மனித குலத்துக்கு எதிராக இராணுவம் செயற்படவில்லையாம் - இராணுவத்தளபதி!
மனித குலத்துக்கு எதிரான போரை இலங்கை இராணுவம் செய்யவில்லை என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. இராணுவம் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு களுக்குப் போதிய சாட்சிகள் இல்லை.
குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுமாக இருந்தாலும் விசாரணைகளுக்கு முகம்கொடுக்க நாங்கள் தயாராகவே உள்ளோம்.
என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்......
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் ஈடுபட்ட மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. இராணுவத்தினர் சில குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
அவற்றுக்குப் பயப்படத் தேவையில்லை.
தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் அந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது எமது கடமை.
விசாரணைகளுக்கு முகம்கொடுக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். குற்றங்களை ஒழித்து மறைத்து வைக்க வேண்டிய தேவை எமக்கில்லை. போர்க்குற்றங்கள் நடைபெறாததன் காரணமாகவே நான் இந்த உறுதிமொழிகளை வழங்குகின்றேன்.
எந்தவொரு விசாரணை நடைபெற வேண்டுமொயினும் அதனை அரசியல் தலைமைகளே தீர்மானிக்க வேண்டும். எனினும் பன்னாட்டுத் தலையீடுகளுக்கு அனுமதியளிக்க முடியாது.
உள்நாட்டில் அதற்கான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. விசாரணைகள் நடைபெற்றால் முழுமையான ஆதரவு வழங்குவோம். மனிதப் படுகொலையாளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான வேறுபாடுகளை அறிந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.