தேசிய பிரச்சினை உள்நாட்டில் தீர்க்கப்படாதுவிடின் பன்னாட்டு அழுத்தமாம் – சம்பந்தன்!
தேசிய பிரச்சினையானது உள்நாட்டில் தீர்க்கப்படாவிட்டால் இலங்கை மீதான பன்னாட்டு அழுத்தம் மேலும் மோசமடைவதைத் தவிர்க்க முடியாது.’’ என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
அரசமைப்பு நிர்ணய சபையில் நேற்று நடைபெற்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே சம்பந்தன் இந்த எச்சரிக்கையை கடுந்தொனியில் விடுத்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது: நாட்டின் உயர்ந்த சட்டமான அரசமைப்பானது நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படவேண்டியிருப்பதுடன், சகலரது உரிமைகளையும் உறுதிப்படுத்துவதாகவும் அது அமையவேண்டும்.
மக்களின் இறைமையானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாக இருக்கவேண்டும். இந்தச் செயற்பாடுகளில் சகல தரப்பினரும் உள்வாங்கப்படவேண்டும்.
பிரிக்கப்படாத நாடு சகலருக்கும் உரித்தானது என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கவேண்டும்.
நாடு அபிவிருத்தியை நோக்கிச் செல்லக்கூடியதாகவும், நாட்டை அமைதியானதாக பேணக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.
சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் ஒற்றுமையான நாடாக உள்ளது என்ற அடிப்படையில் உலகத் தரத்தைப் பேணுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த முயற்சிகளை எவராவது குழப்புவார்களாயின் அது நாட்டுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். அவ்வாறானவர்கள் தேசிய நலனுக்காகவன்றி தனிப்பட்ட எதிர்கால அரசியல் நோக்கத்துக்காகக் குழப்பம் விளைவிப்பவர்களாகவே இருப்பார்கள்.
இலங்கையானது பல்லின சமூகத்தைக் கொண்ட நாடாகும். இவ்வாறான சூழ்நிலையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் பிரிக்கப்படாத நாட்டுக்குள் ஜனநாயகம், உரிமை, சகவாழ்வு மற்றும் ஒற்றுமை என்பவற்றை பலப்படுத்துவதாக அமைந்திருக்கவேண்டும்.
ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை என்பன ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ள விடயங்களாகும். ஒன்றோடு ஒன்றைப் பலப்படுத்தும் வகையில் இவை அமைக்கப்படவேண்டும்.
சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கு இவை இரண்டும் பலப்படுவது அவசியமானதாகும்.
இவற்றின் ஊடாகவே பிரிக்கப்படாத நாட்டை உறுதிப்படுத்த முடியும். இதுவே சகல செயற்பாட்டினதும் அடித்தளமாகும்.
அதிகாரப் பகிர்வின் கீழ் மூன்று மட்டங்கள் உள்ளன.
முதலாவது தேசிய மட்டம், இரண்டாவது மாகாண மட்டம், மூன்றாவது உள்ளூராட்சி மட்டம். இந்த மூன்று மட்டங்களிலும் அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்படவேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும்.
நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கம் என்பன ஈடுசெய்யக்கூடிய வகையில் பகிரக்கூடியதாக இருக்கவேண்டும். அதிகாரப் பகிர்வு என்பது எந்தவொரு காரணத்துக்காகவும் குறைத்து மதிப்பிடப்படுவதாகவோ அல்லது மீளப்பெறக்கூடியதாகவோ இருக்கக்கூடாது.
ஏதாவது சிறப்புக் காரணங்களுக்காக குறிப்பிட்ட அரசமைப்புத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால் மாத்திரம் மாற்றங்கள் செய்வதாக இருக்கவேண்டும். அதிகாரப் பகிர்வு என்பது நீண்டகாலம் நிலைத்திருப்பதையும் அது உண்மையானது என்பதையும் உறுதிப்படுத்தும் ஏற்பாடுகள் நாடு முழுவதும் இருக்கவேண்டும்.
தற்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த அரசமைப்பு உருவாக்கப் பணிகள், முன்னாள் அரச தலை வரான சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றன.
25 வருடங்களாகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இரு முக்கிய கட்சிகளுக்கிகும் இடையில் தேசிய பிரச்சினை விடயத்தில் இணக்கப்பாடு ஏற்படாமையால் இழுபறிகள் காணப்பட்டு வந்தன.
போர் என்ற பெரும் தடை நீங்கியுள்ள சூழலில் நாம் தற்போது இருக்கின்றோம். போர் முடிவடைந்து 8 வருடங்கள் முழுமையடைந்துள்ளபோதிலும், போர் ஏற்பட்டமைக்கான காரணங்கள் இன்னமும் நிவர்த்திசெய்யப்படவில்லை.
போர் முடிவடைந்த பின்னரும் நேர்மையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாமலிருப்பது துரதிர்ஷ்டவசமானது. மூன்று அரச தலைவர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் கவனத்தில் கொள்ளப்படாது போர் தொடர்ந்தமை கவலைக்குரியது.
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டி போர் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்னமும் அவை தீர்க்கப்படாதிருப்பது துரதிர்ஷ்டவசமானதாகும்.
எமது நடவடிக்கைகள் உலக நாடுகளால் அவதானிக்கப்பட்டு வருகின்றன என்பதை உணர்ந்துகொள்ளவேண்டியது இங்கு முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.
ஜனநாயகம் என்பது நாட்டில் உயர்வானதாக இருக்கவேண்டும்.
நிர்வாகக் கட்டமைப்புகள் அதற்கேற்ற வகையில் அமைக்கப்படவேண்டும். நாட்டிலுள்ள சகலருடைய ஜனநாயகமும் மேம்படுத்தப்படவேண்டும்.
இவற்றின் அடிப்படையில்தான் இந்த அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம்.
எமது நாட்டின் மீதான உலக அழுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் என நாம் விரும்புகின்றோம்.
எமது பிரச்சினைகள் உள்நாட்டிலேயே தீர்க்கப்படவேண்டும் என விரும்புகின்றோம்.
பிரச்சினையை உள்நாட்டில் தீர்க்காவிட்டால் உலகின் அழுத்தம் மோசமடையும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
இது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும். புதிய அரசமைப்பை தயாரிப்பதாயின் பொதுவான விடயங்களில் தேசிய இணக்கப்பாடு அவசியமானது.
அதிகபட்சம் சாத்தியமான ஒருமித்த கருத்துகளுடன் புதிய அரசமைப்பை தயாரிக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அது பொதுமக்களின் கருத்துகளையும் உள்ளடக்கியதாக அமையவேண்டும்.
போரால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்பேசும் மக்கள் அதியுச்ச அதிகாரங்களைப் பகிரக்கூடிய தீர்வொன்றை எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, கூட்டாட்சி (சமஷ்டி) அடிப்படையிலான அதிகாரப் பகிர்வொன்றை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் பெடரல் கட்சியால் முன்வைக்கப்பட்ட யோசனை வடக்கு, கிழக்கு மக்களால் 1956ஆம் ஆண்டே தோற்கடிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் வன்முறைகள் அதிகரித்தன.
விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்புப் பெறப்பட்டது.
போர் முடிவடைந்த பின்னர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று முன்வைக்கப்படவேண்டும் என்பதை அரசே உலக நாடுகளுக்குத் தெரிவித்திருந்தது.
ஆகவே, அவ்வாறான தீர்வொன்றை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது கட்டாயமாகும்.
உலகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்.பன்னாட்டு மட்டத்தில் இலங்கை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இந்த நிலைமை மோசமடையக்கூடாது.
எனவே, தேசிய பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் அரசமைப்பு தயாரிக்கப்பட்டு, மக்களின் அங்கீகாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் – என்றார்.