கூட்டு அரசின் உடன்படிக்கையை புதுப்பிப்பது தொடர்பில் தேர்தலின் பின் தீர்வாம் !
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரண்டு ஆண்டுகள் கூட்டு அரசில் பயணிக்கச் சிறிலங்கா சுதந்திரக்கட்சி 2015ஆம் ஆண்டு செய்துகொண்ட உடன்படி க்கை எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், உட ன்படிக்கையை புதுப்பிக்கும் செயற்பாட்டை உள்ளூராட்சித் தேர்தல் முடிவடையும் வரை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சுதந்திரக் கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் தெரிவித்துள்ளன.
2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியின் தரப்பும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கூட்டு அரசை நியமித்தன.
அதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்றிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் எக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாதமையால் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் இணைந்து கூட்டு அரசை உருவாக்கியிருந்தன.
இந்த உடன்படிக்கை எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகுவதால் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் முயற்சிகளில் இருதரப்புப் பேச்சுக்கள் முன்னெடு க்கப்பட்டுள்ளன.
பிணைமுறி விவகாரம் மற்றும் இரு கட்சிகளுக்கிடையே அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கருத்து ஒருமைப்பாடின்மை உள்ளிட்ட சில காரணங்களால் மீண்டும் கூட்டு அரசை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பும், சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பும் கூட்டு அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கின.
இவ்வாறான சூழலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலும் நெருங்கியுள்ளதால் இப் பிரச்சினையைத் தேர்தலுக்குப் பின் தீர்வுகாண சுதந்திரக் கட்சியின் மத்திய அலுவலகம் முடிவெடுத்துள்ளது.