570 மாணவர்களுக்கு வகுப்புத் தடை : 37 பேருக்கு வழக்கு
நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 570 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதி க்கப்பட்டுள்ளது.
மேலும் 37 மாணவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் இருவரின் தகுதி நிலை இரத்து செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலை கள் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புத்திக பத்திரண எம்.பி. கேள்வி எழுப்பும் போது,
2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களில்
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் ?
நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட மாணவர்கள் எத்தனை பேர்?
வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் எத்தனை பேர் என்றார்.
இந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும் போது, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 570 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 37 மாணவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் இருவரின் தகுதிநிலை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் 193 பேரும், பேராதனையில் 105பேரும், சப்ரகமுவவில் 83 பேரும், மொரட்டுவையில் 47 பேரும், ருஹுணு 43 பேரும் கிழக்கில் 31 பேரும், தென்கிழக்கில் 12 பேரும், இலங்கை பெளத்த, பாளி பல்கலைக்கழகத்தில் 15 பேரும், களனியில் 11 பேரும், யாழில் 9 பேரும், இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தில் 10 பேரும், கொழும்பில் 8 பேரும், சுதேச மருத்துவ கற்கை நிறுவகத்தில் ஒருவரும் , கம்பஹா விக்கிரமாரச்சி ஆயுள்வேத கற்கை நிறுவகத்தில் 2 பேருமாக மொத்தம் 570 பேர் வகுப்பு தடைக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன் இக் காலப்பகுதியில் ரஜரட்ட, ஊவா வெல்லஸ்ஸ, சுவாமி விபுலானந்தா அழகியற்கலை நிறுவகம், கொழும்பு பல்கலைக்கழக கணினிக் கற்கை நிறுவகம் ஆகியவற்றில் எந்தவொரு மாணவர்களும் வகுப்பு தடைக்கு உள்ளாகவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.