Breaking News

தமிழர்கள் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை -சிறிதரன்



“வடக்கு - கிழக்கு இணைவதால் நாடு பிளவுபடும், தமிழர்கள் தனிநாடாகச் சென்றுவிடுவார்கள் என நினைக்காதீர்கள். தமிழ் மக்கள், தனித்துவமான இறையாண்மையின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு இணைந்ததான சமஷ்டித் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றார்கள். பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆயுதம் தூக்குவோமெனக் கூறமாட்டோம். எனினும், எதுவும் நடக்காது என்றில்லை” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

புதிய அரசமைப்புக்கான, அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவால் நாடாளுமன்றத்துக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம், நேற்று (31) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

“இந்த நாட்டில் புரையோடிப்போயிருந்த இன முரண்பாடு காரணமாக, இலட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து, பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கானோர், குடும்பங்களைப் பிரிந்து வாழ்கிறார்கள். நீண்ட காலமாகக் காணப்படும் இன முரண்பாடுகளைத் தீர்க்க முடியாததன் காரணமாக, நாட்டில் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டது” என்றும் அவர் குறிப்பிட்டார். 

“சமஷ்டி தொடர்பில் பல்வேறு தரப்பினரும், இதற்கு முன்னரும் முன்மொழிந்திருந்தார்கள். ஆனால், அது தவறான வழியாகக் கையாண்டதன் காரணமாக, தீர்வை நோக்கிப் பயணிக்க முடியவில்லை. 13ஆவது திருத்தத்தின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வு முன்வைக்கப்படவில்லை என்பதை, விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

“தற்போது 40 வருடங்களின் பின்னர், அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அல்லது புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை காலமும் அரசமைப்பு ஒன்று தயாரிக்கப்படும்போது, தமிழ்த் தரப்பினரின் கருத்துகள் பெறப்படவில்லை. முதன்முறையாக தமிழர்களின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. இலங்கையில், ஓர் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு, ஆளும் தரப்பினருடன் இணைந்து, மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

“இந்த நாட்டில் 70 ஆண்டுகளுக்கு மேலாக புரையோடிப்போயுள்ள தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே, காலத்தின் தேவையாகும்” என்று அவர் வலியுறுத்தினார். 

தொடர்ந்து அவர், “வடக்கும் கிழக்கும் இணைவதால் நாடு பிளவுபடும், தமிழர்கள் தனிநாடாகச் சென்றுவிடுவார்கள் என நினைக்காதீர்கள். தமிழர்கள் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை. தமிழர்கள், பல்வேறு காலங்களில் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள்.

“அவற்றின் ஊடாக தமது சொந்த நிலத்தில், தமது பண்பாடுகளைப் பேணிக்கொண்டு தமது விவசாயம், தமது மொழி, தமது மக்களுடன் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றே கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். 

“நாங்கள், எங்களுடைய நிலத்தில், உங்களோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றே கேட்கிறோம். தமிழ் மக்களிடையே இன்னும் நம்பிக்கை வரவில்லை. நாட்டில் நாமும் சமமானவர்கள் என்பதை, தமிழர்கள் உணர வேண்டும். சரியான ஆட்சிமுறை தமிழர்களுக்குக் கையளிக்கப்படுமானால் அவர்கள் உரிமையுடன் வாழ்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும்” என்றார்.