுக்கு அமைவான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் அரசாங்கம் ஆர்வமற்றிருக்கின்றது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
மனித உரிமைகள்
மனிதர்கள் சுதந்திரமாக, கௌரவத்திலும் உரிமைகளிலும் சமமானவர்களாகவே பிறக்கின்றார்கள் என்பது அனைத்துலக மனித உரிமை சாசனத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். சுதந்திரம், கௌரவம், சம உரிமை என்பன பிறப்பிலேயே உறுதி செய்யப்படுகின்றன. எனவே, இவை மனிதரின் பிறப்புரிமையாகும். இந்த பிறப்புரிமையை மீறுவதற்கோ, ஒருவர் மீது மற்றவர் ஆதிக்கம் செலுத்தி உரிமைகளை மீறுவதற்கோ இயற்கையில் எந்த அதிகாரமும் கிடையாது. அத்தகைய அதிகாரத்துடன் செயற்படுவதற்கு எவருக்கும் இயற்கை அங்கீகாரம் வழங்கவில்லை. அவ்வாறு செயற்படுவது இயற்கைக்கும் இயற்கை நீதிக்கும் முரணானது, எதிரானது என்பதே மனித உரிமை சாசனத்தின் அடிப்படை நிலைப்பாடாகும்.
நாம் அனைவரும் சுதந்திரமாகவும் உரிமைகளில் சமமாகவும் பிறக்கிறோம். இன, நிற, பால், மொழி, சமய, அரசியல் கருத்து, தேசியம், சொத்து, பிறப்பு என்பவற்றில் பாகுபாடு காட்டப்படக் கூடாது. எவரும் அடிமை இல்லை எவரும் சித்திரவதைக்கு உட்படலாகாது.
சட்டத்தின்முன் அனைவருக்கும் சமவுரிமை. நியாயமற்று எவரையும் தடுத்து வைக்கமுடியாது. நீதியான வழக்குக்கான உரிமை. குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி. நடமாடும் சுதந்திரம். துன்புறுத்தலிலிருந்து புகலிட உரிமை. தேசியத்துக்கான உரிமை சிந்தனை சுதந்திரம்.
உள்ளுணர்வு சுதந்திரம், சமயச் சுதந்திரம். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம். மக்களாட்சி உரிமை. சமூக பாதுகாப்பு உரிமை. தொழிலாளர் உரிமைகள். கல்விக்கான உரிமை. பண்பாட்டு பங்களிப்பு உரிமை, ஆக்கவுரிமை.நியாயமான விடுதலை பெற்ற உலகு. மனித உரிமைகளை எவரும் பறிக்க முடியாது என்ற, மனித உரிமை சாசனத்தின் முக்கிய உறுப்புரைகளை மீறுவதற்கு எவருக்கும் உரிமையோ அதிகாரமோ கிடையாது.
உலகின் அதி முக்கிய ஆவணமாக மதிக்கப்படுகின்ற மனித உரிமை சாசனம் 500க்கும் மேற்பட்ட மொழிகளில் உரைபெயர்க்கப்பட்டிருக்கின்றது. உலகின் அநேகமாக அனைத்து நாடுகளினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமை சாசனத்தின் உறுப்புரைகள் அவற்றின் அரசியலமைப்புக்களில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இந்த நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றங்களிலும், பேரவைகள் மற்றும் பாராளுமன்றங்கள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட தரப்பினரால் அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் நீதியை நிலைநிறுத்துவதற்கும் நியாயம் பெறுவதற்கும் இந்த உறுப்புரைகள் மேற்கோள் காட்டப்பட்டு அவற்றின் அடிப்படையில் வாதிடப்படுகின்றன.
இருப்பினும் இலங்கையில் மனித உரிமை சாசனத்தின் உறுப்புரைகள் உரிய முறையில் மதிக்கப்படுவதில்லை. நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுவதுமில்லை என்பது கவலைக்குரியது. இதன் காரணமாகவே மனித உரிமை நிலைமைகள் இங்கு இன்னும் மேம்படுத்தப்படவில்லை என்று சர்வதேச அளவில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களினாலும், மனித உரிமை அமைப்புக்களினாலும் குற்றம் சுமத்தப்படுகின்றது.
நீக்கப்பட வேண்டிய பயங்கரவாதத் தடைச்சட்டம்
தனிநாடு கோரி, அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி அவர்களை வலுவிழக்கச் செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் மிக மோசமான அளவில் மனித உரிமைகளை மீறுவதற்கு வழிசமைத்திருந்தது.
சந்தேகத்தின் பேரில் ஆட்களைக் கைது செய்வதற்கும் கைது செய்யப்பட்டவரை விசாரணை செய்வதற்காக நீண்டகாலம் சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் வழி வகுத்திருக்கின்றது. இந்தச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் சிறைச்சாலைகளில் உரிய விசாரணைகள் இல்லாமலும், வழக்கு தாக்கல் செய்யப்படாமலும் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்படுகின்ற வழக்குகளில் அளிக்கப்படுகின்ற தீர்ப்பில் குற்றவாளிகளாகக் காணப்படும்போது, அவர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த வருடக்கணக்கான காலப்பகுதி கணக்கில் எடுக்கப்படுவதில்லை. குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையில் தண்டனை தீர்ப்பு வழங்கப்படும் வரையில் அவர்கள் சிறைச்சாலைகளில் இருந்த காலப்பகுதி தண்டனைக் காலமாக நீதிமன்றங்களில் கருதப்படுவதில்லை. அதற்கு மேலதிகமாகவே தீர்ப்பில் அளிக்கப்படுகின்ற சிறைத் தண்டனையையும் அவர்கள் அனுபவிக்க நேரிடுகின்றது. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாக இருந்த போதிலும், அதுகுறித்து மனித உரிமை சாசனத்தின் உறுப்புரிமைகளை நடைமுறைப்படுத்துவதாக ஒப்புக்கொண்டு உறுதியளித்துள்ள அரசாங்கமோ அல்லது நீதிமன்றங்களோ கவனம் செலுத்துவதில்லை.
அத்துடன் வழக்குத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் நடத்தப்படுகின்ற விசாரணைகளின்போது சந்தேக நபர்கள் அளிக்கின்ற ஒப்புதல் வாக்குமூலத்தையே முக்கியமான சாட்சியமாகக் கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்ற வழக்குகளில், தீர்ப்புக்கள் அளிக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. விசாரணையின்போது அளிக்கின்ற வாக்குமூலமே, ஒப்புதல் வாக்குமூலமாக, தனக்கு எதிரான சாட்சியமாகப் பயன்படுத்தப்படும் என்ற நடைமுறையைத் தெரிந்து கொண்டு எவரும் இயல்பாக சாட்சியமளிப்பதில்லை. குற்றம் சுமத்துவதற்கு ஏதுவான வகையில் அச்சுறுத்தியும், சித்திரவதை செய்துமே ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படுகின்றது என்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.
இதுபோன்ற பல காரணங்களுக்காக மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் மீறுவதற்குரிய அதிகாரங்களை வழங்கியுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையகமும், மனித உரிமைப் பேரவையும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் சர்வதேச நாடுகளும் வலியுறுத்தியிருக்கின்றன.
இலங்கை அரசாங்கம் கூறியதைப் போன்று, பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை, நீக்க வேண்டும். அதற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற வகையில் புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. உரிமை மீறல் விடயங்களில் பொறுப்புக்கூறும் நடவடிக்கையின் ஓர் அம்சமாக இதனைச் செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழக்குகள்
பயங்கரவாதத் தடைச்சட்டம் இப்போது நடைமுறையில் இல்லை. அதனைச் செயற்படுத்துவதில்லை என்று அரசாங்கம் கூறுகின்றபோதிலும், முன்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்குகளில், பயங்கரவாதத் தடைச்சட்ட விதிகளின் கீழேயே குற்றஞ்சுமத்தப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்படுகின்றது. அந்தச் சட்டத்திற்கு அமைவாகவே தீர்ப்புக்களும் வழங்கப்படுகின்றன.
இந்த வகையிலேயே, அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கொன்றில் முன்னாள் விடுதலைப்புலிகள் 7 பேருக்கு தலா 56 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வில்பத்து பகுதியில் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 7 சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்த கெப் வாகனம் ஒன்றின் மீது கிளேமோர் தாக்குதல் நடத்தி, அவர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தி இந்த 7 பேருக்கும் எதிராக தலா 8 குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் 7 ஆண்டுகள் வீதம் ஒவ்வொருவருக்கும் 56 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் தீர்ப்பளித்துள்ளார். இந்த சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிப்பதற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களும் 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு கடந்த 6 வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைகளை மீறுகின்ற பயங்கரவாதத் தடைச்சட்டம் மட்டுமல்லாமல், குற்றச்செயல்கள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்கள் விசாரணைகளின்போது மோசமான மனித உரிமை மீறல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
விசாரணைகளின்றி நீண்டகாலமாக, அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, யுத்தத்தினால் இடம்பெயர்ந்து சென்றவர்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாத வகையில் காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை, இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளமை, சந்தேகத்தின் பேரில், சட்ட ரீதியாகக் கைது செய்யப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் மனித உரிமைகளும், அடிப்படை உரிமைகளும் மீறப்பட்டிருப்பதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. ஆயினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை உரிய ஆதாரங்களுடன் அரசாங்கத்தினால் மறுத்துரைக்க முடியவில்லை.
தேர்தலிலும் உரிமை மீறல்கள்......?
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காக அவைகள் பின்போடப்பட்டிருந்தன. உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படாமையானது ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். பொதுமக்களுடைய வாக்குரிமையை மறுக்கின்ற செயற்பாடாகும். இது ஜனநாயக உரிமை மீறல் மட்டுமல்ல அடிப்படை மனித உரிமை மீறலுமாகும். இந்த உரிமை மீறல் தொடர்பாக பல ஜனநாயக அமைப்புக்கள் தமது எதிர்ப்பை ஏற்கனவே வெளியிட்டிருந்தன. தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் அரசாங்கத்தின் மீது பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தன. இத்தகைய பின்னணியிலேயே முதலில் 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பின்னர் ஏனைய மன்றங்களுக்குமான தேர்தலுக்குரிய வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டிருக்கின்றது. அந்த வகையில் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
அரசாங்கம் பல்வேறு வழிகளில் மனித உரிமை மீறல்களிலும், அடிப்படை உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் தேர்தலையொட்டி ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளில் தேர்தல் ரீதியாக உரிமைகள் மீறப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் தற்போது எஞ்சியுள்ள மூன்று பங்காளிக் கட்சிகள் மத்தியில் ஆசனப்பங்கீடு தொடர்பில் பிணக்குகள் ஏற்பட்டிருந்தன. கூட்டமைப்பின் தலைமைக்கட்சியாகிய தமிழரசுக்கட்சி தனக்கு ஏற்ற வகையில் தொகுதிப் பங்கீடுகளைச் செய்து ஏனைய கட்சிகளின் விருப்பத்தையும் கோரிக்கைகளையும் புறந்தள்ளியிருந்தது. இதனால் டெலோ மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்சிகளும் மனக்கசப்புற்று கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை மேற்கொள்ள நேர்ந்திருந்தது.
நாளை தொடரும்....