Breaking News

அரியாலை கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, வாகனங்கள் மீட்பு



அரியாலை கிழக்கு – மணியம்தோட்டம், உதயபுரம் பகுதியில், இளைஞன் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, உந்துருளி, முச்சக்கர வண்டி ஆகியன, யாழ். பண்ணையில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாமில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 22ஆம் நாள் உதயபுரம், கடற்கரை வீதிச் சந்தியில், டொன் பொஸ்கோ ரிச்மன் என்ற இளைஞன், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலலப்பட்டார்.

இதையடுத்து. நடத்தப்பட்ட விசாரணைகளில், கொலைக்கு முன்னதாக அந்த வீதியால் பயணித்த உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன தொடர்பான காணொளிப்பதிவு காட்சிகள் கிடைத்தன.

இதன் அடிப்படையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் இந்த விசாரணைகளை காவல்துறை மா அதிபர் ஒப்படைத்திருந்தார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் விரைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டி தொடர்பாக நடத்திய விசாரணைகளில் அவையிரண்டும் சிறப்பு அதிரடிப்படையினரின் பயன்பாட்டில் இருந்தமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து. நேற்றுமுன்தினம் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்றிரவு பண்ணையில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாமுக்குள் நுழைந்து தேடுதல் நடத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி, உந்துருளி, முச்சக்கரவண்டி ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

எனினும், இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை.