Breaking News

சந்திரிகாவுக்கு முதலமைச்சர் அவசர கடிதம்



அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை அனுராதபுர நீதிமன்றத்தில் இருந்து வவுனியாவுக்கு மாற்றுவதற்கு உதவுமாறு கோரி, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “மிகவும் பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகின்றேன்.

தாங்கள் எமது நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் பாரிய பணியை ஏற்றிருக்கின்றீர்கள். அதனால் தாங்கள் அனுராதபுர சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் சிறைக்கைதிகளின் பரிதாபகரமான நிலையை விரைவில் கவனத்தில் கொள்வது பொருத்தமானதே.

அரசாங்கம் இம் மூவரின் வழக்கை வவுனியாவிலிருந்து, அனுராதபுரத்திற்கு மாற்றியது வழக்கின் சாட்சிகளுக்கு பாதுகாப்பளிப்பதற்கல்ல என்பது போல் தெரிகிறது.

சாட்சியாளர்கள் வெளிநாடு சென்றுவிட்டார்கள் என்றும் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியவில்லையென்பதே உண்மையென அறிய வருகின்றது.

அவர்கள் இருக்குமிடம் தெரிந்திருந்தால் கூட அரசு அவர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அவர்களின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மட்டுமே சிறையில் உள்ளவர்களை குற்றவாளிகளாகக் காண்பதே அரச தரப்பாரின் நோக்கமெனத் தெரிகிறது.

நான் உயர் நீதிமன்றத்தில் நீதியரசராக இருக்கையில் ‘நாகமணி’ வழக்கில் கொடுத்த தீர்ப்பு எல்லோரும் அறிந்ததே. அதனை உதாரணமாக வைத்து பல நீதிமன்றங்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்ட சம்பவம் இடம்பெற்றதை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவாக இன்னொரு அனுசரணைச் சாட்சியத்தை வலியுறுத்தியிருந்தார்கள்.

நான் அந்த வழக்கில் குறிப்பிட்டதாவது தனியே ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் வேறு ஒரு அனுசரணைச் சாட்சியமின்றி ஒருவரைக் குற்றவாளியாகக் காண்பது சரியான தீர்ப்பாக இருக்க முடியாதென்பதே.

உதாரணத்திற்கு ‘ஓ’ என்னும் ஒருவரை தான் கொன்றுவிட்டதாக ஒருவர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள போது ‘ஓ’ என்பவர் உயிருடன் இருந்தால் எப்படியிருக்கும்?

மட்டக்களப்பில் ஒரு இராணுவ முகாமை தாக்கியழித்து விட்டதாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கப்பட்டது. ஆனால் இராணுவம் அப்படியெதுவும் இடம்பெறவில்லை என சாட்சியம் அளித்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பொய்யாக்கியது.

அனுராதபுரம், பொலன்னறுவ போன்ற சில நீதிமன்றங்கள் எனது தீர்ப்பிற்கான காரண முடிவை ஏற்க மறுத்துள்ளன. கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் பல நீதிமன்றங்கள் ஒரு விதத்திலான சுதந்திரமான அனுசரணைச் சாட்சியங்கள் மூலம் நடைபெற்ற சம்பவங்களை உறுதிப்படுத்தக் கோரியுள்ளனர்.

அரசுக்கு இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்போரை அரசியல் காரணங்களுக்காக குற்றவாளிகளாகக் காண வேண்டிய தேவை இருப்பது போல் தெரிகிறது.

விசாரணை ஆரம்பமாக முன்னரே ருவான் விஜேவர்த்தன உண்ணாவிரதமிருக்கும் சிறைக்கைதிகளை விடுதலைப்புலிகள் என முத்திரை குத்திவிட்டார்.

சிறைக்கைதிகள் தாங்கள் விடுதலைப்புலிகளுடன் எந்தவிதமான தொடர்புகளும் அற்றவர்கள் எனக் கூறியதாக எனக்கு சொல்லப்பட்டது.

ஆனபடியால் அவர்களை யாரென அடையாளப்படுத்த முன் நாங்கள் பொறுமையுடன் நீதிமன்ற விசாரணையை எதிர்பார்த்திருத்தல் வேண்டும்.

விசாரணைக்கு முன்னரே ருவான் விஜயவர்த்தன விடுதலைப்புலிகள் என அவர்களைக் குறிப்பிட்டமை அவருடைய கண்ணியமற்ற பொறுப்பற்றதனத்தையே காட்டுகிறது.

எப்படியிருப்பினும் சாட்சிகளின் நன்மைக்காக மட்டும் வழக்குகளை ஒரு நீதிமன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றுதல் நியாயமானதல்ல.

சாட்சிகளை பாதுகாப்பது அரசின் கடமை. வட மாகாணத்தில் 150,000 இராணுவத்தினர் உள்ளனர். இவ் வழக்கின் சாட்சிகளை அவர்களின் பாதுகாப்பிற்காக வவுனியாவிலிருந்து, அனுராதபுரத்திற்கு மாற்றுவதென்பது வேடிக்கையானது.

இவ்வளவு எண்ணிக்கையான இராணுவத்தாலும் பொலிஸாரினாலும் இவர்களுக்கு போதுமான பாதுகாப்பை அளித்திருக்க முடியும்.

நான் அறிந்த அளவில் மூன்று சாட்சியாளர்களில் எவரும் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டதாகவோ அல்லது அவர்கள் இலங்கையில் இப்பொழுது இருப்பதாகவோ தெரியவில்லை.

சாட்சியாளர்கள் சட்டமா அதிபரிடமிருந்து பாதுகாப்புக் கோரியிருந்தால் அப்படியாகப் பெற்றுக் கொண்ட ஆவணத்தின் வகையை சட்டமாஅதிபர் பகிரங்கமாக வெளியிடவேண்டும்.

ஆகவே வழக்கை அனுராதபுரத்திற்கு மாற்றியமையானது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டும் குற்றவாளிகளாகக் காணும் அரசியல் நோக்கமேயன்றி வேறெதுவும் இல்லை என்று தெரிகிறது.

அனுராதபுர மேல் நீதிமன்றம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்தே பலரைக் குற்றவாளிகளாகக் கண்டிருக்கிறது.

உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் பரிதாபகரமான நிலையானது எந்தளவுக்கு வடக்கு -கிழக்கு மக்களின் மனங்களைப் பாதித்திருக்கின்றதென்பதை தாங்கள் இதுவரையில் உணர்ந்திருப்பீர்களென நினைக்கிறேன்.

அதிபரின் யாழ்ப்பாண பயணத்துக்கு முதல் நாள் எவ்வாறு வடபகுதியின் அன்றாட வாழ்க்கை முடங்கியிருந்தது என்பதை அறிந்திருப்பீர்களென நினைக்கிறேன்.

இவ்வாறான சூழ்நிலையில் தாங்கள் இவ் விடயத்தில் இவர்களின் வழக்குகளை கைதிகளை வவுனியாவிற்குத் திருப்பி அனுப்புவதற்கு அல்லது யாழ்ப்பாண மேல் நீதிமன்றிற்கு மாற்றுவதற்கு உதவுவீர்களென நம்புகிறேன்.

இக்கஷ்டமான காலகட்டத்தில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் அவலநிலையை உணர்ந்து தாங்கள் தலையிடுதல் மூலம் எங்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்ப உதவுவீர்கள் என நினைக்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.