கேப்பாப்பிலவு மக்களின் 111 ஏக்கர் காணிகளை கையளிப்பதற்கு ஏற்பாடு !
கேப்பாபிலவு மக்களுக்குச் சொந்தமான 111 ஏக்கர் காணிகள் எதிர்வரும் 28ஆம் திகதி விடுவிக்கப்படுமென மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலர் செ. பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி மேலும் தெரிவி க்கையில்,
முல்லைத்தீவு, கேப்பாபிலவு மக்கள் 287ஆவது நாளாக நேற்றும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் மக்களுக்குச் சொந்தமான 111ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்ப ட்டுள்ளதாக தகவல் மையங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 28ஆம் திகதி மாவட்டச் செயலர் மற்றும் 59ஆவது படைத்தளபதி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கு ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை கேப்பாபுலவு ஊடான புதுக்குடியிருப்பு வீதி சீரமைப்புச் செய்யப்பட்டும் தற்போது திறந்து விடப்படாமல் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இது குறித்து மக்கள் தெரிவிக்கையில்,
இந்த வீதி திருத்தப்பணிகள் செய்தபோது வீதியினை மக்கள் பாவனைக்கு விடுவதற்கு படையினர் உடன்பட்டார்கள்.
ஆனால் இதுவரை மக்கள் பாவனைக்கு விடப்படவில்லை. இவர்கள் காணியினை விடுவிப்பது மட்டுமல்ல 138 குடும்பங்களையும் இங்கு மீள்குடியேற்ற வேண்டும்.
எங்கள் காணிகளை படையினர் அபகரித்து கட்டடங்கள் கட்டியுள்ளார்கள்.
தற்போது அந்த கட்டடங்கள் அகற்றப்பட்டுள்ளன. எங்கள் வளங்களை அழித்த நிலையில் ஒன்றுமே இல்லாத நிலையில்தான் எங்கள் காணிகளை படையினர் விடுவிக்கவுள்ளார்கள்.
படையினரின் முகாமுக்குள் வேலைக்கு செல்பவர்கள் ஊடாக எங்கள் காணிகளில் என்ன இருக்கின்றதென விசாரிக்கின்றோம். அவர்கள் அங்கு எதுவு மில்லையெனத் தெரிவித்துள்ளார்கள்.